கச்சதீவில் இலங்கை – இந்தியக் கடற்றொழிலாளர்கள் நல்லெண்ணச் சந்திப்பு – அமைச்சர் டக்ளஸின் முயற்சியில் உணர்வுகள் பகிரப்பட்டன.

Friday, March 11th, 2022


……….

கச்சதீவு அந்தோணியார் ஆலய உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருக்கும் இலங்கை மற்றும் இந்தியக் கடற்றொழிலாளர்கள் பிரதிநிதிகளுக்கு இடையில் நல்லெண்ணச் சந்திப்பு இன்று(11.03.2022) நடைபெற்றது.

இரண்டு நாட்டு கடற்றொழிலாளர்களுக்கும் புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாடடில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் இரு நாட்டு கடற்றொழிலாளர் பிரதிநிதிகளும் தங்களது கருத்துக்களையும் ஆதங்கங்களையும் வெளியிட்டனர்.

குறிப்பாக, இந்தியக் கடற்றொழிலாளர்களினால் மேற்கொள்ளப்படும் அத்துமீறி எல்லை தாண்டிய சட்ட விரோத தொழில் முறை காரணமாக பாதிப்புக்களை எதிர்கொள்ளும் கடற்றொழிலாளர்கள் சார்பாக, வட மாகாண கடற்றொழிலாளர் சமேளனத்தின் தலைவர் அன்னராசா உரையாற்றுகையில்,

தொப்புள் கொடி உறவிற்கு தடையாக இருக்கின்ற இழுவைமடி வலைத் தொழிலை உடனடியாக நிறுத்துமாறு இந்தியக் கடற்றொழிலாளர்களை வினயமாகக் கேட்டுக் கொண்டதுடன், வளங்களை பாதிக்காத நாட்டுப் படகு போன்ற தொழில் முறைகளில் இந்தியக் கடற்றொழிலாளர்கள் ஈடுபடும் பட்சத்தில் நிபந்தனைகளுடன் வளங்களைப் பகிர்ந்து கொள்ள இலங்கை கடற்றொழிலாளர்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதேவேளை கருத்து தெரிவித்த இந்தியக் கடற்றொழிலாளர்கள் பிரதிநிதிகள், இழுவைமடித் தொழிலால் வளங்கள் அழிக்கப்படுகின்றன என்பதை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்ததுடன், மாற்றுத் தொழில் முறைக்கு தம்மை தயார்ப்படுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

மேலும், 2004 ஆம் ஆண்டு தொடக்கம் இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்ற போதிலும் பிரச்சினை தீர்க்கப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டிய இந்தியக் கடற்றொழிலாளர் பிரதிநிதிகள், விரைவில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் குறுகிய காலத்தினை நிர்ணயம் செய்து, அந்தக் காலப் பகுதிகள் அனைத்து இந்திய இழுவைமடிப் படகுகளையும் மாற்றுத் தொழிலுக்கு தயார்படுத்துவதற்கு உறுதியான பொறிமுறையை உருவாக்குவது சிறப்பானதாக இருக்கும் என்ற கருத்தினையும் முன்வைத்தனர்.

அதேவேளை, தங்களின் படகுகள் ஏலத்தில் விற்கப்பட்டமை தமக்கு பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியதாக இந்தியக் கடற்றொழிலாளர்களினால் தெரிவிக்கப்பட்ட நிலையில் பதில் அளித்த இலங்கை கடற்றொழிலாளர் பிரதிநிதிகள், பல்வேறு அசௌகரியங்களையும் ஏற்படுத்தும் வகையில் தரித்திருந்த படகுகளை விற்பனை செய்து அந்தப் பணத்தை இந்தியக் கடற்றொழிலாளர்களினால் பாதிக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களுக்கு வழங்குமாறு கடற்றொழில் அமைச்சருக்கு தொடர்ச்சியாக தாங்கள் வழங்கிய அழுத்தம் காரணமாகவே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தனர்.

இவ்வாறு இரண்டு நாட்டு கடற்றொழிலாளர் பிரதிநிதிகளும் தமது ஆதங்கங்களை வெளியிட்ட நிலையில் கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இன்றைய சிநேகிதபூர்வமான சந்திப்பில் இரண்டு தரப்பினரும் தங்களது எதிர்பார்ப்புக்களையும் ஆதங்கங்களையும் வெளியிட்டுள்ளமை ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தியிருக்கும் என்று நம்புவதாகவும், விரைவில் இந்திய வெளிவிகார அமைச்சர் டாக்டர் ஜெயசங்கர் இலங்கை வரவுள்ள நிலையில் அவருடனான சந்திப்பின்போது, கடற்றொழிலாளர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, உறவுகளை பாதிக்காத வகையில் தீர்வொன்றை எட்டுவது தொடர்பாக கலந்துரையாடப்படும் என்று தெரிவித்தார்.

அதேபோன்று, இந்தியக் கடற்றொழிலாளர் பிரதிநிதிகள், இலங்கை கடற்றொழிலாளர்களின் ஆதங்கத்தினை ஏனைய கடற்றொழிலாளர்களுக்கும், இந்திய மற்றும் தமிழக தலைவர்களுக்கும் எடுத்துரைத்து விரைவில் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கான சூழலை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


வீட்டுத் திட்டத்தை பூர்’த்தி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு தாருங்கள் : டக்ளஸ் எம்பியிடம் புன்னாலைக்கட்...
கடற்றொழில் அமைச்சு சார் செயற்பாடுகளின் முன்னேற்றங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு!
வடக்கு கிழக்கில் காணப்படும் காணி பிரச்சினைக்கு பாதீட்டின் மூலம் விரைவில் தீர்வு கிடைக்கும் - நம்பிக்...