ஊழல், மோசடிகள் தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டு வருகின்ற கருத்துகள் யாவும் வெறும் அரசியல் பேசு பொருளாகவே இருக்கின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Wednesday, May 9th, 2018

பொருளாதார ரீதியல் மட்டுமன்றி சமூக, கலாசார ரீதியிலும் பாரிய பின்னடைவினை நோக்கிச் செல்கின்ற எமது நாட்டில், இத்தகைய வீழ்ச்சிக்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக விளங்குகின்ற ஊழல், மோசடிகள் தொடர்பில் உடனடி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, குற்றவாளிகள் இனங்காணப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதும், ஊழல், மோசடிகளால் பெறப்பட்டுள்ள இந்த நாட்டு மக்களது நிதியை, சொத்துக்களை, உடைமைகளை மீள அரசு கைப்பற்ற வேண்டியதும் அவசியமாகும் என்பதையே நான் வலியுறுத்தி வருகின்றேன் – என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நீதித்துறை திருத்தச் சட்டமூலம், காலவிதிப்பு சட்டமூலம், தண்டனைச் சட்டக்கோவை திருத்தச் சட்டமூலம், குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

ஊழல் விசாரணைகளை மேற்கொள்ள சிறப்பு மேல் நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டியது அவசியம் என்கின்ற போதிலும், அது எமது அரசியல் யாப்பிற்கு முரணாகாத வகையிலும், வெறுமனே அரசியல் பழிவாங்கல்களை நோக்கமாகக் கொள்ளாத வகையிலும் அமையப் பெற வேண்டும் என்பதை நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.

1971ஆம் ஆண்டில் எமது நாட்டில் ஏற்பட்ட கலவரத்துக்கு ஈடுபட்டவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கும் வகையில், அக்கால கட்டத்தில் விN~ட சட்டமூலம் ஒன்று அங்கீகரிக்கப்பட்டு, வழக்கு விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று, சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டிருந்ததை இங்கு நான் மீள நினைவுபடுத்துகின்றேன்.

‘ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெசனல்’ அமைப்பு வருடாந்தம் வெளியிடுகின்ற ஊழல் தொடர்பான புள்ளிவிபர அறிக்கையில் கடந்த ஆண்டில் ஊழல்கள் இடம்பெறுகின்ற 183 நாடுகளில்,  எமது நாடு 38 புள்ளிகளைப் பெற்று 91வது இடத்தில் இருப்பதாக அறிய முடிகின்றது.

இதில், ஆச்சரியமான, அதிசயமான விடயம் ஒன்று தொடர்பில் அண்மையில் ஊடகங்களின் மூலமாக அறியக் கிடைத்திருந்தது. அதாவது, கடந்த 24 வருடங்களில் எமது நாட்டில் இலஞ்சம், ஊழல் தொடர்பில் ஏராளமான குற்றச்சாட்டுகள், இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான குற்ற விசாரணை ஆணைக்குழுவுக்கு கிடைத்திருந்த போதிலும், அவற்றில் 75 வழக்குகள் மட்டுமே தொடுக்கப்பட்டு, இந்த 75 வழக்குகளிலும் நான்கு பேர் மாத்திரமே குற்றவாளிகளாக நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளனர் என மேற்படி ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளதாக அச் செய்தி குறிப்பிடுகின்றது.

இத்தகையதொரு நிலை எமது நாட்டில் நிலவுகின்ற நிலையில், இலஞ்சம், ஊழல், மோசடிகள் தொடர்பில் இந்த நாட்டில் வெளிப்படுத்தப்பட்டு வருகின்ற கருத்துகள் யாவும் வெறும் அரசியல் பேசு பொருளாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: