எமக்கு கிடைத்த சபைகளை வினைத்திறன் மிக்க சபைகளாக வழிநடத்தி செல்வோம் – ஊர்காவற்றுறையில் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, February 14th, 2018

நடந்துமுடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சி செய்ய முடியாத நிலையில் ஊர்காவற்துறையிலும் எமக்கு தனித்து ஆட்சி செய்யும் ஆணையை இப்பகுதி மக்கள் வழங்கியிருக்கிறார்கள்.

அந்தவகையில் இப்பகுதியில் கடந்த காலங்களில் நாம் முன்னெடுத்துச் சென்ற பெரும் பணிகளை தொடர்ந்தும் செய்வதற்கு வழிகோலியுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் ஊர்காவற்றுறைக்கு வியஜம் மேற்கொண்ட செயலாளர் நாயகம் குறித்த பகுதியின் பொதுச்சபை உறுப்பினர்கள் நிர்வாக உறுப்பினர்களுடனான சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

தீவகத்தில் நாம் வெல்ல வேண்டும் என அயராது உழைத்த எமது வேட்பாளர்கள், ஆதரவாளர்கள், தொண்டர்கள், தோழர்கள், கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் நாம் நன்றி கூறுகின்றோம்.

அத்துடன் எமது வெற்றிக்கு வாக்களித்த மக்களுக்காக மட்டுமல்லாது எமக்கு வாக்களிக்காத  மக்களின் மனங்களையும் வென்றெடுக்கும் வகையில் எமது வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

நாம் நிர்வகிக்கும் சபையானது முன்மாதிரியாகவும் செயற்றிறன் மிக்கதாகவும் அமையவேண்டும் எனவும் தெரிவித்த செயலாளர் நாயகம் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதிலும் தடைப்பட்டுக் கிடந்தவற்றை தொடர்ந்தும் முன்னெடுப்பதிலும் முன்னுரிமை அடிப்படையில் தொடர்ந்தும் உழைக்கவேண்டும் என்றும் கூறினார்.

அதேவேளை தீவகத்தில் காணப்படும் வளங்களைப் பாதுகாப்பதுடன் பயன்பாடற்றுக் கிடக்கும் தரிசு நிலங்களை பயன்பாட்டு நிலங்களாக மாற்றவும் விவசாய நிலங்களாக மாற்றியமைக்கவும் வேண்டும் என்றும் தெரிவித்ததுடன் இப்பகுதியில் காணப்படும் கடல் வளத்தை நவீன மயப்படுத்தி மக்களது வாழ்யில் ஒரு மாற்றத்தை கொண்டுவருவதுடன் இப்பகுதியை ஒரு வளமான பிரதேசமாகவும் மாற்றியமைக்க நாம் நிச்சயம் வழிசமைப்பொம் என்றும் அவர் தெரிவித்தார்.

இதன் போது கட்சியின் ஊடகச் செயலாளர் தோழர் ஸ்ராலின் கட்சியின் மாவட்ட நிர்வாகச் செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் ஊர்காவற்றுறை பிரதேச நிர்வாகச் செயலாளர் ஜெயகாந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related posts: