ஓர் இனத்தின் உரிமைகள் பற்றிப் பேசும்போது ஏனைய இனங்களைப் புண்படுத்தும் வகையிலான கருத்துகள் தவிர்க்கப்படல் வேண்டும்! –  டக்ளஸ் தேவானந்தா!

Friday, August 26th, 2016

ஓர் இனத்தின் உரிமைகளைப் பற்றியோ, தேவைகளைப் பற்றியோ கருத்துக்களை முன்வைப்போர், ஏனைய இனத்தவர்களைப் புண்படுத்தாத வகையில் தங்களது கருத்துக்களை முன்வைப்பதே ஆரோக்கியமானதாக அமையும். இதைவிடுத்து, தங்களது சுயலாப அரசியல் இருப்புகளுக்காக இனவாத ரீதியில் கருத்துக்களைப் பரப்பி வருவதால், தற்போது ஏற்பட்டு வருகின்ற சுமுகமான சூழ்நிலை இந்த நாட்டிலிருந்து அகன்றுவிடக்கூடிய நிலையேற்படுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் தென் பகுதி சமூக ஆர்வலர்களைச் சந்தித்து கலந்துரையாடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த செயலாளர் நாயகம் அவர்கள், தமிழ்த் தரப்பு அரசியல்வாதிகளில் சிலர் தங்களது சுயலாப அரசியலுக்காக இனவாதமான முறையில் கருத்துக்களைத் தெரிவித்து வருவதாக ஒரு குற்றச்சாட்டு தென் பகுதியில் எழுந்துள்ளது. எனினும், அதற்குப் பதிலாக தென் பகுதி அரசியல்வாதிகளும் இனவாதத்தை கையிலெடுப்பது ஆரோக்கியமான விடயமல்ல.

இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற தமிழ்த் தரப்பு அரசியல்வாதிகள், தங்களது சொந்த வாழ்க்கையின் சுகபோகங்கள் கருதி தென் பகுதியுடன் இனவாதமாக நடந்து கொள்ளாமல், அந்நியோன்யமான உறவுகளைப் பேணி, அனைத்து சலுகைகளையும் பெற்று வருபவர்கள். ஆனால், எமது மக்கள் தங்களுக்கான உரிமைகளைப் பெற்று நல்ல வாழ்க்கையை வாழ்ந்துவிடக் கூடாது என்பதற்காக எமது மக்களிடையே இனவாதக் கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர். இவ்வாறான இனவாதக் கருத்துக்களை முன்வைத்து எமது மக்களின் வாக்குகளை கொள்ளையிட்டு வருகிறார்கள். இது பொதுவாக தென் பகுதியிலும் காணப்படும் துரதிர்ஷ;டவசமான நிலைமையாகும்.

தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் அவர்கள் இனவாதிகளல்லர். ஏனைய இனங்களுடன் சுமுகமான உறவைப் பேணவே எமது மக்கள் விரும்புகின்றனர். எனினும், எமது மக்களின் வாக்குகளை கொள்ளையிடுபவர்கள் அதே மக்களை இனவாதிகளாக தென் பகுதிக்கு காட்டிக் கொடுத்து, தாங்கள் மட்டும் தென் பகுதியின் நல்ல பிள்ளைகளாகிவிடுகின்றனர். இது நீண்ட காலமாகவே தொடர்ந்திருக்கும் ஒரு நிலைப்பாடாகவுள்ளது. இவர்களது இந்த கபட நாடகத்தை தென் பகுதி அரசியல்வாதிகளும், குறிப்பாக மக்களும் நன்கு அறிந்துகொள்ள வேண்டும். அவ்வாறான புரிதலின் அடிப்படையிலேயே தென் பகுதி அரசியல்வாதிகளும் தங்களது கருத்துக்களை முன்வைக்க வேண்டும்.

இந்த நாட்டில் தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதன் ஊடாகவே எமது அரசியல் உரிமை தொடர்பான பிரச்சினைக்கு நிரந்தரமானதும், நியாயமானதுமான தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியுமென்ற நிலைப்பாட்டிலிருந்தே நாம் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றோம். இதனைக் குழப்பி, எமது மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கக் கூடாது என்ற நோக்கில் இவ்வாறான இனவாதக் கருத்துக்களைப் பரப்பிவரும் சக்திகள் செயற்பட்டு வருகின்றன எனவும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

எமது மக்களின் வாழிடங்கள் பல்வேறு அபிவிருத்திக்களுக்காக காத்துக் கிடக்கின்றன - நாடாளுமன்றில் டக்ளஸ் த...
தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் சமூக பொருளாதார மாற்றங்கள் உருவாக வேண்டும் – அதையே தான் விரும்புவதாக அ...
அரசாங்கத்தினால் வழங்கி வைக்கப்பட்ட மண்ணெண்ணை அமைச்சர் டக்ளஸ் - இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் ஆகி...