எமது நாட்டின் கல்விக் கொள்கையால் மாணவர்கள் புத்தகப் பைகளைச் சுமந்தே கூனாகிப் போய்விடுகின்றனர் – டக்ளஸ் தேவானந்தா!

download (6) copy Friday, March 9th, 2018

எமது நாட்டைப் பொறுத்தவரையில் 5 வயது முழுமை பெற்றவுடன் கல்வி, 5ஆம் தரத்தில் புலமைப் பரிசில் பரீட்சை என்ற மாபெரும் சவால், என்பதுடன் புத்தகப் பைகளைச் சுமந்தே கூனாகிப் போகின்ற எமது மாணாக்கரின் முதுகுகள் என்ற நிலையே தொடர்கின்றது. இந்நிலை மாற்றப்படவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக உள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா  தெரிவித்துள்ளார்.

வணிகக் கப்பற்றொழில் சட்டத்தின் கீழான கட்டளைகள், தேசிய கல்வி ஆணைக்குழு தொடர்பாக நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தின் பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும்  கருத்து தெரிவிக்கையில் –

பின்லாந்தின் கல்வித்துறையானது இன்று உலகின் மிகச் சிறந்த கல்வித் துறையாக விளங்குகின்றது. புதிய கண்டுபிடிப்புகள் பல கண்டுபிடிக்கப்பட்டுவரும் நாடாகவும் அந்நாடு உலகில் முன்னேறிக் கொண்டிருக்கின்றது. இங்குள்ள கல்விக் கொள்கையானது சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு முன்பதாக வகுக்கப்பட்டது.

பின்லாந்தில் ஒரு மாணவன் 7 வயதிலேயே பாடசாலைக்கு உள்வாங்கப்படுகின்றார். ஒரு நாளைக்கு 4 மணி நேரம் என்ற அடிப்படையில், வாரத்துக்கு 20 மணித்தியாலங்களே கல்வி கற்பிக்கப்படுகின்றன. 26 வகையான கற்றல் துறைகள். 7 வயதிலே மாணவர்கள் பயணிக்க வேண்டிய துறையானது இனங்காணப்படுகின்றது. துறைசார் கற்ற ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். ஒரு ஆசியருக்கு 20 மாணவர்கள். மாணவர்கள்மீது தனியான – விசேட கவனம் செலுத்தப்படுகின்றது. பரீட்சை முறைகள் தவிர்க்கப்பட்டு, தொடர் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. 13 வருட கட்டாயக் கல்வி என்பவைதான் பின்லாந்தின் கல்விப் பாரம்பரியம்.

பின்னலாந்தில் ஆசிரியர்கள் மேலான தளத்தில் வைத்து மதிக்கப்படுவதுடன், வெளிநாட்டு விவகாரங்களில் ஈடுபடுகின்ற இராஜதந்திரிகளுக்கு வழங்கப்படுகின்ற ஊதியத்திற்கு சமமான ஊதியம் இவர்களுக்கு வழங்கப்படுகின்றது.

அத்துடன் பின்லாந்து மாணவர்கள் தனது 7ஆவது வயதிலேயே 26 துறைகளுக்காகத் தனித்தனியே இனங்காணப்படுகின்றனர். நாங்கள் மருத்துவர்களாகவே வரவேண்டும், நாங்கள் பொறியியலாளர்களாகவே வர வேண்டும் என அவர்கள் அனைவருமே ஆசை கொள்வதில்லை. 13 வருட கட்டாயக் கல்வியின் பின்னர் அவர்கள் பல்கலைக்கழகம் அல்லது தொழிற் கல்வி நிறுவனங்களில் இணைகின்றனர். எமது நாட்டில் தொழிற் கல்வி என்பது மூன்றாம் நிலைக் கல்வியாகக் காணப்படுகின்றது என்றார்.


எதிர்காலத்தில் இலவசக் கல்வி இல்லாது போய்விடுமோ? நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தகேள்வி!
சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு முறையான நியமனக் கடிதங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - நாடாள...
அழியும் மரபுரிமைச் சொத்தான நெடுந்தீவுக் குதிரைகளைக் காப்பாற்றுங்கள் - டக்ளஸ் தேவானந்தா!
நாம் மக்களிடம் வாக்குக் கேட்பது மக்களின் நலன்களுக்காகவே - தம்பலகாமத்தில் டக்ளஸ் எம்.பி.
மக்களின் தேவைகளை அறிந்து சேவை செய்பவர்களை வெற்றிபெறச் செய்யுங்கள் - கண்டாவளையில் டக்ளஸ் எம்.பி. தெரி...