உரிமைகளை வென்றெடுக்க பிராந்தியக்கூட்டு! வளமான தேசத்தை உருவாக்க தேசியக்கூட்டு!! – டக்ளஸ் தேவானந்தா

Friday, May 20th, 2016

மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதே ஈ.பி.டி.பியின் அரசியல் இலக்காக இருந்து வருகின்றது. அதன் அடிப்படையில் கடந்த காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் நேரடியாக மத்திய அரசில் பங்கெடுத்திருந்தோம். தற்போதைய அரசியல் நீரோட்டத்தில் தேசியக் கூட்டு, பிராந்தியக் கூட்டு  என்ற இரண்டும் காலத்தின் தேவையாகவுள்ளது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது முகப்புத்தக பதிவில் தெரிவித்துள்ளார்.

அவர் தனது பதிவில் மேலும் குறிப்பிடுகையில் –

தமிழ் மக்களின் மீள் எழுச்சிக்காகவும், அர்த்தபூர்மான அபிவிருத்திக்காவும், தேசிய நல்லிணக்கத்தை பலமானதாக கட்டியெழுப்பவுமே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தொடர்ந்தும் ஒரு இணக்கப்பாட்டைக் கொண்டிருக்கின்றது.

தற்போது ஆட்சி அதிகாரத்தில் நாம் பங்கெடுக்காவிட்டாலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் எமது பங்காளித்துவத்தை தொடர்ந்தும் பேணி வருகின்றோம்.

நாங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் பங்கெடுத்திருந்ததானது, யுத்த அழிவுக்குப் பின்னரான தமிழ் மக்களின் மீள் எழுச்சிக்காகவும், அர்த்தமுள்ள அபிவிருத்திக்காகவும், தேசிய நல்லிணக்கத்தை பலமானதாகக் கட்டியெழுப்புவதற்காகவுமேயாகும்.

இதேவேளை பதினொரு தமிழ் அமைப்புக்கள் ஒன்றிணைந்து உருவாக்கியிருக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசிய முன்னணியானது, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கும், காணி மீட்பு, காணாமல் போனோர் பிரச்சனை, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, மலையகத் தமிழர்களின் சம்பளப் பிரச்சனை, நிரந்தர குடியிருப்பு மற்றும் இதர முன்னுரிமைக்குரிய பிரச்சனைகளுக்கான தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கு சாத்தியமான முறையில் போராடுவதற்குமேயாகும்.

எனவே ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியானது, தேசிய ரீதியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடனும், பிராந்திய ரீதியில் ஜனநாயகத் தமிழ்த் தேசிய முன்னணியுடனும் ஒன்றிணைந்து செயற்படுவதானது, சமகால அரசியல் சூழலின் அவசியத்தைக் கருத்தில் கொண்டேயாகும் என்பதை நேர்மையாக ஆராயும் எவராலும் புரிந்து கொள்ள முடியும் -என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:

தேர்தல் வெற்றியின் மூலம் தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு பொற்கா லத்தை  உருவாக்குவோம் - கட்சியின் வடக்கு ...
தமிழ் மக்களின் நலன்களை முன்னிறுத்தி புலம்பெயர்தேச முதலீட்டாளர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளேன் – ஊட...
யாழ். மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் தேவான...