இளைஞர்களுக்கு எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கை கொடுக்கும் நல் வழிகாட்டிகளாக செயற்படுங்கள் – தோழர்கள் மத்தியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, April 28th, 2018

எமது இளைஞர்களுக்கு நல்வழிகளை காட்டும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு அதற்கேற்ற வகையில் திட்டங்களை வகுத்து அவற்றை நல்லமுறையில் முன்னெடுக்கவேண்டியது காலத்தின் கட்டாய பணியாகும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்ற கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர்கள், பிரதேச நிர்வாக மற்றும் உதவி நிர்வாக செயலாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

நாம் எப்போதும் மக்கள் நலன்சார்ந்த செயற்றிட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவற்றை கடந்தகாலங்களில் செயல்வடிவில் காட்டியுள்ளோம். கடந்தகால அனுபவங்களையும் படிப்பினைகளையும் வைத்துக்கொண்டு எதிர்காலத்தை நம்பிக்கையுடன் முன்கொண்டு செல்வதற்கு நாம் ஒவ்வொருவரும் திடசங்கற்பம் பூணவேண்டும்.

சூழல்களை நாம் உருவாக்குகின்ற அதேவேளை உருவாகுகின்ற சூழல்களையும் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

உழைப்பு, தற்துணிவு, அர்ப்பணம், ஆகியவற்றை அடிப்படையாக வைத்துக்கொண்டே நாம் மக்களுக்கான சேவைகளை இயன்றளவில் செய்துவருகின்றோம். கடந்த 31 வருடங்களாக எத்தனையோ இடர்பாடுகளையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டு அந்தந்தக் காலத்தில் அந்தந்த அரசுகளுடன் மேற்கொண்டுவந்த ஒர் இணக்க அரசியலினூடாக கட்சி சார்ந்து  நாம் பல்வேறுபட்ட பணிகளை முன்னெடுத்திருந்தோம்.

இன்று நாம் எதிர்கொண்டுள்ள முக்கிய பிரச்சினையாக எமது எதிர்கால சந்ததியினர் வழிதவறிப் போகின்றமையும் அதிகரித்த விபத்துக்கள் காரணமாக அநியாயமான உயிரிழப்புக்களை  சந்தித்து வருகின்றமையும் தான் முதன்மை பெறுகின்றது.

எனவே எமது இளைஞர்களுக்கு எதிர்காலம் தொடர்பான நம்பிக்கையை கொடுத்து நல்ல வழியைக்காட்டும் பொறுப்பை ஏற்று அதற்கேற்றவகையில் நல்ல சமூகத்தை கட்டியெழுப்பக் கூடியதான மனதைரியத்தை அவர்களுக்கு வழங்கும் வகையில் செயற்றிட்டங்களை முன்னெடுக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம் என்றும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.

2

Related posts: