கசப்பான சம்பவங்களுக்கு மறப்போம் மன்னிப்போம் என்ற வார்த்தை மட்டும் பரிகாரமாகாது – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Friday, March 1st, 2019

நாட்டில் நடைபெற்ற பல கசப்பான சம்பவங்களுக்கு மறப்போம் மன்னிப்போம் என்ற வார்த்தை பரிகாரமாக இருந்தாலும் அதை ஏற்பதற்கு கடந்தகாலத்தில் தமிழ் மக்கள் பட்ட வலிகளுக்கும் வதைகளுக்கும் தீர்வாக உரிய முறையில் உண்மைகைள் கண்டுபிடிக்கப்பட்டு நிரந்தர தீர்வுககளை பெற்றுக்கொடுப்பதனூடாக இது சத்தியமாகும் என நம்புவதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற உடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

அரசாங்கமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் மக்களிடையே நம்பிக்கை ஊட்டும் வகையிலான புறச் சூழ்நிலையை உருவாக்க தவறிவிட்டனர். அதுமட்டுமன்றி இதை முன்னெடுப்பதில் கூட இவ்விரு தரப்பினரும் அக்கறையும் கொள்ளவில்லை. இதுவே இன்றுவரை பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியாது இருக்கின்றன.

தமிழ் மக்களது ஒவ்வொரு பிரச்சினைகளையும் தீரா பிரச்சினைகளாக்கி அது தொடரவேண்டும் என்ற நோக்குடனேயே இதர தமிழ் தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் நாம் இவற்றுக்கான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண்பதில் தான் எமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். அதற்காக நாம் அன்றாடப் பிரச்சினைகளுக்கான தீர்வு அபிவிருத்திக்கான தீர்வு அரசியலுரிமைக்கான தீர்வு என்ற மூன்று வழிமுறைகளையும் முன்னிறுத்தி எமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.

இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வீதியில் போராடுகின்றனர். இவர்களது பிரச்சினைக்கான தீர்வுகளை பெற்றுக் கொள்வதில் அரசோ அன்றி தமிழ் மக்களின் அரசியல் அதிகாரத்தை தம்வசம் கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினரோ முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.

காணாமல் போன உறவுகளின் உணர்வுகளுக்கு மறப்போம் மன்னிப்போம் என்பதனூடாக தீர்வுகளை காணமுடியாது. அவர்களது வலிகளை போக்குவதற்கான வழிவகைகளை கண்டுபிடித்து தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முயற்சிக்க வேண்டும்.

ஆனால் அதிகாரங்களை தம்மிடம் கொண்டுள்ள தமிழ் அரசியல் தரப்பினர் சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போது அனைத்தையும் தவறவிட்டு இன்று மறப்போம் மன்னிப்போம் என்று கூறுவது நியாயமானதல்ல.

1983 ஆம் ஆண்டு முதல் வன்முறைகளால் காணாமல் போனவர்களது உறவுகளுக்கு இன்றுவரை நியாயமான எந்தவொரு தீர்வையும் மாறிமாறி வரும் அரசுகள் பெற்றுக் கொடுக்கவில்லை. இதற்கு தமிழ் மக்களின் தரப்பிலிருக்கும் சுயநல அரசியல் தலைமைகள்தான் காரணம்.

அந்தவகையில் கசப்பான சம்பவங்களுக்கு மறப்போம் மன்னிப்போம் என்ற வார்த்தை பரிகாரமாக இருந்தாலும் அதை ஏற்பதற்கு கடந்தகாலத்தில் தமிழ் மக்கள் பட்ட வலிகளுக்கும் வதைகளுக்கும் தீர்வாக உரிய முறையில் உண்மைகைள் கண்டுபிடிக்கப்பட்டு நிரந்தர தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதனூடாகவே இது சத்தியமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன், கட்சியின் யாழ்.மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் உடனிருந்தனர்.

Related posts:


இரத்தம் சிந்த அழைக்கவில்லை!... வியர்வை சிந்தி முன்னேறவே அழைக்கிறேன்!.. - டக்ளஸ் தேவானந்தா!
அடைமழையால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட நிலைமைகள் தொடர்பில் மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் த...
இந்தியக் கடற்றொழிலாளர்களின் விவகாரம் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய செயற்பாடாக மட்டும் பார்க்க முட...