உருத்திராட்ச மாலை அணிந்த பூனைககள் மக்களை தவறாக வழிநடத்த முற்படுகின்றன – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, October 25th, 2018

 ‘நாங்கள் விட்ட தவறுகளைக் கூறி அடுத்த தேர்தலில் எமது மக்களிடம் வாக்கு கேட்போம்’ என ஒரு கட்சி கூறுமானால், அக்கட்சி தொடர்பிலான எமது மக்களின் நம்பிக்கை எந்தளவிற்கு இருக்குமென சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இதன்படி பார்க்கின்றபோது, அவர்கள் எமது மக்களுக்கு தவறுகளைத்தான் செய்திருக்கிறார்களே அன்றி, ஏதும் நன்மைகளை செய்யவில்லை என்றே சுட்டிக்காட்டப்படுகின்றது. ஏதாவது நன்மை செய்திருந்தால், அதைக்கூறி அடுத்த தேர்தலில் எமது மக்களிடம் வாக்கு கேட்பதற்;கு அவர்களால் முடிந்திருக்கும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற நிதி, மதுவரி மற்றும் உற்பத்தி வரி சட்டமூலங்கள் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இதே கட்சியில் பல வருட காலமாக சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டு, இதே தவறுகளையே எமது மக்களுக்கு செய்துவந்திருந்த இன்னுமொரு தரப்பினர், தமிழ் மக்களைப் பயன்படுத்தி யார் அதிகம் சம்பாதிப்பது? என்ற உட்கட்சி மோதலால் கட்;சியிலிருந்து பிரிந்துள்ள நிலையில், ‘மக்களுக்கு ஏதாவது செய்வதற்கு அவர்கள் விடவில்லை, இவர்கள் விடவில்லை’ எனக் கூரை ஏறி கோழி பிடிக்காதவன், வானம் ஏறி வைகுண்டம் போகிறேன்’ என்பது போல் கூறிக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய எமது வரலாறு தெரியாத, எமது வரலாற்றுடன் இணைந்து பங்கேற்காத, செயற்பாடுகளால் எமது வரலாற்றுக்கு பெருமை சேர்க்காத – எமது மக்களுக்கு எதுவும் செய்யாத உருத்திராட்ச மாலை அணிந்த பூனைககளும் எமது சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றன.

அந்த வகையில், நாங்கள் ஏற்றிருக்கின்ற அரசியல் செயற்பாடுகளில் இவ்வளவு காலமும் எமது மக்களுக்கு எவ்வளவோ நன்மைகளையே செய்திருக்கின்றோம். இதையெல்லாம்கூட நாங்கள் தேர்தல்களின்போது வாக்கு கேட்கின்ற நிலையில் எமது மக்களுக்கு நாம் செய்தவைகளை சொல்லிக் காட்டுவதில்லை. மாறாக, எமது மக்களுக்கு மேலும் என்னென்ன நன்மைகளை செய்யப் போகின்றோம் என்பதையே எடுத்துக் கூறி வருகின்றோம்.

இவ்வாறு எமது மக்களுக்கு எவ்விதமான நன்மைகளும் செய்யாதவர்களால் எமது மக்களது நிம்மதியானதும், சுதந்திரமானதும், பொருளாதார வளமானதுமான வாழ்க்கை சிதைக்கப்பட்டுள்ளது. அதே நேரம், எமது மக்களின் நன்மை கருதி எதையாவது செய்வதற்கு எவரும் முன்வந்தாலும், அவர்களையும் இவர்கள் தடுத்து வருவதால் எமது மக்களின் வாழ்க்கை நிலை எந்தளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கும் என்பதை நீங்களே நினைத்துப் பாருங்கள்.

ஆகவே, எமது மக்கள், அவர்களால் வாக்களிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பல பிரதிநிதிகளினாலும் வாழ்க்கையில் தடுக்கப்பட்டு வருகின்றார்கள். இவர்கள் தவிர்ந்து மேலும் பல தரப்புகளினாலும் தடுக்கப்பட்டு வருகின்றார்கள் என்பதே உண்மை நிலைமையாகும்.

Related posts: