ஊழலில் முன்னேற்றம்: வளர்ச்சில் வீழ்ச்சி – இதுவே நாட்டின் இன்றைய நிலை – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

2015 – 2016 ஆண்டு காலகட்டத்தின்போது சர்வதேச பொருளாதார போட்டித் தன்மையில் 140 நாடுகளுக்கிடையிலே 64வது இடத்தில் இந்த நாடு இருந்தது. 2016 – 2017 ஆண்டு காலப்பகுதியில் 138 நாடுகளுக்கிடையில் 71வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டது. 2017 – 2018 ஆண்டு காலப் பகுதிக்குள் இன்னும் பின்னதள்ளப்பட்டு 85வது இடத்திற்கு வந்துவிட்டது.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை எடுத்துக் கொண்டால், 2015ஆம் ஆண்டு 5.0 வீதமாக இருந்துள்ளது. 2016ஆம் அண்டில் 4.0 வீதமாக வீழ்ச்சி கண்டிருந்தது. 2017ஆம் ஆண்டில் அது 3.1 வீதமாக மேலும் வீழ்ச்சி நிலையைக் கண்டுள்ளது. ஆனால், மத்திய வங்கியானது தனது 2016ஆம் ஆண்டறிக்கையில் 2017ஆம் ஆண்டுக்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 வீதமாக இருக்குமென்றும், பின்னர் அது படிப்படியாக அதிகரித்து 2020ஆம் அண்டில் 7 வீதமாக உயரும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் 2017ஆம் எதுவுமே நடக்கவில்லை. மாறாக அது மேலும் வீழ்ச்சி நிலையினையே காட்டுகின்றது. அந்த வகையில், ‘முதற் கோணல், முற்றிலும் கோணலாகிவிடும்’ நிலையே தென்படுகின்றது.
இந்த ஆண்டைவிட அடுத்த ஆண்டில் மீளச் செலுத்த வேண்டிய மூலதனக் கடன் தொகையானது இரண்டு மடங்கு அதிகமாகும் எனத் தெரிய வருகின்றது.
அந்தவகையில், இந்த ஆண்டானது 2019ஆம் ஆண்டில் செலுத்தப்படவுள்ள கடனுக்கான தயார் நிலை ஆண்டாகும். இதனை நீங்கள் முறையாகப் பயன்படுத்தி இருக்கின்றீர்களா? என்றால், இல்லை என்றே தெரிய வருகின்றது.
நிலையற்ற பொருளாதாரத் தன்மை, நாணய பெறுமதியின் வீழ்ச்சி, தொடர்ச்சியான பணி பகிஸ்கரிப்புகள், போராட்டங்கள் காரணமாக 2018ஆம் ஆண்டில் மீளச் செலுத்தப்பட வேண்டிய கடனின் அளவினை முழுமையாக செலுத்தக்கூடிய வழுவினை நீங்கள் இழந்து நிற்கிறீர்கள்.
இத்தகைய நிலையில், அடுத்த ஆண்டு மிகப் பாரியதொரு தொகைக் கடனை செலுத்துவதற்கு உங்களுக்கு என்னென்ன வழிகள் இருக்கின்றன? எனக் கேட்க விரும்புகின்றேன்.
உங்களுக்கு இருக்கின்ற ஒரே வழி, மக்களது வருமானங்களைக் குறைக்கின்றதும், செலவீனங்களை அதிகரிக்கின்றதுமான வரிகளை விதிப்பது மட்டும்தானா? அல்லது, வேறேதும் வழிகள் உண்டா? எனக் கேட்க விரும்புகின்றேன் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நடைபெற்ற துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளை, மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழான கட்டளைகள், பொருளாதார சேவை விதிப்பனவு மற்றும் பெறுமதி சேர் வரி தொடர்பிலான சட்டமூலங்கள் தொடர்பில் இடம்பெறுகின்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
Related posts:
|
|