ஒலுவில் துறைமுகத்தின் மூலம் அம்பாறைக்கு வளமான எதிர்காலம் உருவாக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Wednesday, October 27th, 2021

ஒலுவில் துறைமுகத்தினை மீன்பிடிச் செயற்பாடுகளுக்காக விரைவில் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து சட்டவிரோத தொழில் முறைகளுக்கும் முடிவு கட்டப்படும் எனவும் தெரிவித்தார்.

அம்பாறை உத்தியோகபூர்வ விஜயத்தினை இன்று மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், கல்முனை கடற்றொழில் திணைக்களத்தில் கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹறீஸ் மற்றும் கடற்றொழிலாளர் அமைப்புக்கள் மற்றும் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்ட குறித்த கலந்துரையாடலில் மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

கடற்றொழிலாளர் பிரதிநிதிகளினால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தேர்தல் வாக்குறுதிக்கு அமைய ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் செயற்பாடுகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும், மண்ணரிப்பு போன்ற காரணங்களினால் ஒலுவில் துறைமுகத்தின் செய்பாடுகளை விரும்பாத மக்களின் நியாயமான காரணங்களுக்கு பரிகாரங்களை வழங்குவதன் மூலம் அனைவருடைய சம்மதத்துடன் ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், ஒலுவில் துறைமுகத்தினைப் பயன்படுத்தி ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட விரும்புகின்றவர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்குவதுடன், படகுகளை வாங்குவதற்கு கடன் வசதிகளும் ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்த கடற்றொழில் அமைச்சர், கிழக்கு மாகாணத்தில் நீர்வேளாண்மைக்கு பொருத்தமான இடங்கள் ஆய்வுகள் மூலம் அடையாளப்படுத்தப்பட்டு விரும்புகின்வர்களுக்கு அவை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், படகு கண்காணிப்புக் கருவிகளை பெற்றுத் தருவதுடன் தெலைத் தொடர்புக் கருவிகளுக்கு வரிக் குறைப்புச் செய்வதற்கும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சட்டவிரோத தொழில் முறைகள் அனைத்திற்கும் முடிவு கட்டப்படும் எனவும், மாவட்ட மீனவர்கள் விரும்பினால் மூன்று இஞ்சிக்கு குறையாத கண்களை உடைய வலைகளைப் பயன்படுத்தி சுருக்கு வலை தொழிலில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்குவதாகவும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, ஒலுவில் துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர், மீ்ன்பிடித் துறைமுகத்தினை ஆரம்பிப்பது தொடர்பாக துறைசார்ந்தவர்களுடன் கலந்துரையாடியதுடன், சுமார் 300 பேருக்கு உடனடி வேலை வாய்ப்பினை வழங்கங்கூடிய குளிரூட்டல் பொறிமுறையை இயக்குவது தொடர்பாகவும் சம்மந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடினார்.

பின்னர், திருக்கோவில் பிரதேசத்தில் கடலரிப்பினால் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர், அருகம்பை உட்பட பல்வேறு  பிரதேசங்களுக்கு கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

மக்களது பிரச்சினைகளை இனங்கண்டு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதே திருமலைக்கான விஜயத்தின் நோக்கம் – டக்ளஸ் ...
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு துரிதகதியில் நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில...
உள்ளூர் உற்பத்திகளை பாதிக்கும் செயற்பாடுகளை அனுமதிக்க கூடாது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல...

இரணைத்தீவு மக்களை மீளக்குடியேற்றுவதற்கு சட்ட ரீதியிலான அனுமதி எப்போது வழங்கப்படும்?  - நாடாளுமன்றில்...
தீவக மக்களின் குடிநீரை தடுத்து நிறுத்திய பெருமைக்குரியவர் தீவகத்தின் மைந்தன் என மார்தட்டுகின்றார் - ...
மயானங்களை துப்புரவு செய்யும் போலித் தேசியவாதிகள் எமது மக்களின் துயரங்களை துப்புரவு செய்வதற்குத் தயார...