எமது பூர்வீக நிலங்களை விடுவித்து தாருங்கள் – வாயாவிளான் மீள்குடியேற்ற சங்க பிரதிநிதிகள் டக்ளஸ் எம்.பி.யிடம் கோரிக்கை!

Thursday, September 26th, 2019

பல தசாப்தங்களாக எமது பூர்வீக நிலங்களிலிருந்து யுத்தம் காரணமாக வெளியேற்றப்பட்டு வேற்று பிரதேசங்களில் பல அசௌகரியங்களுடன் வாழ்ந்துவரும் எமக்கு எமது பூர்வீக நிலங்களை மீட்டுத் தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் வயாவிளான் பிரதேச மீள்குடியேற்ற சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம்  குறித்த பிரதேச  மீள்குடியேற்ற சங்க பிரதிநிதிகள் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து தமது பிரச்சினைகள் தொடர்பில் தெரியப்படுத்தியிருந்தனர். இதன்போதே அவர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்-

கடந்த ஆட்சிக்காலத்தில் தாங்கள் எடுத்த கடும் முயற்சி காரணமாக வலி.வடக்கின் கணிசமான  காணி நிலங்கள் மீள எமது மக்களுகு பெற்றுத்தரப்பட்டிருந்தன. ஆனாலும் ஆட்சி மாற்றத்தின் பின்னர் அது மந்தகதியானது.

அதிகாரத்தை தாங்கள் கைப்பற்றுவதற்காக கடந்த தேர்தல் காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பல்வேறு கோசங்களை முன்வைத்து அனைத்தையும் பெற்றுத்தருவோம் எனக் கூறி வாக்குகளை பெற்று இன்றுள்ள ஆட்சியாளர்களுக்கு ஒத்தாசை கொடுத்து ஆட்சியை தாங்கிப்பிடித்தனர். ஆனால் அவர்கள் வழமை போன்றே எம்மை ஏமாற்றிவிட்டனர்.

நாட்டில் நடைபெற்ற யுத்தம் காரணமாக சுமார் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்த சொந்த பூர்வீக நிலங்களை விட்டு வெளியேறி பிற பிரதேசங்களில் வாழ்ந்துவரும் நாம் தற்போது எமது பூர்வீக நிலங்களுக்கு மீளச் செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆனாலும் எமது பிரதேச காணி நிலங்கள் இன்னமும் முழுமையாக வழங்கப்படாத நிலை காணப்படுகிறது.

அதுமட்டுமல்லாது தற்போதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமது சுயநலத்திற்காக பலாலி விமான நிலைய நுழைவாயிலையும் மாற்றியமைத்துள்ளனர். இது எமது இயல்பு நிலையை மட்டுமல்லாது எதிர்காலத்தில் எமது காணிநிலங்களை பெற்றுக்கொள்ள முடியாத வகையில் அமையக் கூடிய வாய்ப்புக்கள் இருப்பதால் அதனை நிறுத்தி ஏற்கனவே இருந்த நுழைவாயிலை புனரமைக்கப்படும் பலாலி விமான நிலையத்தின் நுழைவாயிலாக புனரமைக்க வழிவகை செய்யவேண்டும் என தங்களிடம் கோரிக்கையாக முன்வைக்கின்றோம் என தெரிவித்தனர்.

குறித்த பிரதிநிதிகளின் பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்திய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தற்போது தேர்தல் காலம் என்பதால் இது குறித்து கூடுதல் அவதானம் செலுத்தமுடியும். ஆனால் அதனை பேரம் பேசி பெற்றுத்தரக்கூடிய நிலை இல்லாதுள்ளது. இந்த நிலை மாறவேண்டுமானால் வரவுள்ள ஜனாதிபதி தேர்தலூடாக வரவுள்ள ஆட்சி மாற்றத்தில் எமது பங்களிப்பும் அதிகளவில் இருக்கவேண்டும்.

நாம் ஆட்சியாளர்களுடன் பங்காளிகளாக இருக்கவேண்டும் என கூறிவருகின்றேன். நாம் கூறும் வழிமுறைதான் சாதகமானதும் யதார்த்தமானதுமானது என்பதை இன்று அனைவரும் ஏற்றுள்ளனர். அந்தவகையில்தான் எம்மை நம்புங்கள் நாம் நீங்கள் எதிர்பார்க்கும் அபிலாசைகளை வென்றெடுத்துத் தர முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:


இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும்! -  டக்ளஸ் தேவானந்...
பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்களது பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் - நாடாளுமன...
இடை நிறுத்தப்பட்ட பணியாளர்களின் நிலை தொடர்பில் அமைச்சரவையில் எடுத்துரைப்பேன் - அமைச்சர் டக்ளஸ் தேவான...