ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் – கடற்றொழில் அமைச்சர் சந்திப்பு – சர்வதேச மீன்பிடி தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்!
Tuesday, September 28th, 2021சர்வதேச நாடுகளின் கடல் எல்லைகளுக்குள் தவறுதலாக அல்லது சட்டவிரோதமாக நுழைகின்ற இலங்கையின் ஆழ்கடல் மீன்பிடிக் கலன்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவருக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெளிவுபடுத்தினார்.
மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று(28.09.2021) நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டெனிஸ் சைய்பி தலைமையிலான குழுவினருக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகியோருக்கும் இடையிலான கலந்துரையாடலின் போதே மேற்குறிப்பிடப்பட்ட விடயம் தெளிவுபடுத்தப்பட்டது.
இச்சந்திப்பின் போது, ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுகின்ற இலங்கை கடற்றொழிலாளர்கள், எல்லைதாண்டிச் சென்று வெளிநாடுகளில் கைதாகின்ற சமயங்களில் குறித்த நாடுகளில் மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகள், பின்னர் அவர்கள் இலங்கைக்கு திரும்புகின்றபோது படகு உரிமையாளர்களுக்கு எதிராகவும் படகில் பணியாற்றிய தொழிலாளர்கள் மீதும் இலங்கையில் மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகள் போன்றவை தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கேட்டறிந்து கொண்டார்.
இந்நிலையில், கடற்றொழில் அமைச்சினால் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆழ்கடல் மீன்பிடி கலன்களுக்கு VMS கண்காணிப்பு கருவிகளை பொருத்தும் செயன்முறையை சுட்டிக்காட்டிய கடற்றொழில் அமைச்சர், குறித்த செயற்றிட்டங்கள் நிறைவடைந்ததும் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுகின்ற இலங்கையின் பலநாள் கலன்களை சிறப்பாக கண்காணிக்க முடியும் எனவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஐரோப்பி யூனியன் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தினார்.
இதுதவிர, மீன்பிடி தொடர்பான சர்வதேச நியமங்களுக்கு அமைய ஆழ்கடல் மீன்பிடி செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துவது மற்றும் மீன்பிடிக் கலன்களின் எண்ணிக்கையை வரையறை செய்வது தொடர்பாகவும் கடற்றொழில் அமைச்சு அவதானம் செலுத்தி வருவதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்துரைத்தார்.
இச்சந்திப்பில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்னாயக்க இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜெயந்த சந்திரசோம, கடற்றொழில் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹாவத்த மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
000
Related posts:
|
|