இழப்பீடுகள் பாதிக்கப்பட்ட மக்களை உரிய காலத்தில் சென்றடையாமையே அவலங்கள் தொடரக் காரணம் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Monday, April 1st, 2019

அண்மைக்காலமாக மழை வெள்ளம் காரணமாக வடக்கு மாகாணம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தது. அதில் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கான இழப்பீடுகளை முழுமையாக வழங்கி முடிப்பதற்குள் இன்று எமது பகுதிகளை கடும் வறட்சி நிலையானது வாட்டி வதைத்து வருகின்றது. அந்த வகையில் தற்போது சுமார் 7 ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் வறட்சி காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றே தெரிய வருகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு, பொது நிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

குடிநீருக்கான தட்டுப்பாடு என்பது மிகவும் பாரியளவில்  காணப்படுகின்றது. இவ்வாறு இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டு வருகின்றபோதிலும், இந்த இழப்பீடுகள் மதிப்பீடு செய்யப்படுகின்ற முறைகளிலும், வழங்கப்படுகின்ற முறைகளிலும் ஏற்படுகின்ற தவறுகள் – முறைகேடுகள் காரணமாக எமது மக்கள் இழக்கின்றவற்றுக்கு உரிய இழப்பீடுகள் கிடைப்பதில்லை என்பது இரத்தினபுரி மாவட்டத்திலிருந்தே தெரிய வருகின்றது.

கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் திகதி இரத்தினபுரி மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள படுகெதர மற்றும் அங்கம்மன ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில் பாதிக்கப்பட்ட வீடுகளை மதிப்பீடு செய்வதற்குக்கூட எந்தவொரு அரச அதிகாரிகளும் செல்லாத நிலையில், கடுமையான பாதிப்புகளை – இழப்புகளை சந்தித்தவர்களுக்கு குறைந்தளவிலான இழப்பீட்டுத் தொகைகளும், குறைந்தளவிலான பாதிப்புகள் – இழப்பீடுகளைச் சந்தித்தவர்களுக்கு அதி கூடிய இழப்பீட்டுத் தொகைகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும், சிலருக்கு இரண்டு, மூன்று மடங்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டதாகவும் அம் மக்கள் கூறுகின்றனர்.

இதை வைத்துப் பார்க்கின்றபோது, வடக்கிலே கடந்த காலத்தில் ஏற்பட்ட மழை, வெள்ளம் தொடர்பில்  உரிய முறையில் இழப்பீடுகள் வழங்கப்பட்டிருக்குமா? அனைவருக்கும் வழங்கப்பட்டிருக்குமா? என்ற சந்தேகமே ஏற்படுகின்றது.

ஒன்று, இந்த அரசு அனர்த்தங்கள் ஏற்படுகின்றபோது, இத்தனை ரூபாய் – அத்தனை ரூபா இழப்பீடாகத் தரப்படும் எனக் கூறுகின்றபோதும், அத்தொகை அம்மக்களுக்குக் கிடைப்பதில்லை. இரண்டாவது, அரசு ஒரு தொகை கொடுத்தாலும் அத் தொகையானது உண்மையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போய்ச் சேருவதில்லை. இந்த இரண்டு விடயங்களுமே எமது மக்களையே இறுதியில் பாதிக்கச் செய்கின்றது.

2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் 05ஆம் திகதி அவிசாவளைப் பகுதியில், கொஸ்கம சாலாவ இராணுவ ஆயுதக் களஞ்சியம்; வெடித்ததில் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 400 குடும்பங்களின் இழப்புகள் தொடர்பான பிரச்சினை இன்னமும் தீரவில்லை என அம் மக்கள் தெரிவிக்கின்றனர்.

2016ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 30ஆம் திகதிக்கு முன்பதாக அங்கு பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கான கடைத் தொகுதி கட்டி முடிக்கப்படும் என்று கூறப்பட்ட போதும், அதுவும் இன்னமும் முடிந்தபாடில்லை என்றே அம் மக்கள் தெரிவிக்கின்றனர்.

அங்கும்கூட உரிய வகையில் இழப்பீட்டு மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படவில்லை என்றே தெரிய வருகின்றது.

பாதுகாப்பு அமைச்சுக்கென அதிகளவிலான நிதி ஒதுக்கீடுகள் வரவு – செலவுத் திட்டத்தின் மூலமாக ஒதுக்கப்படுகின்றன. வடக்கிலே படையினர் வசமிருக்கின்ற எமது மக்களது காணி, நிலங்களை விடுவிக்கக் கோரினால், இராணுவம் அதற்கு நிதி கேட்பதாகக் கூறப்படுகின்றது. தெற்கிலே இராணுவ ஆயுத களஞ்சிய வெடிப்பினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் உரிய நிவாரணங்கள் வழங்கப்படவில்லை எனில், இதைப் பற்றி என்ன சொல்வது? எனக் கேட்க விரும்புகின்றேன்.

Related posts: