உறுதியற்ற பொருளாதார கட்டமைப்பே பெரும் பாதிப்புக்களுக்கு காரணமாக அமைகின்றது – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Tuesday, May 21st, 2019

நாட்டில் உறுதியானதொரு பொருளாதார கட்டமைப்பு இல்லாத நிலையில், ஒரு திடீர் தாக்குதல் – அனர்த்தம் ஏற்பட்டவுடனேயே மக்களது வாழ்க்கை நிலையானது படு பாதாள நிலையினை நோக்கி உடனடியாகவே தள்ளப்பட்டு விடுகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற 2008 ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழான கட்டளை தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டபின் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

தேசிய உற்பத்திகள் தொடர்பிலான அக்கறையின்மைகள்,  மேலும், மேலுமான படு கடன்கள், வீண் விரயங்கள் போன்ற தொடர்ந்த செயற்பாடுகள் மேற்படி வீழ்ச்சி நிலைக்கான உத்தரவாதமாக மாறிவிட்டுள்ளன. இத்தகைய நிலையில் இன்று இந்த நாட்டில் ஒரு துறையல்ல, அனைத்துத் துறைகளும் மீள எழ நீண்ட காலம் எடுக்கக் கூடிய நிலைக்கே தள்ளப்பட்டுவிட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி தற்கொலைத் தாக்குதலால் வீழ்ச்சியுற்றிருந்த சுற்றுலாத்துறையானது, அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட வன்முறைத் தாக்குதல்கள் காரணமாக மீண்டும் தலைநிமிர இயலாத அளவிற்கு பாரிய வீழ்ச்சி நிலையை கண்டுள்ளதாகவே அறிய முடிகின்றது.

சிலாபம் பகுதியில் ஆரம்பித்து, மினுவான்கொடை, குருனாகலையில் பல பகுதிகள் என வியாபித்திருந்த இந்த காடைத்தனமான வன்முறைகள,; மேற்கொள்ளப்பட்டிருந்த காரணிகள் கண்டு பிடிக்கப்பட்டு, குற்றவாளிகள் தராதரம் பாராமல் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும் என்பதையும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

அடுத்ததாக, சோதனைகள் என்ற பெயரில் நாட்டில் அனர்த்தங்கள் இடம்பெற்ற ஏனைய பகுதிகளைவிட வடக்கு நோக்கியதான பகுதிகளிலேயே ஏற்பாடுகள் அதிகமாகி இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.  சோதனை நடவடிக்கைகள் நாட்டின் தற்போயை நிலையில் தேவை என்கின்ற போதிலும், அது அளவுக்கு அதிகமாகி, மக்களுக்கு பெரும் இடையூறுகளை ஏற்படுத்தவதாக அமைந்து விடக் கூடாது என்தையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியிருக்கின்றது.

கடந்த காலங்களில் தங்களது சுயலாப பாசாங்கு அரசியலுக்காக வடக்கின் தமிழ்த் தரப்பு அரசியல்வாதிகள் ஆடிக் கொண்டு வந்திருந்த கூத்தாட்டங்கள் காரணமாக அதிருப்தி கொண்ட நிலையில், பாதுகாப்புத் தரப்பினர் அந்த அதிருப்தியினை தங்கள் மீது காட்டுவதாகவே எமது மக்கள் அங்கலாய்த்து வருவதையும் நான் இந்தச் சந்தர்ப்பத்திலே குறிப்பிட வேண்டியுள்ளது. எனவே, இது குறித்து அரசு தெளிவுகள் பெறப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றேன்.

அதேநேரம், நாட்டில் இத்தகைய பாதுகாப்பு சோதனை ஏற்பாடுகளை வைத்துக் கொண்டு, உல்லாசப் பிரயாணிகளுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருப்பதிலும் அதிகளவு பயன்கள் கிட்டப் போவதில்லை  என்பதையும் அவதானத்தில் கொள்ள வேண்டும்.

இலங்கையின் இன்றைய நிலையில் மக்கள் தங்களது நாளாந்த வாழ்க்கையை மேற்கொள்வதற்கான ஜீவனோபாயத்திற்காக எதை செய்வது என்ற நிலை தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். எனவே, அதற்குரிய வசதி வாய்ப்புகளை ஓர் அரசாங்கம் என்ற ரீதியில் செய்து கொடுக்க வேண்டியது அவசியமாகும்.

குறிப்பாக, கடந்த ஏப்பரல் 21ஆம் திகதி தற்கொலைத் தாக்குதலின் பின்னரான பல்துறை சார்ந்த வீழ்ச்சி நிலையின் காரணத்தால், வாழ்வாதாரங்கள் இழந்து தவிக்கின்ற அனைத்து மக்களினதும் பாதிப்புகள் தொடர்பில் ஆராய்வதற்கென உடனடியாக ஓர் அவசரகால பணியகம் அமைக்கப்பட வேண்டும்.

அப் பணியகம் ஊடாக மக்களின் பாதிப்புகள் தொடர்பில் ஆராய்ந்து அம் மக்களின் இழப்புகளுக்கு ஏற்ப இழப்பீடுகளை வழங்குவதற்கு இந்த அரசு முன்வர வேண்டியது உடனடி அவசியமாகும் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:


இழப்பீட்டுக் கொடுப்பனவுகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வுகள்  முல்லை மாவட்டச் செயலகத்தில்  அமைச்சர்...
கல்விக்கு விரைவில் மூடுவிழா நடத்தவா தனியார் பாடசாலைகளுக்கு அரச நிதி ஒதுக்கப்படுகின்றது - நாடாளுமன்றி...
ஈ.பி.டி.பியின் கிழக்கு மாகாண விசேட மாநாடு திருமலையில்: செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆர...