எமது மக்கள் போராட்ட அடிமைகளல்ல – சபையில் டக்ளஸ் தேவானந்தா எடுத்துரைப்பு!

Thursday, March 23rd, 2017
நன்கொடை உறுதிகளை நன்றியீனம் எனும் ஏதுவின் மூலமாக கைமீட்டல் குறித்து இங்கே வாதப் பிரதிவாதங்களை நாங்கள் மேற்கொண்டிருக்கும் நிலையில், யுத்தம் என்கின்ற ஒரு கொடிய நிகழ்வு காரணமாக தமது சொந்த நிலங்களை கைவிட்டு இடம்பெயர்ந்திருந்த எமது மக்களின் காணி, நிலங்கள் பல இன்னும் விடுவிக்கப்படாத நிலையில், எமது மக்கள் அவர்களது சொந்த காணி, நிலங்களை வேண்டி அகிம்சை வழியில் போராட்டங்களை மேற்கொண்டிருக்கின்ற நிலையில், இந்த விடயம் குறித்து சாதகமான எந்தவொரு நகர்வும் இடம்பெறாத நிலையிலேயே நாம் இருக்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம், நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நன்கொடை உறுதிகளை கைமீட்டல், குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல், குற்றவியல் சட்டக்கோவை தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது மேலும் தெரிவித்துள்ள அவர், யுத்தம் முடிவுற்றதன் பின்னரான காலகட்டமானது எமது மக்கள் தங்களது வாழ்க்கையை மீள அமைத்துக் கொள்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டதொரு காலமாக இருந்திருக்க வேண்டும். அது அவ்வாறு அமைந்திருப்பின், இன்று எமது நாட்டில் மிக முக்கியப் பிரச்சினைகளாக உருவெடுத்துள்ள ஏனைய தேசிய, சர்வதேச பிரச்சினைகள் குறித்த தீர்வுகளுக்கு எம்மால் இலகுவாக முகங்கொடுத்திருக்க முடியும். ஆனால், இன்று அந்த நிலை இன்னும் ஏற்படவில்லை என்றே கூற வேண்டும்.
நேரடி யுத்தத்திற்கு முகங்கொடுத்திருந்த எமது மக்களின் அனைத்து இழப்புகளையும் ஈடுசெய்யக்கூடிய நெறிமுறைகள் அற்றதொரு நிலையில், அம் மக்களின் மீள் எழுச்சிக்கான உதவிக் கரங்கள் போதுமானளவு இல்லாத நிலையில், அவர்களது காணி, நிலங்களை விடுவிப்பது, எமது மக்களின் உறவுகளான தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது, காணாமற் போன உறவுகளைக் கண்டறிவதற்காக போராடி வருகின்ற எமது மக்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் ஓர் உத்தரவாதத்தினை வழங்குவது போன்ற செயற்பாடுகளை மேற்கொள்வது இந்த அரசின் செயற்பாடாக இருக்க வேண்டும்.
இந்த அரசால் மட்டுமல்ல, எந்த அரசாலும் சாத்தியம் அற்ற,  பல விடயங்களை, இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் செய்வதாக தமக்கு உறுதியளித்துள்ளதாகக் கூறப்பட்டே, பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களிடம் கடந்த பொதுத் தேர்தலின்போது தமிழ்த் தரப்பு அரசியல்வாதிகளால் வாக்கு கேட்கப்பட்டது. எமது மக்களும் வாக்களித்தனர். ஆனால், இந்த அரசு, ஆட்சிக்கு வருமுன் அந்த தமிழ் அரசியல்வாதிகளிடம் என்ன வாக்குறுதிகளை வழங்கியதோ எமக்குத் தெரியாது, ஆனால், இந்த அரசியல்வாதிகள் கூறி, எமது மக்கள் நம்பி வாக்களித்த எந்தவொரு விடயமும் இன்னும் தீர்க்கப்படாதுள்ள நிலையில், எமது மக்களது நம்பிக்கையீனத்தையே இந்த அரசு சம்பாதித்துள்ளது என்பது மட்டும் தெரிய வருகிறது.
