எல்லை நிர்ணயத்தை மீள் ஆராய்வு செய்கின்ற பிரதமர் தலைமையிலான குழு தற்போது செயற்பாட்டில் இருக்கின்றனதா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Friday, January 11th, 2019

எல்லை நிர்ணயத்தினை மீள் ஆராய்வு செய்கின்ற பிரதமர் தலைமையிலான குழு தற்போது செயற்பாட்டில் இருக்கின்றனதா என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது உள்ளக, உள்நாட்டு அலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் கௌரவ அமைச்சர் வஜிர அபேவர்தன அவர்களிடம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

எமது மக்களின், அரசியல் உரிமைகளுக்கூடாக தீர்த்துக் கொள்ளக்கூடிய தமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு, இலங்கை அரசியல் யாப்பின் 13வது திருத்தச் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாண சபையினை அதற்குரிய அதிகாரங்களுடன் செயற்படுத்துவதை ஓர் ஆரம்பமாகக் கொண்டு முன் நோக்கிச் செல்வதே நடைமுறைச் சாத்தியமான அரசியல் தீர்வாக அமையும் என்பதை நாம் ஆரம்பம் தொட்டு கூறி வருகின்றோம்.

எனினும், கடந்த கால வடக்கு மாகாண சபையானது எமது மக்களின் நலன்கள் குறித்த அக்கறை, ஆளுமை மற்றும் ஆற்றல் அற்றவர்களிடம் சென்றதினால், அது தங்களுக்குப் பயன்படாமல் போய்விட்டது எனக் கருதுகின்ற எமது மக்கள், வடக்கு மாகாண சபையின் ஊடாக தங்களது பிரச்சினைகள் மற்றும் தேவைகளைத் தீர்த்து வைப்போரிடம் வடக்கு மாகாண சபையினை ஒப்படைக்கும் நிலைக்கு முன்வந்துள்ள நிலையில் மாகாண சபை தேர்தலை ஒத்திவைப்பதன் மூலம்;, அத்தகைய மக்கள் பிரதிநிதிகள் இன்றி வடக்கு மாகாண சபையும், அதே நேரம்  கிழக்கு மாகாண சபையும்  ஆளுநர்களின் கீழ் தொடர்ந்தும் நிர்வகிப்பதற்கு வழிவகுத்துள்ளமையானது, வடக்கு கிழக்கு மக்கள் பல்லாண்டு காலமாக போராடிப்பெற்ற அரசியல் உரிமையை  அரசாங்கம் மீண்டும் பறித்தெடுத்துள்ளதாகவே கருதுகின்றனர்.

தமது அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்காகவும், தமது அபிவிருத்திகளை மேற்கொள்வதற்காகவும், தமது அரசியல் உரிமைகளை அனுபவிப்பதற்காகவும் வடக்கு, கிழக்கு மக்கள் பெற்றுக்கொண்ட அதிகாரங்களை இவ்வாறான செயற்பாடு செயலிழக்கச் செய்துள்ளது என்றே கருத வேண்டியுள்ளது.

அதேநேரம், வடக்கு, கிழக்கு மாகாண சபைகளைத் தவிர்ந்த நான்கு மாகாண சபைகளுக்குமான தேர்தல்களும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

2017 இன் 17 ஆம் இலக்க மாகாணசபைகள் தேர்தல் (திருத்தம்) சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இன்று 15 மாதங்கள் கழிந்துள்ள நிலையிலும் மேற்படி சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய எல்லை நிர்ணய சபை மேற்கொண்ட எல்லை நிர்ணயத்தினை மீள் பரிசீலனை செய்வதற்காக பிரதமர் தலைமையில் அமைக்கப்பட்ட மீளாய்வுக் குழு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய இரண்டு மாத கால எல்லையைக் கடந்து மேலும் இரண்டு மாதங்கள் சென்றுள்ள நிலையிலும் இதுவரை மீளாய்வு செய்யப்பட்ட எல்லை நிர்ணய அறிக்கை நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவில்லை.

அந்தவகையில்       எல்லை நிர்ணயத்தினை மீள் ஆராய்வு செய்கின்ற பிரதமர் தலைமையிலான குழு தற்போது செயற்பாட்டில் இருக்கின்றனதா?

இருக்கின்றது எனில், மேற்படி எல்லை நிர்ணய மீளாய்வு அறிக்கை நாடாளுமன்றத்திற்குக் கிடைக்கக் கூடிய கால வரையறை பற்றி தெரிவிக்க முடியுமா? இல்லை எனில், மேற்படி எல்லை நிர்ணயம் தொடர்பில் எடுக்கக்கூடிய வேறு நடவடிக்கைகள் யாது?

எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை மீளாய்வு செய்யப்படாத நிலையில,; துரிதமாக மாகாண சபைகள் தேர்தலை நடத்தவேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு, 1988 இன் 2 ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டமூலத்தின் பிரகாரம் விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டிய மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு  நடவடிக்கை எடுக்க முடியுமா?

அல்லது, எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை மீளாய்வு செய்யப்பட்டு, அதன் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் தான் புதிய முறையில் மேற்படி தேர்தலை நடத்த முடியுமா?

அவ்வாறெனில், மேற்படி மாகாண சபைகளுக்கான தேர்தலை துரிதமாக நடத்துவதற்கு தாங்கள் முன்வைக்கின்ற யோசனைகள் யாவை? மேற்படி எனது கேள்விகளுக்கான பதில்களையும், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான விளக்கங்களையும் கௌரவ அமைச்சர் வஜிர அபேவர்தன அவர்கள் வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:


நெடுந்தீவு பகுதிக்கும் காற்றாலைமூலமான  மின்வசதி  பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா சுட...
வடமாகாண அமைச்சர்களது மோசடிகள் நிரூபிக்கப்பட்டும் நடவடிக்கைகள் எடுக்கப்படாமலிருப்பது ஏன்? நாடாளுமன்றி...
தடையை நீக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் மாலைதீவின் இலங்கைக்கான தூதுவர் கோரிக்கை!