ஈ.பி.டி.பிக்கு போதியளவான அரசியல் அதிகாரம் வழங்குவதனூடாகவே தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் – ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை!

Saturday, November 10th, 2018

ஈ.பி.டி.பிக்கு போதியளவான அரசியல் அதிகாரம் வழங்குவதனூடாகவே தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் அந்தவகையில் வரவுள்ள பொதுத் தேர்தலிலாவது தமிழ் மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு போதிய அளவான அரசியல் அதிகாரத்தை வழங்குவார்கள் என நம்புவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

தற்போது ஒரு நாடாளுமன்ற தேர்தலை நாடு எதிர்நோக்கியுள்ளது. இது நாட்டு மக்களுக்கு நன்மை தருவதாகவே அமைந்துள்ளது என எண்ணுகின்றேன். ஏனெனில் நல்லாட்சி என்று கூறி நாட்டில் கடந்த மூன்றரை ஆண்டுகளாக நடைபெற்ற ஆட்சியால் நாட்டு மக்களிடையே பெரும் அவநம்பிக்கை ஏற்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் இவ்வாறான ஒரு நிலைப்பாடு மக்களின் நிலையிலிருந்து பார்க்கும் போது நியாயமானதாகவே காணப்படுகின்றது.

தற்போது நாம் பொறுப்பேற்றுள்ள அமைச்சின் மூலம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் தேர்தல் நடைபெறும் வரையில் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும். அத்துடன் விஷேட தேவைகளை மக்களுக்குபெற்றுக் கொடுக்கவேண்டி ஏற்படுமானால் தேர்தல் ஆணையாளரது ஆலோசனையூடாக அதை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

கடந்த காலங்களில் போலித் தேசியம் பேசி தமிழ் மக்களது வாக்குகளால் ஆட்சி அதிகாரத்தை பெற்று அரசுக்கு முண்டு கொடுத்த தரப்பினர் தமக்கான வளங்களை மட்டும் பெற்றுக்கொண்டதால் தமிழ் மக்கள் பல ஏமாற்றங்களையும் வேதனைகளையுமே சந்திக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

தற்போது நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாது தமிழ் மக்களுக்கும் ஒரு சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்றே கருதுகின்றேன். வரவுள்ள தேர்தலை தமிழ் மக்கள் தமது எதிர்காலத்தை கருத்திற் கொண்டு சிந்தித்து செயற்படுவார்களேயானால் வளமான வாழ்வியல் நிலையை அடையமுடியும் என கருதுகின்றேன்.

அந்தவகையில் வரவுள்ள பொதுத் தேர்தலிலாவது தமிழ் மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு போதிய அளவான அரசியல் அதிகாரத்தை வழங்குவார்கள் என  நம்புகின்றோம்.

அவ்வாறு எம்மிடம் அரசியல் அதிகாரம் கிடைக்கப்பெறுமானால் நிச்சயமாக எமது மக்கள் அபிவிருத்தியால் மட்டுமல்ல அனைத்து உரிமையையும் பெற்றவர்களாக வாழ்வதற்கு வழிவகை செய்ய எம்மால் முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது கட்சியின் ஊடகச் செயலாளர் தோழர் ஸ்டாலின், கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன். கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன், கட்சியின் யாழ் மாவட்ட  மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.

46095569_756997367981664_5140243523009773568_n


யுத்தத்தால் இறந்த உறவுகளை நினைவுகூர பொது தூபி அமைப்பது தொடர்பிலான எமது நிலைப்பாட்டை மக்கள் விடுதலை ...
கல்வியியலாளர் சேவை பதவியுயர்வுக்கு தமிழ், முஸ்லிம்கள் தகுதியற்றவர்களா - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவா...
முப்படைகளிலும் தமிழரது பிரதினி தித்துவம் உறுதிப்ப டுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுளேன்
பாதுகாப்பற்ற இரயில் கடவைக் காப்பாளர்களது பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவிட்டனவா? டக்ளஸ் எம்.பி. நாடாளும...
அரசு நல்லிணக்கத்தை வெளிப்படுத்த தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும் - டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!