ஆனால், இந்த அரசாங்கத்தாலோ வேறு எந்தவொரு அரசாங்கத்தாலோ செய்ய முடியாதவற்றை நாங்கள் ஒருபோதும் கேட்கவில்லை. அவ்வாறு செய்ய முடியாது எனத் தெரிந்தும், இல்லை, செய்ய முடியும் என எமது மக்களுக்கு நாம் பொய்யான வாக்குறுதிகளை வழங்கியதுமில்லை. வழங்குவதுமில்லை.
எனவே, எமது மக்களது காணி, நிலங்களை விடுவிப்பது என்பது செய்ய முடியாத ஒரு விடயமல்ல.  இந்த காணி, நிலங்களை விடுவிப்பதன் ஊடாகவே அம்மக்களால் மீளெழ முடியும். அவர்கள் மீளெழுவதன் ஊடாகவே அவர்களுக்கான வாழ்வாதாரங்களை அவர்களால் ஈட்டிக் கொள்ள முடியம். எமது மக்கள் தங்களது வாழ்வாதாரங்களை ஈட்டிக் கொள்ள முற்படுவதன் ஊடாகவே அந்தந்தப் பகுதிகளின் பொருளாதாரங்களை மேம்படுத்திக் கொள்ள முடியும். அதனூடாக எமது நாட்டின் மீதான அந்நியத் தலையீடுகளை தவிர்த்துக் கொள்ள முடியும்.
எனவே, எமது மக்களது அடிப்படைத் தேவைகளான – எமது மக்களின் உணர்வுகளுடன் பின்னிப் பிணைந்துள்ள தேவைகளைப் பூர்த்தி செய்ய உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை நான் இந்தச் சபையிலே இந்தச் சந்தர்ப்பத்திலும் வலியுறுத்த விரும்புகின்றேன்.
எமது நாட்டில் எமது மக்கள் தங்களது உரிமைகளைப் பெறுவதற்காக காலம் காலமாகப் போராடியே வந்துள்ளனர். அந்தப் போராட்டங்கள் அகிம்சை வழிப் போராட்டங்களாக உருவாகியிருந்த நிலையில் இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு முன்னரான தென்னிலங்கை அரசுகளின் மாற்றாந்தாய் மனப்பாங்கிலான போக்குகள் அதிகரித்ததன் காரணமாகவே ஆயுதப் போராட்டங்களை நோக்கி அது தள்ளப்பட்டிருந்தது. அந்த வகையில் அந்த ஆயுதப் போராட்டத்தின் ஒரு வெற்றியாகவே இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் ஊடான மாகாண சபை முறைமை எமக்குக் கிடைத்தது. அதே நேரம், இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்குப் பிந்திய தென்னிலங்கை அரசுகள் குணாம்ச ரீதியில் நல்ல மாற்றங்களையே கொண்டிருக்கின்றன என்பதில் எமக்கு நம்பிக்கையுண்டு.
இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்குப் பின்னரான எமது போராட்டம் திசை மாறிப் போன ஒரு காலகட்டத்தை நாம் கண்ணுற்றுள்ளோம். அதன் விளைவுகளை நாம் அனுபவித்துள்ளோம். அனுபவித்து வருகின்றோம். அந்த விளைவுகள் எமது மக்களைவிட்டு இன்னும் முழுமையாக அகன்றுவிடவில்லை. அவை அகன்றுச் செல்வதற்கான சந்தர்ப்பங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
எமது மக்கள் தொடர்ந்தும் போராட்ட அடிமைகள் அல்ல. எனவே, எமது மக்களும் மனிதர்களாக, இந்த நாட்டின் ஏனைய மக்கள் கொண்டிருக்கின்ற உரிமைகளை அனுபவிக்கின்ற மக்களாக வாழ வேண்டும் என்பதே எமது எதிர்பாரப்பாகும்.
குறுகிய இனவாத செயற்பாட்டாளர்களின் குரலுக்கு அஞ்சியே எமது மக்களின் உரிமைகள் தடுக்கப்படுகின்றது என்றால், தமது உரிமைகள் குறித்த எமது மக்களின் குரலும்கூட அதே இனவாதக் கும்பலுக்கு சாதமாகவே பயன்பட்டு வருகின்ற ஒரு சுழல் போக்கினையே இன்று கண்டு வரக்கூடியதாக இருக்கிறது.
எமது மக்களது பிரச்சினைகளை எவரேனும் இனவாதக் கண்ணோட்டத்தில் பார்ப்பார்களேயானால், அவர்களுக்கு இந்த நாட்டின் மீதும், நாட்டு மக்களின் மீதும் உண்மையான பற்றில்லை என்பதே அர்த்தமாகும்.
