எதிர்காலத்தில் இலவசக் கல்வி இல்லாது போய்விடுமோ? நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தகேள்வி!

நமது நாட்டைப் பொறுத்தவரையில் இலவசக் கல்வியானது எமது நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும் தற்போது இந்த இலவசக் கல்வியானது வியாபார மயமாக்கப்பட்டுள்ளதாகக் கூறி கடந்த 20 ஆம் திகதி நுவரெலியா, ஹற்றன், நானுஓயா ஆகிய பகுதிகளில் மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அடுத்த ஆண்டுக்கான கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீடானது கடந்த ஆண்டைவிட குறைக்கப்பட்டுள்ள நிலையிலும், தனியார்துறைக் கல்விக்கு இந்த வரவு செலவுத்திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள சலுகைகளைப் பார்க்கின்றபோது நம் நாட்டில் இலவசக் கல்வியானது இல்லாமலாக்கப்பட்டுவிடுமோ என்ற சந்தேகம் எமது மக்களிடையே ஏற்பட்டுள்ளதையும் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
கடந்த 21 ஆம் திகதி 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் கல்வி நிலையை எடுத்துக்கொண்டால், தற்போதைய நிலையில் அது மிகவும் வீழ்ச்சியடைந்த போக்கினையே காட்டுவதாக பெறுபேற்றுப் பகுப்பாய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. குறிப்பாக, 2015 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரம் கற்க தகுதிபெற்ற மாணவர்களின் நிலையை வைத்துப் பார்க்கும்பொழுது இந்த நிலைமை தெளிவாக புலனாகின்றது. இந்த வகையில் பார்க்கும்பொழுது 2013 ஆம் வருடம் 8 ஆவது இடத்திலிருந்த யாழ் மாவட்டமானது 2014 இல் 20 ஆவது இடத்துக்கும், 2015 இல் 21 ஆவது இடத்துக்கும் பின்தள்ளப்பட்டிருக்கின்றது. அதேநேரம் 2014 இல் 2 ஆவது இடத்திலிருந்த மன்னார் மாவட்டம் 2015 ஆம் ஆண்டில் 10 ஆவது இடத்துக்கும், 2014 இல் 7 ஆவது இடத்திலிருந்த வவுனியா மாவட்டம் 2015 ஆம் ஆண்டில் 16 ஆவது இடத்துக்கும், 2014 ஆம் ஆண்டில் 12 ஆவது இடத்திலிருந்த மட்டக்களப்பு மாவட்டம் 2015 ஆம் ஆண்டில் 17 ஆவது இடத்துக்கும், 2014 ஆம் ஆண்டில் 21 ஆவது இடத்திலிருந்த திருகோணமலை மாவட்டம் 2015 ஆம் ஆண்டில் 23 ஆவது இடத்துக்கும் தள்ளப்பட்டது. ஏனைய மாவட்டங்களான அம்பாறை, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்கள் 2015 ஆம் ஆண்டில் முறையே 16 ஆவது இடத்துக்கும், 24 ஆவது இடத்துக்கும், 25 ஆவது இடத்துக்கும் தேசிய ரீதியில் தள்ளப்பட்டிருந்தமை குறிப்பிட்டத்தக்கது என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.
Related posts:
|
|