உயர் மட்டம் கவனம் எடுத்திருந்தால் தமிழர்களின் பிரச்சனைகள் எப்போதோ தீர்ந்திருக்கும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!
Friday, March 22nd, 2019மத்திய அரசியல் தலைமைத்துவங்களின் பாரபட்சங்களாலும் தமிழ்த் தலைமைகளின் சுயலாப அரசியல் மற்றும் தவறான வழிகாட்டல்களாலும், நீண்டகால யுத்தத்திற்கு முகம் கொடுத்து ஈடுசெய்யமுடியாத பாதிப்புக்கள் மற்றும் இழப்புக்களுக்கு உள்ளாகியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி, மீள்குடியேற்றம் உட்பட தொழில்வாய்ப்பு முயற்சிகள் அனைத்தும் விஷேடமான வகையிலும், அந்த மக்களின் அபிலாஷைகள் மற்றும் உணர்வுகளுக்கு மதிப்பளித்துமே முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும். என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இன்று (22.03.2019) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கமத்தொழில் மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அந்த உரையில் மேலும் தெரிவித்திருப்பதாவது.
நாம் ஆட்சியில் பங்கெடுத்திருந்தபோது அக்கறையுடனும், நேரகாலம் பாராத உழைப்புடனும் எமது பகுதிகளின் அபிவிருத்தியையும், மக்களின் கோரிக்கைகளுக்கான தீர்வுகளையும்; பெற்றுக்கொடுத்திருந்தோம்.
ஆனால் இப்போது வடக்கு கிழக்கு மக்களின் பொருளாதார பிரச்சனைகள் தொடர்பாகவோ, பாதிக்கப்பட்ட மக்களின் அபிவிருத்தி தொடர்பாகவோ, அர்த்தமுள்ள மீள்குடியேற்றம் தொடர்பாகவோ எவரும் அக்கறையோடு திட்டங்களை வகுத்து செயற்படுவதாகத் தெரியவில்லை. எல்லாமும் கவர்ச்சியான வாக்குறுதிகளாகவே இருக்கின்றன.
ஆட்சியாளர்களை தாமே வழிநடத்துவதாகக் கூறிக்கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ, வடக்கு கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி மற்றும் பொருளாதார முன்னேற்ற முயற்சிகள் என்பவற்றை தாம் நேரடியாக முன்னெடுக்காமல், அந்த விடயங்கள் உயர்ந்த இடத்திலிருந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கூறிவருகின்றார்கள். அந்தப் பொறுப்பை தட்டிக்கழித்துள்ளார்கள்.
இவர்கள் கூறும் உயர்ந்த இடத்திலிருந்து இதுவரை வடக்கு கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் என்ன என்பதை கேட்டுவைக்க விரும்புகின்றேன்.
விஷேட செயலணிகள் என்றார்கள், அதற்கு இணைப்பாளர்கள் என்றார்கள் ஆனால் எமது மக்களுக்கு பரிந்துரைக்கப்படுவதோ எல்லாமும் கடன் திட்டங்களே அன்றி வேறு எதுவுமல்ல.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கபடத்தனமாகக் கூறுவதைப்போன்று மத்திய அரசுகள் நேரிலோ அல்லது உயர் மட்டங்களிலில் இருந்தோ தமிழ் மக்களின் பிரச்சனைகளை கவனித்திருந்தால் தமிழ் மக்களின் அத்தனை பிரச்சனைகளும் எப்போதோ தீர்த்து வைக்கப்பட்டிருக்கும்.
அவ்வாறு எதுவும் நடப்பதில்லை என்பதாலேயே எமது மக்களுக்கான பிரச்சனைகளை நாமே தீர்க்க வேண்டும் என்ற யதார்த்தத்தின் அடிப்படையில், கொலை அச்சுறுத்தல்களையும், அரசியல் காழ்ப்புனர்வுடன் கூடிய விமர்சனங்களையும் சுமந்து கொண்டு நாமே நேரடியாக மத்திய அரசில் பங்கெடுத்து எமது மக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வுகளைக்கான முன் வந்திருந்தோம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் தெரிவித்தார்
Related posts:
|
|