எதை எங்கே கதைத்து எமக்கான தீர்வுகளைப் பெற வேண்டும் என்பதில் நாம் தெளிவாகவே இருக்கின்றோம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Sunday, January 10th, 2021

தற்போது எமது நாட்டினது மட்டுமல்ல உலக நாடுகளின் நிலைமைகள்கூட கொவிட் 19 – கொரோனா காரணமாக வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதலில் இந்த அனர்த்தத்தில் இருந்து நாம் விடுபட வேண்டிய வழிவகைகள் தொடர்பில் ஆராய்வதும், அதற்குரிய ஏற்பாடுகளை முன்னெடுப்பதும் அவசியமாகியுள்ளது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

கொரோனா தொற்றினை வெற்றிகரமாக முறியடித்து வருகின்ற இந்தியா, கடந்த டிசம்பர் மாதம் 28ஆம், 29ஆம் திகதிகளில் ஆந்திரா, அசாம், குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகையை நடத்தி, அதில் வெற்றி கண்டுள்ளதாகவும், அதேபோல தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மேற்படி ஒத்திகை நடைபெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கடந்த 03 ஆம் திகதி அவசரகால பயன்பாட்டிற்கான அனுமதியானது இரண்டு வகையான தடுப்பூசிகளுக்குக் கிடைத்துள்ளன. ஒன்று, இங்கிலாந்நின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும், எஸ்ட்ரா ஜெனோகா நிறுவனமும் தயாரித்துள்ள தடுப்பூசிக்கும், பாரத் பயோடெக் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்ஸில் தயாரித்துள்ள ‘கோவேக்சின்’ தடுப்பூசிக்குமே இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் அனுமதி கிடைத்துள்ளதுடன், எதிர்வரும் 13ஆம் திகதி முதல் இவை பயன்பாட்டுக்கு வருமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவின் மேற்படி தடுப்பூசியினை முன்னுரிமை அடிப்படையில் இலங்கைக்கு வழங்குவதற்கு இந்திய அரசு நடவடிக்கை எடுப்பது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ள விடயம் இந்த நிலையில் மிகவும் முக்கிய விடயமாகக் கருதப்பட வேண்டியதாகும்.

அதேபோன்று, எமது கடற்றொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்புகளையும், எமது கடல் வளத்திற்கு பெரும் அழிவுகளையும் ஏற்படுத்தி வருகின்ற எல்லை தாண்டியதும், தடைசெய்யப்பட்ட உபகரணங்களைக் கொண்டதுமான இந்திய கடற்றொழிலாளர்களது செயற்பாடுகள் தொடர்பிலும் இந்திய வெளிவிவகார அமைச்சருடன் நான் நேரடியாகக் கலந்துரையாடினேன். அதிலும் நம்பிக்கைத் தரும்படியான கருத்துக்களையே அவர் தெரிவித்திருந்தார்.

அந்த வகையில், எதை, எதை எங்கெங்கே கதைத்து, எமக்கான தீர்வுகளைப் பெற வேண்டும் என்பதில் நாம் தெளிவாகவே இருக்கின்றோம். இந்த நடைமுறையே எமது மக்களுக்கு பயன்பாடுடையது. இதையே ஏனைய தரப்பு தமிழ் அரசியல்வாதிகளும் மேற்கொண்டால், எமது மக்களின் பிரச்சினைகள் பல எப்போதோ தீர்ந்திருக்கும் என்பதை சுட்டிக்காட்டுகிறேன் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

செயற்றிறனற்ற வடக்கு மாகாண சபையால் எமது மக்களின் எதிர்காலம் வீணடிக்கப்பட்டுவிட்டது - நாடாளுமன்றில் டக...
மதுவரிக் கட்டளைச் சட்டம் மறுசீரமைக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!
இந்திய மீனவர்களின் அத்துமீறல் விவகாரம்: விரைவில் இருதரப்பு பேச்சுவார்த்தை - அமைச்சர் டக்ளஸ் தேவானந்த...