உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரம் எமக்கு கிடைக்குமானால் மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்குவோம் – முல்லைத்தீவில் டக்ளஸ் எம்.பி!

வளமான எதிர்காலமொன்றை அமைப்பதற்கான சந்தர்ப்பம் ஒன்று இன்று கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் அதனை சரியான முறையில் மக்களாகிய நீங்கள் பயன்படுத்துவீர்களேயானால் தீர்க்கப்படக் கூடிய பல பிரச்சினைகளுக்கு இலகுவில் தீர்வுகளைக் காணமுடியும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இரண்டுநாள் விஜயம் மேற்கொண்டுள்ள டக்ளஸ் தேவானந்தா மாந்தை கிழக்கு பிரதேசத்தில் நடைபெற்ற மக்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
வடக்கு மாகாண சபையூடாக கடந்த நான்கு வருடங்களை தமக்கான சந்தர்ப்பமாக கிடைக்கப் பெற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதனையும் செய்யாது மக்களை ஏமாற்றிவிட்டனர். குறிப்பாக வடக்கு மாகாணசபையின் அதிகாரத்திற்குட்பட்ட வீதிகள் உள்ளிட்ட உட்கட்டுமாணங்கள் எவற்றிற்கும் இதுவரையில் எவ்விதமான தீர்வுகளும் இதுவரையில் பெற்றுக்கொடுக்கப்படவில்லை.
எமது மக்களும் அவர்களை நம்பி வாக்களித்து அவர்களை வெற்றிபெறச் செய்தபோதும் இற்றைவரையில் தீர்வுகள் காணப்படக்கூடியதான பல வேலைத்திட்டங்களுக்கு அவர்களால் தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படவில்லை.
நாங்கள் இந்த தேர்தலில் நிற்பதற்கு காரணம் தீர்க்கப்படாதுள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காணவேண்டும் என்பதேயாகும். இதுதான் எமது கட்சியினது உறுதியான நிலைப்பாடும் ஆகும்.
எமக்கு மக்களுக்கு சேவையாற்றக்கூடிய ஆற்றல் மட்டுமன்றி மக்களுக்கு சேவை செய்யவேண்டியதான அக்கறையும் உள்ளது. இங்கு மக்கள் நாளாந்தம் பல்வேறுபட்ட தேவைப்பாடுகளுடன் வாழ்ந்துவருகின்றதை காணமுடிகின்றது.
குறிப்பாக விவசாயத்தை தமது ஜீவனோபாயமாகக் கொண்டுள்ள இந்த கிராமத்து மக்களாகிய நீங்கள் உரிய முறையில் விவசாயத்தை மேற்கொள்ள முடியாதவாறு இடர்பாடுகளை சந்தித்து வருகின்றீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன்.
எனவே நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் எமக்கு நீங்கள் முழுமையான ஆதரவை தருவீர்களேயானால் நிச்சயம் உங்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையை நீங்கள் கொண்டிருக்கலாம்.
எனவே சந்தர்ப்பத்தை உரியமுறையில் பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்வதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரை வெற்றிபெறச் செய்வதனூடாகவே சாத்தியமாகும் என்று தெரிவித்தார்.
அத்துடன் வீதி புனமைப்பு சுயதொழில் வாய்ப்பு உட்கட்டுமாணம் உள்ளிட்ட தேவைகளுக்காக நிச்சயம் நாம் அதிகளவில் பங்காற்றுவோம் என்றும் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார்
Related posts:
|
|