ஊழல் மோசடிகளை விசாரிக்க அமைக்கப்பட்ட குழு,  வட மாகாண முதலமைச்சருக்கு கீழான அமைச்சுக்களையும் விசாரிக்குமா? – டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Saturday, December 3rd, 2016

வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களது ஊழல்கள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில், அந்த ஊழல்களை விசாரிப்பதற்கென முதலமைச்சர் ஒரு குழுவை நியமித்தார். இந்தக் குழு அமைக்கப்பட்டு தற்போதைக்கு பல நாட்கள் கடந்துள்ள நிலையிலும்  அந்த ஊழல்கள் பற்றி எந்தவொரு தகவல்களும் வெளியிடப்படாத நிலையே காணப்படுகின்றது – என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்..

இன்றையதினம்(03) 2017 ஆம் ஆண்டுக்குரிய வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு கேளிவி எழுப்பியுள்ளார்..

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

இந்த விசாரணையின் அறிக்கைகளை வடக்கு மாகாண ஆளுநர் கோரி வருவதாகவும், ஆனால், அவை இதுவரையில் ஆளுநரிடம் ஒப்படைக்கப்படவில்லை எனவும் தெரிய வரும் நிலையில், நான்கு அமைச்சர்கள் தொடர்பாக மாத்திரமே ஊழல் விசாரணைகளை மேற்கொள்ள முதலமைச்சர் குழு அமைத்தாரே தவிர, முதலமைச்சர் வசமுள்ள அமைச்சுக்கள் தொடர்பிலான ஊழல்களை விசாரிப்பதற்காக குழு அமைக்கப்படவில்லை. இதனை மாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தியும் அதனை முதலமைச்சர் ஏற்காத நிலையே காணப்படுகின்றது.

வடக்கு மாகாண சபையில் கடந்த சுமார் மூன்று வருட கால வரலாற்றில் குறைந்த பட்சம் 20 நியதிச் சட்டங்களையாவது நிறைவேற்றியிருக்க வேண்டிய நிலையில், இதுவரையில் முன்பள்ளி, போக்குவரத்து மற்றும் சிறுவர் நன்னடத்தை தொடர்பிலான மூன்று நியதிச் சட்டங்கள் மாத்திரமே நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

பிரமாண அடிப்படையிலான மானிய நிதித் திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்றுள்ள பொது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குரிய சுமார் 200 மில்லியன் ரூபா நிதியில் 8 மில்லியன் ரூபா நிதி உறுப்பினர்களது தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. மாகாண சபை உறுப்பினர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டியது அவசியம். ஆனால் மக்களது நிதியிலிருந்தல்ல. மேலதிக நிதிகளை ஒதுக்கி வழங்குவதுதான் சரியானது.

வடக்கு மாகாண சபையின் கீழான அபிவிருத்தித் திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் யாவும் நிதி ஊழல் மோசடியை மாத்திரமே கருத்தில் கொண்டு மாகாண அமைச்சர்களது உறவினர்களுக்கும் தமது தரகர்களுக்கும் வழங்கப்பட்டு வருவதால், அந்த அபிவிருத்திப் பணிகளில் முறைகேடுகளும், தரமின்மையும் தாமதங்களும் ஏற்படுவதை அறியக்கூடியதாகவுள்ளது.

மாகாண பொதுச்சேவை ஆணைக் குழுவானது நியமன நடைமுறை விதிகளுக்கு மாறாக செயற்பட்டு, நியமனங்களை வழங்கிவரும் நிலை காணப்படுகின்றது. உரிய விளம்பரங்கள் மேற்கொள்ளப்படாத நிலையில் பல நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், மாகாணப் போக்குவரத்துத்துறை சார்ந்து ஏற்கனவே 43 நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் எதிர்வரும் ஜனவரி மாதம் 175 நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

மாகாணத்தின் வேலை வாய்ப்பில்லாதோரின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் எனினும், உரிய பரீட்சைகளில்கூட சித்தி பெறாதவர்களுக்கும் இவ்வாறு நியமனங்கள் வழங்கப்படும்போது முறைகேடுகள் இடம்பெறுவது மாத்திரமின்றி, அவ்வாறு நியமனங்களைப் பெறுகின்றவர்களால் மக்களுக்கான  உரிய பணிகள் ஒழுங்குற மேற்படக் கூடுமென எதிர்பார்க்க இயலாத நிலையே உருவாகும்.

மேலும், நெல்சிப் திட்டத்தில் ஏற்கனவே இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் மத்திய அரசு விசாரணைகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில், மாகாண சபை அதனைக் கையிலெடுத்து, அதற்கென சுமார் 1.2 மில்லியன் ரூபாவினை இதுவரை செலவு செய்துள்ள போதும், அந்த விசாரணைகளின் முடிவுகள் இதுவரை எட்டப்படாமல் இழுபறி நிலையே தொடர்கின்றது.

இதன் பின்னணியைப் பார்க்கின்றபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபைத் தவிசாளர்களும், உறுப்பினர்களும் இந்த ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாலேயே இதனை விசாரிக்கும் பொறுப்பை ஒழுங்கு விதிமுறையையும் மீறி மாகாணசபை ஏற்றதாகவும், அதனை இழுத்தடித்து வருவதாகவும் தெரிய வருகிறது. எனவே, இந்த விசாரணையை மத்திய அரசு பொறுப்பேற்று நடத்த முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

Untitled-3 copy

Related posts:


உரிய அதிகாரங்கள் பகிரப்படும் போதுதான் தேசியப் பிரச்சி னைக்கு தீர்வு காணமுடியும் -  வவுனியாவில் செயலா...
சுயலாப அரசியல் நடத்திவரும் தமிழ் தலைமைகள் போல் நானும் இருந்து விட முடியாது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்...
கிளிநொச்சி கடற்றொழிலாளர்களின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்ச...