உத்தியோகபூர்வமான பேச்சுக்கள் இன்னும் நடைபெறவில்லை – ஈ.பி.டி.பி!
Wednesday, February 28th, 2018ஆயிரம் வாக்குறுதிகளை வழங்கி வாக்குகளைக் கேட்டவர்கள் மக்கள் வழங்கிய ஆணையை மதித்து மக்களுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது.
இன்றையதினம் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது. அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது –
தேர்தல் முடிந்த கையோடு மக்களை மறந்து அர்த்தமற்ற அறிக்கைகளை வெளியிடுவதும் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை உமிழ்வதும் வாக்களித்த மக்களுக்கு எவ்விதமான பயனையும் பெற்றுத்தர போவதில்லை.
கிடைக்கப்பெற்ற மக்கள் ஆணையை நாடாளுமன்றத்திலும், மாகாண சபையிலும் அர்த்தமற்றதாக்கியதைப் போன்று உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரத்தையும் முடக்கும் விதமாக எவரும் செயற்படக் கூடாது.
தமக்கு சேவைகளாகப் பலன் கொடுக்க வேண்டுமென மக்கள் வழங்கிய வாக்குகள் மீதான நம்பிக்கையை ஒவ்வொருவரும் உணர்ந்து செயலாற்ற முன்வர வேண்டும். அந்த வகையிலேயே நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஆட்சி அமைக்கக் கூடிய முயற்சி எடுக்கக் கூடியவர்கள் ஆட்சி அமைக்க முன்வர வேண்டும் என்றும் அத்தகையவர்கள், மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் போது அதற்கு நாம் முழுமையான ஆதரவை வழங்குவோம் என்றும் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தோம். எமது அறிவிப்பைத் தொடர்ந்து ஆட்சி அமைக்க சிலர் முயற்சித்தாலும் அதற்கான பேச்சு வார்த்தைகள் உத்தியோகப்பற்றற்ற வகையிலேயே இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
அந்த முயற்சிகள் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் காலத்தை கவனத்தில் கொண்டு அர்த்தமுள்ள உத்தியோகபூர்வமான பேச்சுக்கள் நடைபெறுவது அவசியமானது. அதற்கான கதவுகள் இன்னமும் திறந்தேயிருக்கின்றன. பல்வேறு தேவைகளுடனும், கோரிக்கைகளுடனும் வாழ்ந்து கொண்டிருக்கும் எமது மக்களுக்கு சேவை செய்ய அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாலும் செயற்பட வேண்டியதன் அவசியத்தை ஒவ்வொருவரும் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|