எரிக்சொல் ஹெய்ம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கொழும்பில் திடீர் சந்திப்பு – இலங்கையின் அரசியல் சூழ்நிலை குறித்து ஆராய்வு!

Tuesday, April 30th, 2024

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தேசிய சுற்றுச்சூழல் ஆலோசகரும், இலங்கையின் முன்னாள் சமாதானத் தூதுவருமான நோர்வே நாட்டின் பிரதிநிதி எரிக்சொல்ஹெய்ம் ஆகியோருக்கிடையே சந்திப்பொன்று நடைபெற்றது.

இன்று காலை கொழும்பு ஹில்டன் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற குறித்த இச்சந்திப்பின்போது இலங்கையின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகவும், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான செய்திகள் தொடர்பாகவும் , புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா -, தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கு சாத்தியமான தீர்வை பெற்றுத்தரக்கூடியவராக தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே இருக்கின்றார். அதை அவர் நிரூபித்தும் வருகின்றார்.

அந்த வகையில் தொடர்ந்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருப்பதே நாட்டுக்கு நன்மையாக அமையும் என்பதே எமது நிலைப்பாடு என்று அமைச்சர் தெரிவித்திருந்தார்.

மேலும் இலங்கையில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு சாத்தியமான வழிமுறைகளூடாக தீர்வைக்காண முடியும் என்று தொடர்ந்தும் கூறிவருகின்றோம் அதற்கு மாறாக பிரபாகரனின் போக்கு இருந்ததால் 2009 ஆண்டு போன்ற முடிவையே எதிர்கொள்ள நேரிடும் என்று தான் 28 ஆண்டுகளுக்கு முன்னர் எரிக்சொல்ஹெய்மிடம் கூறியதையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நினைவூட்டியிருந்தார்.

அத்துடன் பல்வேறு தாக்கங்களுக்கு முகம்கொடுத்து தமது வாழ்வாதாரத்தை நடத்தும் கடற்றொழிலாளர்களுக்கு நோர்வே அரசின் உதவிகளைப் பெற்றுத்தருவதற்கான ஏது நிலைகளை உருவாக்கி தருமாறும் எரிக்சொல்ஹெய்மிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக்கொண்டார்.

மேலும் குறித்த கலந்துரையாடலில்  காஸா விவகாரம் தொடர்பாக கலந்துரையாடியிருந்தனர்.

குறித்த சந்திப்பின்போது நோர்வே நாடாளுமன்ற உறுப்பினர் ஹிமன்சு குலட்டி அவர்களும் ,கடற்றொழில் அமைச்சரின் ஆலோசகர் எஸ். தவராசா மற்றும் அமைச்சரின் ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வன் (பாரூக் அஸீஸ்) ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

சகல வசதிகளும் கொண்ட கிராமமாக இரணைதீவு கிராமம் உருவாக்கப்படும்: இரணைமாதா நகரில் அமைச்சர் தேவானந்தா உற...
தடுப்பூசி வழங்குவதில் மத குருமாருக்கு முன்னுரிமை - ஜனாதிபதியிடம் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல்!
வடக்கு இளைஞர் யுவதிகளுக்கு பொன்னான வாய்ப்பு - அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் செயற்பாடு குறித்தும் அமைச...