ஊழலற்ற உள்ளுராட்சி மன்ற   செயற்பாடுகளை முன்னெடுப்போம் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி !

Thursday, December 28th, 2017

ஊழலற்ற உள்ளுராட்சி மன்ற செயற்பாடுகளை முன்னெடுப்போம் ஏற்கனவே நடந்துள்ள ஊழல்களுக்கு நடவடிக்கை எடுப்போம் உள்ளுராட்சி மன்றங்களை வலுப்படுத்த  விசேடதிட்டங்களை உருவாக்குவோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா  தெரிவித்துள்ளது.

நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் கட்சியின் தலைமைச்செயலகத்தில் வைத்து செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா  அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது. அந்த அறிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த தேர்தல் விஞ்ஞாபனத்துக்கூடாக எமது கட்சிக்கொள்கையை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளோம். எமது கட்சிக்கொள்கையினூடாக மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதை ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வருகின்றோம்.

இந்த விஞ்ஞாபனத்தில் எமது கட்சியின் கொள்கைத் திட்டம் வேலைத்திட்டம் தொடர்பாகவும் குறிப்பிட்டுள்ளோம்.

கடந்த காலங்களில் கூட்டு அரசில் நாம் பங்கெடுத்திருந்தாலும் அந்த அரசின் விஞ்ஞாபனத்தை நாம் ஒரு போதும் மக்களிடம் கொண்டு சென்றதில்லை.

எமது கட்சியின் கொள்கையைத் தான் மக்களிடம் கொண்டு சென்று வாக்குகளைக் கேட்டிருந்தோம். அதில் நாம் வெற்றியும் கண்டிருந்தோம்.

அத்துடன் வடக்கு கிழக்கு மாகாணங்களில் 40 சபைகளில் போட்டியிடுவதுடன் பெண்களுக்கு 36 வீதம் பிரதிநிதித்துவத்தையும் வழங்கியுள்ளோம்.

இங்குள்ள சில தமிழ் அரசியல்வாதிகள் தமது சுயநலன்களை முன்னிறுத்தியே தேர்தல் கூட்டுக்களை வைத்துள்ளனர். இவர்கள் மக்கள் நலன் சார்ந்த கூட்டமாக இல்லை. உசுப்பேற்றும் சூடேற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏமாற்று வித்தைகள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன.

பல நாள் கள்ளன் ஒருநாள் பிடிபடுவான் என்பதைப் போன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் கள்ளத்தனங்கள் குறித்து மக்கள் தெளிவு பெற்றுள்ளனர்.

உள்ளூராட்சிசபைத் தேர்தலில் இந்த சபைகளை வென்றெடுக்கும் பட்சத்தில் கடந்தகால ஊழல்கள் தொடர்பாகவும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பாகவும் உரிய விசாரணைகளை முன்னெடுப்போம்.

வட்டாரரீதியில் இனங்காணப்படும் பிரச்சினைகளுக்கு உரிய வகையில் தீர்வு காணப்படவேண்டும். கடந்த காலங்களில் தமிழ் மக்கள் தமது ஐக்கியத்தை வெளியுலகத்திற்கு காட்ட வேண்டுமென்று தமிழ்த் தலைமைகள் கூறி மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்றவர்கள் மக்களுக்காக எதையும் செய்யவில்லை என்பதுடன் தாம் முன்வைத்த கொள்கைகளில் அவர்களுக்கு நம்பிக்கையாக இருக்கவுமில்லை. நடைமுறையில் அதை அணுகவுமில்லை.

இன்று மக்கள் மாற்றுத் தலைமையை விரும்புவதான உணர்வும் தேவைப்பாடும் உள்ளதை நாம் நன்கறிவோம்.

இந்நிலையில் தாம் நீண்டகாலமாக ஏமாற்றப்பட்டு வந்துள்ளோம் என்பதையும் மக்களுடனான சந்திப்புக்களின் போது மக்களே சாட்சி கூறுகின்றனர்.  எனவே இந்த உள்ளூராட்சிசபைத் தேர்தலில் எமது கொள்கை நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு மக்கள் எமக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்வார்கள் என்றே நம்புகின்றேன் என்றும் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த வெளியிடு நிகழ்வின்போது கட்சியின் ஊடகச் செயலாளர் தோழர் ஸ்ராலின், கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன், கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.

DSC_0300

Related posts:


இந்திய தேசத்தால் தேடப்படும் குற்றவாளி நான் அல்ல - அரியாலையில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
தடுப்பு முகாம்களில் பல கைதிகள் சுய நினைவின்றிக் காணப்படுவதாக அண்மையில் வெளியான செய்திகளின் உண்மை நில...
தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கும், நிலையான அபிவிருத்திக்கும்,ஒளிமயமான எதிர்காலத்திற்கும் இந்தியா த...