எல்லை தாண்டி வரும் படகுகள் அரசுடமையாக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு!

Tuesday, December 21st, 2021

எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பினுள் நுழைகின்ற இந்திய மீன்பிடிப் படகுகள் கைது செய்யப்பட்டு சட்ட ரீதியாக அரசுடமையாக்கப்படும் என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மயிலிட்டித் துறைமுகத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப்  பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மயிலிட்டித் துறைமுக்திற்கான விஜயத்தினை இன்று மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர், தடுத்து வைக்கப்படடுள்ள இந்திய இழுவை வலைப் படகுகளை பார்வையிட்ட பின்னர் பிரதேச கடற்றொழிலாளர்கள் மற்றும் துறைமுக நிர்வாகத்தினருடனாக கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

இலங்கை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினையும் இலங்கையின் கடல் வளத்தையும் பாதிக்கும் வகையில் எல்லை தாண்டி வந்து சட்ட விரோதத் தொழில் முறைகளில் ஈடுபடுகின்ற இந்திய கடற்றொழிலாளர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அறிவுறுத்தல்களை வழங்கிய ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற கடற்படையினருக்கும் வடக்கு கடற்றொழிலாளர்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாகத் தெரிவித்தார்.

மேலும், அரசுடமையாக்கப்படுகின்ற படகுகளை பிரதேச கடற்றொழில் சங்கங்களிடம் கையளித்து, ஆழ்கடல் மீன்பிடி போன்ற சட்ட ரீதியான தொழில்களில் ஈடுபடுவதற்கு பயன்படுத்தப்படும் எனவும், அவ்வாறு பயன்படுத்த முடியாத படகுகளை விற்பனை செய்து இந்தியக் கடற்றொழில் படகுகளினால் பாதிக்கப்பட்டவர்களுகு நஸ்டஈட்டினை வழங்கவுள்ளதாகவும்  தெரிவித்தார்.

அதேவேளை, மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் அபிவிருத்தி தொடர்பாக கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், “மயிலிட்டித் துறைமுகத்தின் முதலாவது கட்டப் புனரமைப்பு தவறான நோக்கங்களுக்காக முன்னெடுக்கப்பட்டமையினால் சரியான முறையில் திட்டமிடப்படவில்லை.

இதன் காரணமாக இந்தப் பிரதேசத்தினைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் இந்தத் துறைமுகத்தினால் பூரணமான நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்நிலையில், இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், பிரதேச மக்களின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டு இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும்.” எனவும் தெரிவித்தார்.

Related posts:


வீட்டுத் திட்டங்களில் பயனாளிகளுக்கு இலகுவான நடைமுறைகள் பின்பற்றப்படல் வேண்டும்! - டக்ளஸ் தேவானந்தா
தீவகத்தில் கடலட்டை வளர்ப்பு தொடர்பில்  நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராய்வு!
கொழும்பு துறைமுகத்தினை பார்வையிட்ட இரணைதீவு மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நன்றி தெரிவிப்பு!