ஊழல் ஒழிப்புச் சட்டத்தில் திருத்தங்கள் வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி வலியுறுத்து!

Friday, July 20th, 2018

நீதித் துறையினை எடுத்துக் கொண்டாலும், அங்கு அதிகாரங்களுக்கான தட்டுப்பாடுகள் நிலவுகின்றதைக் காணக்கூடியதாக இருக்கின்ற அதேவேளை, நீதிமன்றங்கள் பழைய வழக்குகளின் சுமைகளை மிக அதிகமாகவே கொண்டிருக்கின்றன.

இத்தகைய அடிப்படை குறைபாடுகளைக் கொண்டிருக்கின்ற நிலையில், இலஞ்சம், ஊழல், மோசடிகள் மிக மோசமான வகையில் தலைதூக்க ஆரம்பித்து விடுகின்றன. எனவே, இத்தகைய அடிப்படை குறைபாடுகளை நீக்குவதற்கு முதலில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இலஞ்சம், ஊழல், மோசடிகளை ஒழிப்பதற்கு முன்பாக, அவை இடம்பெறுவதற்கான வழிவகைகளை அடைப்பதையே முதலில் செய்வதற்கு முன்வர வேண்டும என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்

இன்றையதினம் நாடாளுமன்றில் நடைபெற்ற இலஞ்சம ஊழல் திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

இந்த நாட்டில் இலஞ்சம், ஊழல், மோசடிகள் தொடர்பில் முறையிடுவதற்கெனவும், அவற்றை விசாரிப்பதற்கெனவும், இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு, நிதிக் குற்றங்கள் தொடர்பான புலனாய்வுத் திணைக்களம் மற்றும் ஊழல், மோசடிகள், அதிகார துஸ்பிரயோகம், பொது வளங்கள் மற்றும் சலுகைகள் போன்றவை தொடர்பில் விசாரணை செய்கின்ற ஜனாதிபதி ஆணைக்குழு ஆகிய மூன்று நிறுவனங்கள் செயற்பாட்டில் இருந்து வருகின்றன. இந்த மூன்று நிறுவகங்களுக்கிடையிலும் தற்போதைய நிலையில் காணப்படாத ஒருங்கிணைப்புகளை உருவாக்க வேண்டும். அந்த ஒழுங்கிணைப்பினை பலமுள்ளதாக கட்டியெழுப்ப வேண்டும்.

அதேநேரம், இலஞ்சம் மற்றும் ஊழல்கள் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் சட்டத்தில் தற்கால சூழலுக்கு ஏற்ப திருத்தங்கள் செய்யப்படல் வேண்டும்.

அதேபோன்று, மேற்படி ஆணைக்குழுவின் அலுவலகத்திற்கான மேலதிக கட்டிட வசதிகள் மேற்கொள்ளப்பட வேண்டியதுடன்,  ஆளணிப் பற்றாக்குறைகள் நிவர்த்திக்கப்படல் வேண்டும். ஆளணி என்கின்ற போது, தற்போது தங்களுக்கான அதிகாரிகளை பதவிகளில் இணைத்துக் கொள்வதற்கு மேற்படி விசாரணை ஆணைக்குழுவுக்கு அதிகாரங்கள் இல்லை என்றே கூறப்படுகின்றது. இந்த நிலைமை மாற்றஞ் செய்யப்படல் வேண்டும். பொலிஸ் திணைக்களத்திலிருந்து ஆளணிகளைப் பெற்றுக் கொண்டு, விசாரணை, சோதனைகள் மற்றும் பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்படல் என்பது மேற்படி ஆணைக்ழுவின் பணிகளுக்கு உகந்த செயலாகக் கருத முடியாது. பொலிஸ் திணைக்களம் இந்த அதிகாரிகளை மேற்படி ஆணைக்குழுவின் பணிகளில் ஈடுபடுத்தினாலும், இந்த அதிகாரிகளை வேறு பணிகளிலும் ஈடுபடுத்தி வருவதால், மேற்படி ஆணைக்குழுவுக்கென சுயமாக அதிகாரிகள் நியமிக்கப்படல் வேண்டும்.

Related posts:

சுயலாப வார்த்தை ஜாலங்களுக்கு எடுபட்டு எதிர்காலத்தை பாழாக்கிக் கொள்ள வேண்டாம் - வட்டுக்கோட்டையில் டக்...
காடுகள் வளர்ந்த இடங்கள் எல்லாம் வனத்துறைக்கு சொந்தம் என்றால் மக்கள் எங்கே குடியிருப்பது? - நாடாளுமன்...
தாயக தேசத்தின் விடிவொன்றே தமிழ் மக்களின் புத்தாண்டு நிமிர்வாகும் - புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ...