எமது மக்கள் கையேந்து நிலைக்கு காரணம் தவறான தமிழ் அரசியல் தலைமைகளே – டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு

Monday, July 31st, 2017

இருப்பதை பாதுகாத்துக்கொண்டு அதிலிருந்து முன்னேற்றங் காணச்செய்யும் நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டே எமது கட்சியின் செயற்பாடுகள் மக்கள் நலன்சார்ந்து முன்னெடுக்கப்படுகின்றன என்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தொண்டமனாறு பெரியகடற்கரை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவிக்கையில் –

கடந்தகால தவறான அரசியல் வழிநடத்தல்களால் எமது மக்கள் கையேந்தும் நிலைக்கு தள்ளிவிடப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அந்த மக்களை தொழில்துறை ரீதியில் முன்னேற்றம் காணச்செய்து  அவர்களது வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் முன்னேற்ற வேண்டியது அவசியமானது.

கடந்தகாலங்களில் நாம் முன்னெடுத்த இணக்க அரசியல் என்பது இருப்பதை பாதுகாத்துக்கொண்டு அதிலிருந்து மக்களை முன்னேற்றங் காணச்செய்யும் நோக்குடனேயே முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று இணக்க அரசியல் என்ற பேரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கூனல் அரசியலை முன்னெடுத்து எமது மக்களின் வாழ்வியலை அதல பாதாளத்திற்கு இட்டுச்செல்கின்றனர். இதை மக்கள் தற்போது உணர்ந்துகொள்ளவும் தொடங்கியுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

இதன்போது தொண்டமனாறு ஆற்றுப்படுக்கையில் அமைக்கப்பட்டுள்ள அணை காரணமாக  நன்னீர் மீன்பிடித் தொழில்முறை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக பல நூற்றுக்கணக்கான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நாளாந்தம் பல்வேறுபட்ட அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கவேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

அதுமட்டுமன்றி தொண்டமனாறு சந்நிதி கோவிலின் வருடாந்த உற்சவம் ஆரம்பமாக உள்ள நிலையில் சுவாமி தீர்த்தமாடும் பகுதியில் தேங்கியுள்ள நீர் அசுத்தமைடைந்துள்ளதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் இதுவிடயம் தொடர்பாக துறைசார்ந்த அதிகாரிகளுக்கு பலமுறை தெரியப்படுத்தியிருந்தபோதிலும்        எவ்விதமான நடவடிக்கைகளும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என்றும் மக்களால் தெரிவிக்கப்பட்டது. அங்குள்ள கடற்கரை சுற்றுலா மையம் தொடர்பிலும் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு மக்கள் கொண்டுவந்திருந்தனர்.

இதனிடையே வல்லிபுரம் திருமால்புரம், அல்வாய் பகுதி மக்களையும் டக்ளஸ் தேவானந்தா சந்தித்ததுடன் அவர்களது குறைபாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.

இதன்போது கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் வல்வெட்டித்துறை பிரதேச நிர்வாகச் செயலாளர் கைலாஜினி பருத்தித்துறை நகர நிர்வாகச் செயலாளர் இரட்ணகுமார் மற்றும் பருத்தித்துறை பிரதேச நிர்வாக செயலாளர் விசிந்தன் ஆகியோர் உடனிருந்தார்.

Related posts:


கொடிகாமம் - பருத்தித்துறை – காங்கேசன்துறை வரையிலான ரயில் சுற்றுவட்ட சேவை உருவாக்கப்பட வேண்டும் - சபை...
இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை உறுப்பினர்களுடன் அமைச்சர் டக்ளஸ்...
நீண்ட கால இழுபறிக்கு வழங்கப்பட்டது தீர்வு - சாவகச்சேரி சமுர்த்தி வங்கிக்கான நிரந்தர கட்டிடம் அமைக்க ...