எதிர்காலங்களை வளப்படுத்தும் எமது செயற்பாடுகளுக்கு மக்கள் முழுமையான அரசியல் பலத்தைத்தரவேண்டும் – அம்பாறையில் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, January 4th, 2018

திருக்கோயில் பிரதேச சபைக்கான உள்ளூராட்சிமன்ற தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வீணைச் சின்னத்தின் வெற்றி உறுதி செய்யப்படுவதனூடாக உங்கள் எதிர்பார்ப்புக்களை நாம் நிச்சயம் நிறைவுசெய்து தருவோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய மாவட்டத்தில் போட்டியிடும் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்புக்களை மேற்கொள்ளும் பொருட்டு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கிழக்கு மாகாணத்திற்கான விஜயம் ஒன்றை இன்றையதினம் (04) மேற்கொண்டுள்ளார்.

இதன் ஒரு அங்கமாக கிழக்கு மாகாணத்தின் அம்பாறை திருக்கோயில் தம்பட்டை பிரதேசத்தில் பல் தேவை கட்டிடத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

எமது கட்சியின் நிலைப்பாடான மத்தியில் கூட்டாட்சி! மாநிலத்தில் சுயாட்சி!! எக்காலத்திலும் பிரிக்கப்பட முடியாத வடக்கு – கிழக்கு ஓர் தனி அலகு என்ற நிலைப்பாட்டில் ஒருவிதமான மாற்றமும் இல்லை. அந்தவகையிலேயே நாம் எமது செயற்றிட்டங்களை இன்றுவரை  முன்னெடுத்துவருகின்றோம்.

கடந்தகாலங்களில் கிழக்கு மாகாணத்தில் எமது செயற்றிட்டங்கள் அல்லது கட்சியினது வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில் நாம் பல சிரமங்களுக்கும் சவால்களுக்கும் முகங்கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

அந்தவகையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்கள் எமக்கான ஆதரவுப்பலத்தை தருவார்களேயானால்  நாம் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் எமது வேலைத்திட்டங்களை முன்னெடுக்கத்தயாராக  இருக்கின்றோம்.

அந்தவகையில் கடந்தகால போராட்டங்களின் தவறுகளை எண்ணிக்கொண்டிருக்காது எதிர்காலங்களை வளப்படுத்தும் எமது செயற்பாடுகளுக்கு மக்கள் முழுமையான அரசியல் பலத்தைத்தரவேண்டும்.

இங்கு தனிநபர்களது பிரச்சினைகள் என்றல்லாது பொதுமக்கள் சார்ந்த பொது அமைப்புகளது பிரச்சினைகளுக்கு தீர்வு காணவே நாம் விரும்புகின்றோம். எனவே அதற்கு முழுமையான ஆதரவுப் பலத்தை எமது வீணைச் சின்னத்திற்கு ஆதரவு வழங்க அனைவரும் முன்வரவேண்டும் என டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.

முன்பதாக தம்பட்டை ஶ்ரீசித்திவிநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூசை வழிபாடுகளிலும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கிளிநொச்சியை அபிவிருத்தியால் கட்டியெழுப்பியதுபோல் மக்களது வாழ்வியலையும் பலப்படுத்து வேன் - டக்ளஸ் தே...
நிம்மதியாக வாழ வழியேற்படுத்தி தாருங்கள் - குடவத்தை மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!
உலக புரத தேவையை நீர் வேளாண்மை ஊடாகவே நிறைவு செய்ய முடியும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை!