இலஞ்சம் ஊழல் எழுதப்படாத சட்டமாகவே இருக்கின்றது – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Friday, July 20th, 2018

இந்த நாட்டைப் பொறுத்த வரையில், குப்பை அகற்றுவதிலிருந்து, கல்வித்துறை, ஏனைய அரச கருமங்கள், எமது மக்களின் கொள்வனவுகள் உள்ளிட்ட ஒரு நபரது இறுதிக் கிரியைகள் வரையில் இந்த நாட்டில் இலஞ்சம், ஊழல் மோசடிகள் நிகழ்த்தப்பட்டே வருகின்றன. இந்த நாடு இன்று இந்த நிலைக்குப் பின்தள்ளப்பட்டிருப்பதற்கு முக்கியக் காரணம் இந்த இலஞ்சம், ஊழல் மோசடிகளே என்பதை எவராலும் மறுக்க இயலாது. அரச இயந்திரத்துடன் இணைந்த ஒரு பொறிமுறையாகவே இந்த நாட்டில் இலஞ்சம், ஊழல், மோசடிகள் பின்னிப் பிணைந்துள்ளன எனக் கூறினால், அது மிகையாகாது என்றே நினைக்கின்றேன என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றையதினம் நாடாளுமன்றில் நடைபெற்ற இலஞ்சம ஊழல் திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தள்ளார்.

மேலம் அவர் தெரிவிக்கையில் –

இந்த நாட்டின் இத்தகைய நிலைமைகளே உலகளாவிய ரீதியிலான ஊழல் குற்றச்சாட்டுகளில் இந்த நாட்டினை மிகவும் மோசமான நிலையில் காட்டுவதற்கு உறுதுணையாகின்றன.

அந்த வகையில், இந்த நாட்டில் ஊழல், மோசடிகளை ஒழிப்பதாக அறைகூவல் விடுத்துக் கொண்டு, ஆட்சிபீடமேறியுள்ள இந்த அரசாங்கத்தினாலும் இந்த நாட்டில் இலஞ்சம், ஊழல், மோசடிகளை ஒழிப்பதற்கோ – கட்டுப்படுத்துவதற்கோ இயலாதுள்ளமையை தொடர்ந்தும் காணக்கூடியதாக இருக்கின்றது.

உலகின் இலஞ்சம், ஊழல் மலிந்த நாடுகளை வெளிப்படையாக்குகின்ற அமைப்பான ‘டிரான்ஸ்பெரன்சி இண்டர் நெசனல்’ (Transparency Internationai)     அமைப்பின் அண்மைக்கால ஊழல் கருத்தாய்வுக் குறியீட்டின் பிரகாரம் – (Corruption Perception Intex – CPI) –   –   இலங்கையானது இலஞ்ச, ஊழல் தொடர்பில் கடந்த வருடமும் சிறந்த முன்னேற்றத்தைக் காணவில்லை என்றே கூறப்பட்டுள்ளது.

மேற்படி குறியீட்டுக்கு அமைவாக 0 புள்ளியினைப் பெற்றிருப்பின், அந்த நாடு ஊழல் மலிந்த நாடு என அர்த்தப்படுகின்ற நிலையில், 100 புள்ளிகளைப் பெற்றிருப்பின் அந்த நாடு ஊழலற்ற நாடு என அர்த்தப்படுகின்ற நிலையில், இலங்கைக்கு கடந்த ஆண்டு 37 புள்ளிகளே கிடைத்துள்ளன.

ஊழலின் பொதுவான தோற்றமாக இலஞ்சமே காணப்படுகின்றது. இந்த இலஞ்சம் என்கின்ற விடயம் எமது நாட்டைப் பொறுத்தவரையில், நுழையாத இடங்களே இல்லை என்ற அளவுக்கு மலிந்து காணப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் ஊழலுக்கு எதிரான தடுப்புச் சம்மேளனத்தில் – (United Nations Convention against Corruption – UNCAC) – இலங்கை கையொப்பமிட்டு, அங்கீகரித்துள்ளது. இதன் பிரகாரம், மேற்படி சம்மேளனத்தின் மாநிலமாக இலங்கையானது அச் சட்டத்திற்கு அமைவாக உடன்பட்டு, செயற்பட வேண்டியுள்ளது. அதாவது, மேற்படி சட்டத்தின் 5 (2) பிரிவிற்கமைவாக இலங்கையானது ஊழல் ஒழிப்புக்கு சாதகமான சட்ட மற்றும் நிர்வாக சூழலை உருவாக்க வேண்டியுள்ளது.

அதேநேரம் இலங்கையானது, ‘திறந்த அரசாங்க பங்குடமை’யிலும் (Open Goverment Partneship – OGP) – அங்கத்துவம் வகிக்கின்றது. இதனது பொறுப்பின் பிரகாரம், ஊழல் எதிர்ப்பிற்கான முயற்சிகளை பலப்படுத்துகின்ற வகையில் இரண்டு வருடங்களுக்கான ஊழல் தடுப்புத் திட்டம் ஒன்றினை விருத்தி செய்வதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்த வருடத்தில் ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் நடுப்பகுதி வரையிலான காலப்பகுதிக்குள் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் 1,398 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு தெரிவித்திருக்கின்றது. கடந்த வருடத்தில் மாத்திரம் இலங்கையில் நாடளாவிய ரீதியில் 2,768 முறைப்பாடுகள் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு தொடர்பிலான விசாரணை ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ளதாகவும் இதே ஆணைக்குழு தெரிவித்திருக்கின்றது.

இவை அனைத்தும் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளின் மூலமாக பகிரங்கமான குற்றச்சாட்டுகள் என்றே நினைக்கின்றேன். இதைவிட அதிகமான இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பிலான குற்றங்கள் இடம்பெற்றிருக்கக்கூடும் என்பதில் சந்தேகமில்லை.

எனவே, முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டால்தான் இலஞ்சம் மற்றும் ஊழல்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்கின்ற நிலையில், இந்த நாட்டில் இலஞ்சம், ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்கோ அல்லது கட்டப்படுத்துவதற்கோ போதியளவில் முடியாது என்பதை நான் தொடர்ந்து கூறி வருகின்றேன்.

Related posts:


புலம்பெயர் இலங்கையர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை : ஆராயும் குழுவில் டக்ளஸ் தேவானந்தா!
நந்திக்கடல் பிரதேசத்தை நம்பி வாழும் குடும்பங்களின் வாழ்வாதார பாதிப்பு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்...
முரண்பாடுகளை தவிர்த்து இடர் காலத்தை எதிர் கொண்டு எதிர்காலத்தை உருவாக்குவோம் – நாட்டு மக்களுக்கு டக்ள...