ஒரு கறுப்பு அத்தியாயத்தை எழுதிய ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவு – இறந்தவர்களை நினைவு கூர்ந்து அமைச்சர் டக்ளஸ் அஞ்சலி மரியாதை!

Sunday, December 26th, 2021

ஒரு கறுப்பு அத்தியாயத்தை எழுதிய ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 17 ஆண்டுகள் கடந்துள்ளது. இந்நிலையில் குறித்த அனர்த்தத்தால் பலியாகிப்போன உறவுகளை நினைவுகூர்ந்து  அமைச்சர் டக்ளஸ் அஞ்சலி மரியாதை செலுத்தியிருந்தார்.

சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 17 வது ஆண்டு நினைவு நாள் உலகின் பல நாடுகளில் இன்றையதினம் நினைவுகூரப்பட்ட நிலையில் இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணம் – வடமராட்சி உடுத்துறையிலும் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிலையில் சுனாமி அனர்த்தத்தால் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இ.ரண்டு நிமிட மௌன அஞ்சலியையும் செலுத்தியிருந்தார்.

பிரதேச செயலாளர்கள், கடற்றொழில்சார் திணைக்கள அதிகாரிகள் கடற்றொழில் சங்கங்கள் மற்றும் சமாசங்களின் பிரதிநிதிகளின் பிரசன்னத்துடன் யாழ்ப்பாண மாவட்டத்தில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் கடற்றொழிலாளர்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர டக்ளஸ் தேவானந்தா தலைமையில் அமைச்சரின் யாழ். அலுவலகத்தில்  நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த நேரத்தின் போதே தமது அஞ்சலியை செயலத்தியிருந்தார்.

இதேவேளை உடுத்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை வடமராட்சி – உடுத்துறை நினைவாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பலரும் தமது உறவுகளை அஞ்சலித்தனர்.

சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு 9.25 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து உயிரிழந்தவர்களின் படங்களுக்கு மாலையிட்டு தீபங்கள் ஏற்றி உணவுகளை படையலிட்டு உறவுகள் அஞ்சலித்தனர். இதன்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு அஞ்சலி செது;தியிருந்தனர்.

முன்பதாக 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி உலக வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு கறுப்பு தினமாக பதிவாகிய சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

இதற்கமைய, ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக இன்று (26) காலை 9.25 முதல் 9.27 வரை 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களிடம் கோரியிருந்தது.

இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட ஆழிப்பேரலை ஆசிய நாடுகளில் வரலாறு காணாத அழிவை ஏற்படுத்தியது.

ரிக்டர் அளவுகோளில் 9.1 முதல் 9.3 மெக்னிடீயூட்டாக அந்த நில அதிர்வு பதிவாகியிருந்தது. இதன் காரணமாக இந்து சமுத்திர பிராந்தியத்தில் சுமார் 100 அடி உயர்த்திற்கு ஆழிப்பேரலை உருவாகியது.

இலங்கை, இந்தியா, மலேசியா, மியன்மார், அந்தமான், தாய்லாந்து  உள்ளிட்ட 14 ஆசிய நாடுகளின் கரையோரங்களை இந்த ஆழிப்பேரலை சூரையாடிச் சென்றது.

ஆசிய நாடுகளில் 2 இலட்சத்து 27 ஆயிரத்து 898 உயிர்களை இந்த ஆழிப்பேரலை காவுகொண்டது. அத்துடன், பல்லாயிரங்கணக்கான மக்களை நிர்க்கதியுமாக்கியது.

இந்து சமுத்திர நாடுகளில் 15 பில்லியன் டொலர்கள் பெறுமதியான சொத்துகளும் உடைமைகளும் சேதமாகின. இந்த ஆழிப்பேரலையின் கோரத் தாண்டவத்தால் 30 ஆயிரத்து196 உயிர்கள் இலங்கையிலும் காவுகொள்ளப்பட்டதுடன் 21 ஆயிரத்து 411 பேர் காயமடைந்தனர். 5 இலட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் நிர்க்கதியாகினர்.

அதுமட்டுமன்றி சொத்துகள், உடைமைகள் சேதமடைந்தமையினால் கல்வி, போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளும் பெரும் பாதிப்படைந்தன.

ஆழிப்பேரலை என்ற சொல்லையும் அதன் தாக்கத்தையும் 2004 ஆம் ஆண்டுவரை அறிந்திருக்காத இலங்கைத் தீவின் மக்கள், கடலில் திடீரென ஏற்பட்ட ஆழிப்பேரலையை ஆச்சரியத்துடன் பார்க்கச் சென்றனர். இதன் காரணமாகவே பல்லாயிரக்கணக்கான உயிர்கள் கடல் கோளுக்கு இரையாகின.

இதன் பின்னர் சுனாமி என்னும் ஆழிப்பேரலை தொடர்பான அச்சமும் அது தொடர்பான விழிப்புணர்வும் உலக மக்களிடம் ஏற்படத் தொடங்கின.

இந்நிலையில் ஆழிப்பேரலை அனர்த்தத்தை முன்கூட்டியே கண்டறிவதற்காக பல்வேறு உலக நாடுகளில் ஆய்வு மையங்கள் நிறுவப்பட்டு சமுத்திரப்பரப்பும் அதில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் அவதானிக்கப்பட்டு வருகின்றன.

சுனாமி எனப்படும் ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்ட உயிர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி உலக மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.

உலக வரலாற்றில் ஒரு கறுப்பு அத்தியாயத்தை எழுதிய ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 17 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், அதனால் ஏற்பட்ட வடுக்கள் இன்றும் எம் நெஞ்சைவிட்டு நீங்காமலேயே உள்ளன.

இன்றைய தினமும் ஆழிப்பேரலை நினைவுகளை மீட்டும் பல்வேறு நினைவஞ்சலி நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ளன.

இந்த நிலையில், ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்ட உறவுகளின் நினைவுகளில் எமது EPDPNEWS.COM இணைய செய்திச் சேவையும் தன்னை இணைத்துக்கொள்கிறது.

இதேவேளை மரணித்தவர்களின் ஆத்த சாந்திக்காக நாடளாவிய ரீதியாக சர்வ மத வழிபாடுகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

.

Related posts:

எமது வாழ்வே கேள்விக்குறியான போது அதனைப் பாதுகாத்து  நம்பிக்கையூட்டியவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே - எ...
கடந்த கால யுத்தம் தேசிய நல்லிணக்கத்திற்கான பாடமாக அமைய வேண்டுமே அன்றி இன்னுமொரு யுத்தத்திற்கான பாலமா...
விழித்துக் கொண்டதால் நான் பிழைத்துக் கொண்டேன்: கட்சி உறுப்பினர்கள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ்!