எமது கடல் வளங்களை எவரும் சட்டவிரோதமான முறையில் சுரண்டுவதற்கு அனுமதிக்க முடியாது – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, August 22nd, 2020

எனக்கு வழங்கப்பட்டிருக்கும் அமைச்சானது இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாததொரு அமைச்சாகும். மீளவும் இந்த அமைச்சை எனக்கு வழங்கியதற்காகவும் நல்லதொரு இராஜாங்க அமைச்சரை – கௌரவ கஞ்சன விஜயசேகர அவர்களையும் செயலாற்றல் மிக்க செயலாளராக திருமதி இந்து ரத்நாயக்க அவர்களையும் வழங்கியதற்காகவும் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களுக்கும் கௌரவ பிரதமர் அவர்களுக்கும் கௌரவ பசில் ராஜபக்ச அவர்களுக்கும் எமது மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எமது இந்த கடற்றொழில் அமைச்சின் மூலமாக குறிப்பாக கரையை அண்டியதான கடல் தனித்துவ பொருளாதார வலயத்திற்கு உட்பட்ட கடல் சர்;வதேச கடல் என அனைத்து நிலைகளிலும் கடற்றொழிலை நவீன தொழில்நுட்பங்களுடன் மேலும் விரிவாக்கம்; செய்வதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கென நவீன தொழில்நுட்பங்களை உள்வாங்கிக் கொள்வதற்கும் அவை தொடர்பில் கடற்றொழிலாளர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதற்குமான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட உள்ளமையையும் இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

அதேநேரம் நன்னீர் உள்ளிட்ட அனைத்து நீரியல் வளச் செய்கைகளை மேலும் பரவலாக்கி மேம்படுத்தும் ஏற்பாடுகளும் அதன் நிலப் பரப்புகளை அதிகரிக்கும் ஏற்பாடுகளும் இத்துறையை மனைக் கைத்தொழிலாக முன்னெடுக்கக்கூடிய ஏற்பாடுகளும் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நாட்டில் கடற்றொழில் மற்றும் நன்னீர் உள்ளிட்ட நீரியல் வளச் செய்கை கைத்தொழில்கள் மூலமாக நாட்டு மக்களிடையே போசாக்கினை வளர்ப்பதும் இத் தொழிற்துறைகளில் ஈடுபட்டுள்ள மக்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும் எமது முக்கிய நோக்கமாகும். அதற்கென நியாய விலையில் நீரியல் சார்ந்த உணவுகளை நுகர்வோர் கொள்வனவு செய்வதற்கும் அதேநேரம் இத்தொழிற்துறைகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு நியாயமான விலை அவர்களது அறுவடைகளுக்காகக் கிடைப்பதற்கும் ஒரு பொறிமுறையினை நாங்கள் உருவாக்கி வருகின்றோம்.

இறக்குமதிகளை நிறுத்தி  கடலுணவு மற்றும் நன்னீர் உள்ளிட்ட நீரியல் வளம் சார்ந்த உணவு வகைகளில் இந்த நாட்டை தன்னிறைவு காணச் செய்வதும் ஏற்றுமதிக்கு ஏற்பாடு செய்து அதிகளவில் அந்நியச் செலாவணியை ஈட்டிக் கொடுப்பதும் எமது கொள்கையாகும்.

அத்துடன் கடற்றொழில் மற்றும் ஏனைய நீரியல் வள செய்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தனியான வங்கி முறைமையொன்றை ஏற்படுத்துவதற்கும் நிலையான காப்புறுதித் திட்டமொன்றை முன்னெடுப்பதற்கும் நாம் ஆராய்ந்து வருகின்றோம்.

எமது கடல் வளங்களை எவரும் சட்டவிரோதமான முறையில் சுரண்டுவதற்கு நாம் அனுமதிக்க முடியாது. அத்தகைய சுரண்டல்களைத் தடுத்து நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களது வழிகாட்டலின் கீழ் நிச்சயமாக நாம் முன்னெடுப்போம் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தள்ளார்.

9 வது நாடாளுமன்றத்தை ஆரம்பித்து வைத்து மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்கள் ஆற்றிய கொள்கைப் பிரகடன உரை தொடர்பில் நேற்றையதினம்(21) நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்

Related posts:


மலேரியாவை ஏற்படுத்தும் நுளம்புகள் வடக்கில் மட்டும் பரவியது எப்படி? நாடாளு மன்றத்தில் டக்ளஸ் எம்.பி க...
கிடைக்கப்பெறுகின்ற வளங்களைப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் காணவேண்டும் - முல்லைத்தீவில் டக்ளஸ் தே...
வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படக் கூடிய கடல் வள தொழில் துறை முயற்சிகள் தொடர்பில் துறைசார் அதிகாரி...