இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விரைவில் சந்திப்பு – கடற்றொழிலாளர்களின் விவகாரத்திற்கு ஆரோக்கியமான முடிவு கிடைக்கும் என அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, March 3rd, 2023

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் விரைவில் இடம்பெறவுள்ள சந்திப்பின் போது, இந்திய கடற்றொழிலாளர்களின்  விவகாரத்திற்கு ஆரோக்கியமான முடிவு கிடைக்கும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை வெளியிட்டார்.

இலங்கையின் வட மாகாண கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகளுக்கும் இந்திய கடற்றொழிலாளர் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று கச்சதீவில் இடம்பெற்ற நல்லெண்ண கலந்துரையாடலின் ஒருங்கிணைப்பாளராக கலந்து கொண்டு, இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறி எல்லை தாண்டிய சட்ட விரோத தொழில் முறைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாக தெளிவுபடுத்தி கருத்து தெரிவிக்கும் போதே இலங்கையின்  கடற்றொழில் அமைச்சர்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்பதாக இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத்தின் கடற்றொழிலாளர்களுக்கான  தலைவரான MC முனுசாமி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

கச்சதீவு அந்தோனியார் ஆலய உற்சவத்திற்காக வருகை தந்திருந்த நிலையில் இருவருக்கும் இடையில்  இடம்பெற்ற நல்லெண்ணச் சந்திப்பின் போதே குறித்த நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: