எனது கோரிக்கைகளை இந்தியா நிறைவேற்றித் தந்தது – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா M.P. தெரிவிப்பு!
Thursday, September 21st, 2017
நான் 2010ஆம் ஆண்டு அரசாங்கத்தின் தூதுக் குழுவுடன் சேர்ந்து இந்தியாவுக்குச் சென்றிருந்தபோது, அப்போது பிரதமராக இருந்த மன்மோகன்சிங் அவர்களிடம் யுத்தத்தால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருந்த எமது பிரதேசங்களின் அபிவிருத்தி சார்ந்தும், எமது மக்களின் மீள் எழுச்சி தொடர்பாகவும் பல கோரிக்கைகளை விடுத்திருந்தேன்.
அதில் வட மாகாணத்திற்கான புகையிரதப் போக்குவரத்துப் பாதைகளை மீளப் புனரமைப்பதும், வீடுகளை இழந்து மீள் குடியேற்றத்திற்காகக் காத்திருக்கும் மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகளைக் கட்டித்தர வேண்டும் என்றும், யாழ்ப்பாணத்தில் கலாசார மண்டபம் ஒன்றை அமைத்துத்தர வேண்டும் என்றும், அழிந்து கிடந்த பனை ஆராய்ச்சி நிலையத்தைப் புனரமைத்துத் தர வேண்டும் என்றும், அச்சுவேலி தொழில் பேட்டையை மீள உயிர்ப்பிக்க உதவ வேண்டும் என்றும்,
விவசாயத்தை ஊக்குவிக்க உழவு இயந்திரங்களும், தூரப் பிரதேசங்களிலிருந்து பாடசாலைக்கு நடந்து செல்லும் மாணவர்களுக்காகவும், மீளக்குடியமர்ந்த வர்களுக்காகவும் 25,000 சைக்கிள்களை வழங்கி உதவ வேண்டும் என்றும்,
தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்க முதலீட்டுக்கான நிதி உதவிகளைச் செய்துதர வேண்டும் என்றும், வடக்கின் மீன்பிடி வலைகள் தாயாரிப்புச் செய்து தருவதுடன், அதற்கான மூலப்பொருட்களையும் தந்து உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தேன்.
எனது கோரிக்கைகளில் நிறைந்திருந்த நியாயத்தையும், தேவையையும் புரிந்து இந்திய அரசாங்கம் நான் கேட்ட அத்தனை கோரிக்கையையும் நிறைவேற்றித் தந்து எமது மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்தது. அதற்காக இந்தச் சந்தர்ப்பத்திலும் இந்திய அரசுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
203ஆம் அத்தியாயமான மோட்டார் வாகன சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயெ அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|