எனவே, எமது நாட்டில் எமது மக்களின் உணர்வுப்பூர்வமான பிரச்சினைகள் முதற்கொண்டு, அடிப்படை வசதிகள் அடங்கலாக, அரசியல் உரிமைப் பிரச்சினை என அனைத்துப் பிரச்சினைகளும் எந்தளவு விரைவாகத் தீர்க்கப்படுமோ அந்தளவு விரைவாக எமது நாட்டில் சுபீட்சமே மலரும் என்பதில் சந்தேகமில்லை.
இவ்வாறான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எமது மக்கள் உண்ணாவிரதங்கள் இருக்கும் வரையிலோ அல்லது ஜெனீவா கூட்டுத் தொடர் வரும் வரையிலோ காத்திருக்கத் தேவையில்லை. எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக் கொள்ள வேண்டும். அதனை சரியாகத் தீர்த்துக் கொள்வதற்கு அனைத்துத் தரப்பாரும் முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.
மேலும், வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரையில் பல்வேறு தரப்பினரால் கோவில்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பல ஏக்கர் காணிகள் உள்ளன. இவ்வாறான காணிகளில் குறிப்பிட்ட காணிகள் சிலவற்றில் மக்கள் வசித்து வருகின்ற போதிலும், அவர்களுக்கான உறுதிகள் இல்லாத காரணத்தினால் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களது வீடமைப்புத் திட்டங்கள் அடங்கலாக ஏனைய உதவிகள் எதனையும் பெற இயலாத நிலையிலேயே அம் மக்கள் பெரும் பாதிப்புகளுக்கு உட்பட்ட நிலையில் காலங் காலமாக வாழ்ந்து வருகின்றனர்.
எனவே, இத்தகைய மக்களுக்கு வசதியாகவும், மேலும் காணிகளின்றி அவதியுறுகின்ற மக்களுக்கு வசதியாகவும், வாய்ப்பாகவும் ஒரு விசேட ஏற்பாட்டின் கீழ், குறிப்பிட்ட காலக் குத்தகை என்ற அடிப்படையில் இந்த காணிகளைக் கொண்டிருக்கின்ற கோவில்களுக்கு ஒரு வருமானம் என்ற வகையில் குறிப்பிட்டதொரு நியாயமான தொகையினை வழங்கி, அக் காணிகளைப் பெற்று உறுதிப் பத்திரங்களுடன் காணியில்லா மக்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இது தொடர்பில் இந்த அரசு உரிய கவனம் எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
அத்துடன், எமது பகுதிகளில் காணப்டுகின்ற காணிப் பிணக்குகளைத் தீர்த்து வைப்பதிலும் துரிதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டியதுள்ளதையும் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையானது இன்னும் சாத்தியப்படாத ஒரு விடயமாகவே உள்ளது. தமிழ் அரசியல் கைதிகளோ அல்லது அவர்களது உறவினர்களோ உண்ணாவிரதப் போராட்டங்கள் இருந்தால்தான், இந்தக் கைதிகளின் விடுதலையைப் பற்றிப் பேசுவதற்கு, கைதிகளை விடுவித்துத் தருவோம், எமக்கு வாக்களியுங்கள் என வாக்குறுதிகள் வழங்கி, அந்தக் கைதிகளின் உறவுகளிடமிருந்தும் வாக்குகளைப் பெற்று வந்தவர்கள் பழகிப்போயுள்ள இன்றைய நிலையில், அந்தக் கைதிகளின் விடுதலையைப் பற்றியும் இந்தச் சபையிலே மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன்.
தங்களது உறவுகளை சிறையிலிருந்து விடுவித்துத் தருவதாக தொடர்ந்து வாக்குறுதிகளை வழங்கி, தங்களது வாக்குளை மாத்திரம் கடந்த காலங்களில் பெற்று, அரசியல் பதவிகளைப் பிடித்துக் கொண்டவர்கள் மீது தற்போது எமது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். இந்த நிலையில், தன்னைக் கொலை செய்ய வந்த நபரையே பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்த மேன்மைதங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் தலையிட்டு, அவர்களை மனிதாபிமான அடிப்படையில் சிறையிலிருந்து விடுவிப்பதற்கு முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: