இளம் சந்ததியினர் தடம் மாறிச் செல்ல இருந்த தமிழ் தலைமைகளே காரணம் – யாழ்ப்பாணத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, November 9th, 2018

எமது இளம் சந்ததியினர் இன்று தடம்மாறிச் சென்றமைக்கு தவறான தமிழ் தலைமைகளே காரணமாக அமைந்தள்ளது. ஆனால் அவர்களை நல்வழிப்படுத்தி அவர்களது எதிர்காலதை சிறந்ததாக மாற்றியமைப்பது காலத்தின் அவசியமாக உள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, புனரமைப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து விவகார அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற யுத்தம் மற்றும் வன்செயல்கள் காரணமாக பல்வேறு பாதிப்புக்களைச் சந்தித்த மக்களுக்கு இழப்பீட்டுக் கொடுப்பனவுகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாண மக்களுக்கு நல்லிணக்கத்தையும் வாழ்த்துக்களையும் தாம் தெரிவிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் என்னிடம் தெரிவித்ததற்கு அமைவாக அவர்களது வாழ்த்துக்களை இந்த வேளையில் தெரிவித்துக்கொள்கின்றேன்.

தற்போதுள்ள இந்த ஆட்சி தொடரும் என்பது மட்டுமல்லாது எமது சேவைகளும் நிச்சயம் தொடரும் என்றும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எமது அமைச்சினூடாக வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தியையும் நாம் பொறுப்பேற்றுள்ளோம். அதை நிச்சயம் நிறைவேற்றுவோம்.

அந்த வகையில் அரசியல் பலத்தை மக்கள் எமக்கு தருவார்களேயானால் மேலும் பல வேலைத்திட்டங்களை சிறப்பாக எம்மால் முன்னெடுக்க முடியும். தற்போது வழங்கப்படும் இழப்பீட்டுக் கொடுப்பனவுகளை மேலும் விரிவுபடுத்தவும் விரைவுபடுத்தவும் எண்ணியுள்ளோம். அந்த வகையில் விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் தொடர்பிலும் நாம் பரீசீலிக்கவுள்ளோம்.

அதுமாத்திரமன்று நாம் எமது அமைச்சினூடாக குறைந்த வட்டியுடனான கடன் உதவித் திட்டத்தையும் வழங்கவுள்ளோம். அந்த உதவித் திட்டங்களினூடாக வீடுகள் திருத்தியமைத்தல் மற்றும் தொழில்வாய்ப்புக்களை மேம்படுத்தல் தொடர்பாகவும் கரிசனை கொண்டுள்ளோம்.

டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டுமல்லாது வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள படைத்தரப்பினர் வசமுள்ள அரச மற்றும் தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பிலும் உரிய தீர்வுகளைப் பெற்றுத் தருவதற்கு வடக்கு கிழக்கு மாகாண அளுனர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியுள்ள நிலையில் விடுவிக்கப்படாத பகுதியிலுள்ள பாடசாலைகள் தொடர்பிலும் ஜனாதிபதியின் கவனத்திற்கு நாம் கொண்டு சென்றுள்ளோம்.

யாழ்.குடாநாட்டைப் பொறுத்தவரையில் இன்றுள்ள இளைய சமூகமானது சமூகத்திற்கு ஒவ்வாத விடயங்களில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், இவ்விடயங்களை சீர்ப்படுத்துவது  தொடர்பில் நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டியுள்ளது. இது காலத்தின் தேவையாகவும் உள்ளது. இதனை முன்னேற்றகரமாக முன்னெடுத்து எமது சமூகத்தை சிறந்ததொரு சமூகமாக மாற்றியமைப்பதற்கு முழுமையான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளோம். அதற்கு அனைவரது ஒத்துழைப்பும் ஒத்தாசையும் அவசியமானது. என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்து இழப்பீட்டுக் கொடுப்பனவுகளுக்கான காசோலைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட துறைசார்ந்தவர்கள் பயனாளிகளுக்கு வழங்கிவைத்திருந்தனர். இதன்போது பிரதியமைச்சர் காதர் மஸ்தான்,  புனர்வாழ்வு அதிகார சபையின் தலைவர் அன்னலிங்கம், அமைச்சின் சிரேஸ்ட ஆலோசகர் டொக்டர் விக்னேஸ்வரன், செயற்பாட்டு பணிப்பாள் குலேந்திரன், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

viber image 7

viber image

viber image 1

 

Related posts: