ஒரு சமூகத்தின் மாற்றத்தை நிர்ணயிக்கின்ற பொறுப்பு அந்த சமூகத்தில் வாழுகின்ற இளைஞர் சமூகத்தையே சார்ந்து நிற்கின்றது – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Friday, February 9th, 2018


நாளைய எதிர்காலத்தை செதுக்குகின்ற சிற்பிகளாக இன்றைய இளைய சமூகம் இருக்கின்ற நிலையில் அனைவரும் தமது பொறுப்புக்களை உணர்ந்து அர்ப்பணிப்புடன் உழைக்க முன்வரவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சாவகச்சேரி பிரதேசசபைக் குட்டபட்ட இளைஞர்கள் சந்தித்து கலந்துரையாடுகையில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

சட்டவிரோத சமூகச் சீர்கேடுகளுக்கு எமது இளைய சமூகம் உட்படாதவாறு எதிர்காலத்தை தமக்கான வளமான எதிர்காலமாக மாற்றியமைக்க வேண்டும் என்பதே எமது பெருவிருப்பாகும். அதனடிப்படையில் இளைய சமூகத்தினர் தாம் வாழுகின்ற கிராமங்களில் சனசமூக நிலையங்கள் விளையாட்டுக் கழகங்கள் ஆன்மீக விடயங்கள் என்பவற்றுடன் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களை பாதுகாத்து பலப்படுத்தும் செயற்பாடுகளில் முன்னின்று உழைக்கவேண்டும்.

ஒரு சமூகத்தின் மாற்றத்தை நிர்ணயிக்கின்ற பொறுப்பு அந்த சமூகத்தில் வாழுகின்ற இளைஞர்கள் யுவதிகளை உள்ளடக்கியதான இளைஞர் சமூகத்தையே சார்ந்து நிற்கின்றது.

அந்தவகையில் கல்வி சுகாதாரம் போன்ற விடயங்களில் எதிர்காலத்திற்கு வழிகாட்டிகளாகவும் இவர்கள் அமையப்பெறுதல் வேண்டும்.

எனவே இன்றைய இளைய சமூகத்திற்கு நல்வழியைக் காட்ட ஆன்மீகவாதிகள் கல்விமான்கள் புத்திஜீவிகள் ஆகியோர் முழுமையான அர்ப்பணிப்புடன் உழைக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என்றும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

Related posts: