இலங்கை அரசிடம் நிமிர்வாக சென்ற என் மக்களுக்கு வேண்டியதை பெற்றுத்தர எனக்கு ஆணை தாருங்கள் – யாழ்ப்பாணத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறைகூவல்!

Sunday, August 2nd, 2020

மரணம் என்னை துரத்திய போதும் நான் நேசிக்கின்ற இந்த மக்களின் அவலப்பட்ட வாழ்விற்கு பிரகாசமான ஒரு வாழ்வை  ஏற்படுத்தி கொடுப்பதற்காகவே நான் தொடர்ந்தும் அரசியலில் பயணிக்கின்றேன் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுகின்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் யாழ் நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட இறுதிக்கட்ட பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில் –

போர் செய்வது வீரம் தான். ஆனால் இந்த யுத்தத்தை எம்மால் வெல்லமுடியுமா எனப் பார்த்து நாம் முழுமையாக பலம் பெறும் வரை போரில் ஒதுங்கி போரைத் தவிர்த்தல் அதனை விட வீரமானது என்பார் சீன போரியல் மேதை ‘சுன் த்சு’

இப்போது நிலவும் பூகோள ஒழுங்கில் வல்லரசு நாடுகள் எதனை விரும்பும், எதனை விரும்பாது என்பதை வெறுமனே அரசியல்வாதியாக இருந்து மட்டும் நான் சொல்லவில்லை, தமிழ் விடுதலைப் போராட்ட இயக்கங்களின் வரலாற்றில் முதலாவது இராணுவ தளபதியாக இருந்து நான் உங்களுக்கு நடைமுறையில் எது எமக்கு வெற்றி தரும் என்பதனைச் சொல்லுகிறேன்,

“வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல்”  என்பார் வள்ளுவர் அதாவது  செயலின் வலிமையும், தன் வலிமையும், பகைவனுடைய வலிமையும், இருவர்க்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செய்யவேண்டும் என்பதாகும்.

தற்போது நாம் எதிர்கொள்ளும் நடைமுறை யதார்த்தத்தில் போரினால் மிகுந்த அழிவை சந்தித்து நாளாந்த வாழ்வுக்கே அல்லாடும் எமது மக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களை உருவாக்கி மக்கள் சனத்தொகைப் பெருக்கத்தை உருவாக்குவது தான் புத்திசாலித்தனமானதே தவிர கையிலோ பின்புலத்திலோ எந்தப் பலமும் இல்லாமல் வெற்று வீர வார்த்தைகளைப் பேசி மக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளாமல் இருக்கின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தி மக்களை அமைதியான முறையில் வாழ வைத்தலே எனக்கு இப்போது இருக்கும் காலக் கடமையாக நினைக்கிறேன், இதைத் தவிர எம் மக்கள் மீண்டெழுவதற்கு எம்முன்னே வேறு வழிகள் இல்லை,

அதனால் ஆரம்பத்தில் இருந்தே நான் சொல்லி வருவதைப் போன்று எந்தப் பலமும் இல்லாத வெற்று போர்க்கூச்சல் வார்த்தைகளை நம்பாமல் இம்முறை மக்கள் யதார்த்த வழியில் தம் விடிவுக்கான வழியை பெற என்னுடைய நிலையை ஆதரித்து எனக்கு மேலும் பலமூட்டி இலங்கை அரசிடம் நிமிர்வாக என் மக்களுக்கு வேண்டியதை பெற்றுத்தர எனக்கு ஆணை தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Related posts:

மக்களின் தேவைகளை அறிந்து சேவை செய்பவர்களை வெற்றிபெறச் செய்யுங்கள் - கண்டாவளையில் டக்ளஸ் எம்.பி. தெரி...
எமது மாணவர்கள் தாய்மொழியுடன் இதர மொழிகளிலும் தேர்ச்சியுற்றவர்களாக உருவாக வேண்டும் - டக்ளஸ் எம்.பி தெ...
வரலாற்று பாட நூல்கள் தமிழர்களை அந்நியர்களாகவே தொடர்ந்தும் அடையாளம் காட்டுகின்றன – டக்ளஸ் எம்.பி. சுட...

வடக்கில் கடற்றொழிலாளர்கள் சுதந்திரமாகத் தொழிலை மேற்கொள்ள வழிசமைத்துக் கொடுத்தவர்கள் நாம் - பாஷையூரில...
கசப்பான சம்பவங்களுக்கு மறப்போம் மன்னிப்போம் என்ற வார்த்தை மட்டும் பரிகாரமாகாது – டக்ளஸ் எம்.பி சுட்ட...
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு ஆர்வமாக உள்ள முதலீட்டாளர்களுடன் அமைச்சர் டக்ளஸ...