மாற்று வலுவுள்ளவர்களின் வாழ்வியலில் மாற்றங்களை கொண்டுவரும் எமது பணிகள் தொடரும் – டக்ளஸ் தேவானந்தா!

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை யாழ். மாவட்ட மாற்று வலுவுடையோர் சுய உதவிக்குழுவின் நிர்வாக உறுப்பினர்கள் சந்தித்து தமது தேவைப்பாடுகள் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடினர்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை செயலகத்தில் மேற்படி சந்திப்பு இன்றையதினம் (13) இடம்பெற்றது.
இதன்போது யாழ்.மாவட்டத்தின் 15 பிரதேச செயலர் பிரிவுகளில் 7000 அதிகமான மாற்று வலுவுடையோர் பல்வேறு தேவைப்பாடுகளுடனும் பிரச்சினைகளுடனும் வாழ்ந்து வருவதாக மாற்றுவலுவுடையோர் சங்க நிர்வாகத்தினர் தெரிவித்திருந்தனர்.
பிறப்பு ரீதியாகவும், யுத்தம் மற்றும் விபத்துக்கள் உள்ளிட்ட காரணங்களினால் மாற்று வலுவுடையோராக வாழ்ந்துவரும் தமக்கு அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களினூடாக வழங்கப்படும் உதவிகளைப்பெற்றுக்கொள்வதில் தாம் இடர்பாடுகளை எதிர்கொள்வதாகவும் இதன்போது சுட்டிக்காட்டினர்.
இந்நிலையில் உதவித்திட்டங்கள் தமக்கு கிடைக்கப்பெறுவதில் உள்ள தாமதங்கள் மற்றும் இடர்பாடுகள் தொரடர்பில் உரிய கவனம் செலுத்தும் அதேவேளை, தமக்கான சுயதொழில்வாய்ப்பு மற்றும் ஏனைய செயற்றிட்டங்களையும் முன்கொண்டு செல்வதற்கு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியிருந்தனர்.
குறிப்பாக மாற்றுவலுவுடையோருக்கான வீடமைப்பு வசதி போக்குவரத்து, கல்விக்கான உதவித்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது.
இதனிடையே குறித்த சங்கத்தின் தேவைப்பாடுகளையும் பிரச்சினைகளையும் கேட்டறிந்துகொண்ட டக்ளஸ் தேவானந்தா துறைசார்ந்தோர் ஊடாக கலந்துரையாடி அவற்றிற்கான தீர்வுகளை பெற்றுத்தருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
Related posts:
|
|