எமது மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தீர இன்னும் எத்தனை வருடங்கள் எடுக்கும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Thursday, December 7th, 2017

எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் பங்களித்து வருகின்ற மலையக மக்களுக்கே 150 வருடங்கள் கழிந்தும் இந்த நாட்டில் இந்த நிலை எனும்போது, கடந்தகால யுத்தம் காரணமாக அனைத்தையும் இழந்து, எட்டே வருடங்கள் கழிந்துள்ள நிலையில், எமது நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரிதும் பங்களிப்பு வழங்கக்கூடிய வாய்ப்புகள் இருந்தும், அந்த வாய்ப்புகள் தடுக்கப்பட்டும், மறுக்கப்பட்டும், சுரண்டப்பட்டும் தங்களுக்குரிய வாழ்வாதாரங்களையே போதியளவு ஈட்டிக்கொள்ள இயலாத நிலையில் இருக்கின்ற வடக்கு – கிழக்கு மாகாண மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தீர இன்னும் எத்தனை வருடங்கள் எடுக்குமோ? என்ற சந்தேகமே எனக்கு ஏற்பட்டுள்ளது – என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்;.

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள், மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு, சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு, தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சு, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு, உரையாற்றுகையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

வலிகாமம் வடக்கிலிருந்து  26 வருடங்களுக்கு முன்பதாக இடம்பெயர்ந்துள்ள மக்களில் பலர் இன்னமும் முகாம்களிலும், தற்காலிகக் கொட்டில்களிலும், மண்ணால் கட்டப்பட்ட சிறு சுவர்களைக் கொண்ட குறுகிய வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். இருப்புக்காக தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட நிலையிலேயே வாழ்ந்து வருகின்ற இம் மக்கள், மழைக் காலங்களில் மிக அதிகமாகவே பாதிக்கப்படுகின்றனர். இவர்களது சொந்த காணி, நிலங்கள் இந்த மக்கள் மீளக் குடியேற முடியாத வகையில் பாதுகாப்பாகவே வைக்கப்பட்டுள்ளது. தங்களது சொந்த காணி, நிலங்களை விடுவித்துத் தருமாறு எல்லோரிடமும் கேட்டுவிட்டார்கள். போராட்டங்களையும் நடத்திவிட்டார்கள். இதுவரையில், நடந்தது ஒன்றுமே இல்லை.

கிளிநொச்சி மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளிலுமாக மேலும் 741 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 2,422 பேர் தங்களது சொந்த இடங்களில் தங்களை மீளக் குடியமர்த்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இத்தகைய நிலையில், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் வெடி பொருட்களை அகற்றுவதில் தாமதங்கள் ஏற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில், மீள்குடியேறியுள்ள மக்களுக்கு 11 ஆயிரத்து 786 புதிய வீடுகள் தேவை என்றும், ஆயிரத்து 96 வீடுகள் புனரமைக்கப்பட வேண்டியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

வவுனியா மாவட்டத்திலும் இதே நிலைமையே காணப்படுகின்றது. பல்வேறு கிராம மக்கள் மீள்குடியேறியுள்ள நிலையிலும் வீட்டு வசதிகளின்றியும், அடிப்படை வசதிகளின்றியுமே வாழ்ந்து வருகின்றனர். அந்தவகையில், வவுனியா தாலிக்குளம் கிராம மக்கள் மீளக்குடியேறி 10 வருடங்களாகியும் தங்களுக்கு வீடமைப்புத் திட்டங்கள் இல்லை எனக் கூறி அண்மையில் ஓர் ஆர்ப்பாட்டத்தினை நடத்தியிருந்தனர்.

இப்படியான பிரச்சினைகள், தேவைகள் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் பல பகுதிகளிலும் இல்லாமல் இல்லை. அவை அனைத்தையும் குறிப்பிட்டுக் கூறுவதற்கான நேரம் போதுமானதாக இல்லை என்பதால் ஓரிரு உதாரணங்களை மாத்திரமே இங்கு குறிப்பிடுகின்றேன்.

Related posts: