இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுக்கள் மாகாண மட்டத்திலும் விஸ்தரிக்கப்பட வேண்டும் -டக்ளஸ் தேவானந்தா

Monday, November 21st, 2016

இலஞ்சம் அல்லது ஊழல்கள் பற்றிய விசாரணைகள் ஆணைக் குழுவில் முன்வைக்கப்பட்டுள்ள பல முறைப்பாடுகள் குறித்த விசாரணை  அறிக்கைள் பல இன்னும் முடிவுறுத்தப்படவில்லை எனத் தெரிய வருகிறது. அதே நேரம் அறிக்கைள் சில பூரணப்படுத்தப்பட்ட நிலையிலும், அவை தொடர்பிலான மேலதிக நடவடிக்கைகள் தாமதமாகி வருவதாகவும் கூறப்படுகின்றது. இது தொடர்பில் உண்மை நிலை வெளிப்படுத்தப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா கடந்த 19ம் திகதி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், அரசியல் காழ்ப்புணர்ச்சிகள், உள் நோக்கங்கள் காரணமாகவும், குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்ற நிலைமைகளும் காணப்படுகின்றன. இவ்வாறான பொய்க் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றபோது, குற்றஞ் சுமத்தப்படுகின்றவர் சமூகத்தில் தவறான கண்ணோட்டத்திற்கு ஆளாக வேண்டி ஏற்படுகின்றது. எனவே,  சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் உரிய விசாரணைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், அக் குற்றச்சாட்டு பொய்யானது எனக் காணப்பட்டால், அக் குற்றம் சுமத்தப்படவருக்கு நிவாரணங்களை வழங்கவும், இலஞ்சம் மற்றும் ஊழல்கள் தொடர்பான சட்டத்தில் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவோருக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டியதாக குறிப்பிடப்பட்டுள்ள சட்டத்தின் பிரகாரம் குற்றச்சாட்டினை சுமத்தியவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என நான் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

அதே நேரம், நாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகளை தடுக்கும் நோக்கிலும், அவை தொடர்பான விசாரணைகள் குறித்த கால தாமதங்களை தவிர்க்கும் வகையிலும், பொது மக்களுக்கு ஏற்படக்கூடிய பொருளாதார மற்றும் கால விரயங்களையும், சிரமங்களையும் தவிர்க்கும் வகையிலும்  மாகாண மட்டங்களிலும் இலஞ்ச, ஊழல் தொடர்பான விசாரணை ஆணைக் குழுவை விஸ்தரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்த விரும்புகின்றேன் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

625.500.560.350.160.300.053.800.900.160.90 (1)

Related posts: