எமது நாட்டின் வளங்களுக்கு ஏற்ற வகையில் வன விலங்குகளுக்கான கட்டுப்பாட்டு முறைமைகள் தேவை – டக்ளஸ் தேவானந்தா!

Friday, November 24th, 2017

தற்போதைய வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்த வரையில் எத்தகையப் பயிர்ச் செய்கைகளை மேற்கொண்டாலும், காட்டு விலங்கினங்களிடமிருந்து அவற்றைக் காப்பாற்றுவதும், மக்களது உயிர்களைக் காப்பாற்றுவதும் பெரும் பிரச்சினையாகவே இருந்து வருகின்றது. ஈது தொடர்பில் கூடிய அவதானம் செலுத்தப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய தினம் காணி, நாடாளுமன்ற அலுவல்கள், பெருந்தோட்டக் கைத்தொழில், வலுவாதார மற்றும் வனஜீவராசிகள் ஆகிய அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு, உரையாற்று கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

அந்த வகையில், மிக அண்மைக்காலங்களில் வடக்கு மகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் காட்டு யானைகள் தொல்லை காரணமாக மக்கள் அன்றாடம் பீதியுடன் வாழ்ந்து வருகின்ற நிலைமைகளே காணப்படுவதுடன், பயிர்ச் செய்கையில் சுமார் 40 வீதமான பயிர்களை இவை அழித்து வருகின்ற நிலைமைகளும் தொடர்கின்றன.

மாங்குளம் – முல்லைத்தீவு வீதி, ஏ – 9 வீதி, கொக்காவில் ஐயன்குளம் ஊடான மல்லாவி வீதி போன்ற வீதிகளில் யானைகளின் அதிகமான நடமாட்டங்கள் காணப்படுவதால் பயணிகளும் அதிகம் பாதிக்கப்படுகின்ற நிலைமைகள் உருவாகியுள்ளன.

இந்தப் பிரச்சினை தொடர்பில் பார்க்கும்போது, காடழிப்பு நடவடிக்கைகள், காட்டுத் தீ, விறகு சேகரிப்புகள் போன்றவற்றால் வன விலங்குகளின் உணவுத் தாவரங்களை அழித்தல், பிளாஸ்ரிக் பொருட்களை காடுகளில் விட்டுச் செல்லல், வன ஜீவராசிகளை அச்சுறுத்தும் குடியிருப்புக்கள், கள்ளிச் செடிகள், போதிய நீர் வளமின்மை, வன ஜீவராசிகளின் பாதைகளை ஆக்கிரமித்தல் போன்ற காரணங்களால் யானைகள் அவற்றின் இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றன.

எனவே, எமது மக்களின் தற்போதைய மற்றும் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, மேற்படி பிரச்சினைக்கு நிரந்தரமானதும், நிலையானதுமான ஒரு தீர்வை நாம் தேட வேண்டியிருக்கிறது. குறிப்பாக எமது நாட்டின் வளங்களுக்கு ஏற்ற வகையில் வனவிலங்குகளுக்கான கட்டப்பாட்டு முறைமைகள் தேவை என்றே கருதுகின்றேன். அதிகரித்து வருகின்ற மக்கள் தொகையும், அதிகரித்து வருகின்ற வனவிலங்குகளும் என்ற ரீதியில் தொடர்ந்தால், மனிதர்களுக்கும், வனவிலங்குகளுக்கும் இடையிலான மோதல் நிலையானது எதிர்காலத்தில் மிகவும் உக்கிரம் அடைகின்ற வாய்ப்புகளே அதிகமாகக் காணப்படுகின்றன.

காட்டு யானைகளிடமிருந்து மனித உயிர்களையும், பயிர்களையும் காப்பாற்றும் நோக்கில் மின்சார வேலிகள் அமைக்கப்படுகின்றன. அண்மையில் மேற்படி மின்சார வேலி தாக்கி யானையொன்று மரணித்துள்ள சம்பவமும் எமது நாட்டில் இடம்பெற்றிருந்தது. மேலும், ஒரு மின்சார வேலி என்பது 10 – 12 வருடங்களுக்கே நிலைக்கக்கூடியதாக இருக்கின்றது. அவற்றில் பாதுகாப்பு கருதிய போதிய அம்சங்களும் இல்லை என்றே கூறப்படுகின்றது.

அந்த வகையில் நான் ஏற்கனவே முன்வைத்திருந்ததன் பிரகாரம், இதற்கொரு மாற்று ஏற்பாடாகவும், நிரந்தர – நிலையான தீர்வாகவும் மிக நீண்ட காலமாக பலரது ஆலோசனையாக இருப்பது பனை மர வேலியாகும். அதாவது, பனை மரங்களை வளைந்து, வளைந்து செல்லும் வகையில் நான்கு வரிசைகளில் நடுதலாகும்.

இது, நடைமுறைச் சாத்தியமானதொரு வழிமுறையாகும் என்றே நான் கருதுகின்றேன். பனை மரமானது ஏழு, எட்டு வருடங்களில் போதியளவு வளர்ந்துவிடும். மேலும், ஒரு கிலோ மீற்றர் பனை மர வேலியில் சுமார் 2,500 மரங்கள் உள்வாங்கப்படுவதால், இவற்றின் மூலம் வருடத்திற்கு குறைந்தது 270 மெற்றின் தொன் சத்தான உணவுப் பொருட்களை வனஜீவிகள் பெறவும், அயலக கிராமங்களின் மக்களுக்கு உணவு மற்றும் சிறு கைத்தொழில்களை ஏற்படுத்திக் கொள்ளவும் இயலுமாக இருக்கும். அத்துடன், வெள்ளம், காற்று, மழை என்பவற்றை எதிர்த்து வளரக்கூடியவை. இதன் மூலமாக காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதை தடுக்கும் அதே வேளை, ஆகக் குறைந்தது சுமார் 100 வருடங்கள் வரை பொருளாதார மற்றும் சுற்றுச் சூழல் பயன்களைப் பெற்றுக் கொள்ளவும் கூடியதாக இருக்கும் என்றே கருதுகின்றேன்.

இவ்விடயம் குறித்து கௌரவ அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா அவர்கள் அவதானத்தில் எடுப்பார் என நம்புகின்றேன். அவருடைய செயற்பாடுகள்மீது அதிக நம்பிக்கை கொண்டவன் நான். அந்தவகையில்; உரிய ஆளணிகளும், வளங்களும் அவருக்கு வழங்கப்பட வேண்டும்.

Untitled-5 copy

Related posts:


இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களை மேலும் கௌரவிக்க கொள்கை ரீதியில் நடவடிக்கை எடுக்கவேண்டும் - டக்ளஸ் தேவ...
புலம்பெயர் தமிழ் மக்களின் உற்பத்தி முயற்சிகளை எம் தாயக தேசமெங்கும் ஊக்குவிப்போம் - டக்ளஸ் தேவானந்தா!
அச்சுவேலி - மூளாய் சிற்றூர்தி சேவை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் உத்தியோகபூர்வமாக ஆரம்ப...