எமது மாணவர்கள் தாய்மொழியுடன் இதர மொழிகளிலும் தேர்ச்சியுற்றவர்களாக உருவாக வேண்டும் – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!
Saturday, October 20th, 2018எமது மாணவர்கள் தாய்மொழியான தமிழ் மொழியுடன் பூகோளப் போட்டிகளுக்கு முகங்கொடுக்கும் வகையில் ஆங்கில மொழியுடன் இதர பல மொழிகளையும் திறம்பட கற்று தேர்ச்சி பெற்றவர்களாக விளங்கவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கரவெட்டி வதிரி rohini speak – up english academy நிறுவனத்தின் ஓராண்டு நிறைவுதினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –
ஒருகாலத்தில் எமது நாட்டில் கல்வித்துறையில் அதி சிறப்பு நிலையில் விளங்கிய எமது மாகாணம் இன்று ஆழுமையற்ற தமிழ் அரசியல் தலைவர்களது சுயநலங்களால் கீழ்நிலை நோக்கி சென்றுகொண்டிருக்கின்ற நிலை காணப்படுகின்றது. இது பெரும் வேதனைக்குரியதொன்றாகும்.
கடும் யுத்தம் நாட்டில் நடைபெற்று வந்த வேளையிலும் யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னரும் நாம் ஆட்சி அதிகாரங்களில் இருந்தபோது எமது மாணவர்களின் கல்வித்துறையை தரம் தாளாது பாதுகாத்து வந்திருக்கின்றோம். இக்காலத்தில் வடக்கு மாகாணம் நாட்டின் முதன்மை மாகாணமாக கல்வித்துறையில் மிளிர்ந்து காணப்பட்டது.
ஆனாலும் வடக்கு மாகாண சபை உருவாக்கப்பட்ட பின்னர் வடக்கின் கல்வித்துறை ஆளுமையற்றவர்களின் கரங்களுக்கு சென்று சின்னாபின்னமாக்கப்பட்டு விட்டது. எமது இனத்தின் அழியாச் சொத்தான கல்வியும் இவர்களது செயற்றிறனின்மையால் கடைநிலைக்கு சென்றுவிட்டது.
இந்நிலையில் rohini speak – up english academy என்ற இந்த ஆங்கில மொழிசார் கல்வி நிலையம் எமது மாணவர்களின் கல்வி நிலையை மேம்படுத்த முன்வந்துள்ளமை பாராட்டத்தக்கது. இவர்கள் இந்த பணியை தொடரும்போது தடைகள் ஏதும் இருப்பின் அவர்களுக்கு கரங்கொடுக்க நான் என்றும் தயாராகவே இருக்கின்றேன்.
அந்தவகையில் எமது மாணவர்கள் தாய்மொழியுடன் இதர மொழிகளிலும் தேர்ச்சியுற்றவர்களாக மிளிர்ந்து தமது பிரதேசங்களை மட்டுமல்லாது முழு நாட்டினதும் முன்னோடிகளாக உருவாக வேண்டும் என்பதே எனது விருப்பாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இதனிடையே குறித்த நிகழ்வுக்கு சென்ற செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மங்கல விளக்கு ஏற்று நிகழ்வை ஆரம்பித்து வைத்ததுடன் மாணவர்களுக்கு பரிசில்களையும் வழங்கிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|