இலங்கையர்களாக வாழ வேண்டும் என்பதற்காக தமிழர்கள் என்ற அடையாளத்தை இழப்பதற்கு நாம் தயாராக இல்லை!

Untitled-3 copy Thursday, December 7th, 2017

அமைச்சர் கௌரவ மனோகணேசன் அவர்களது ஏற்பாட்டில் அவரது அமைச்சு அண்மையில் ஒரு பாராட்டத்தக்க முயற்சியை மேற்கொண்டிருந்தது. கையடக்கத் தொலைபேசி மூலமான குறுந் திரைப்படப் போட்டி ஒன்றினை நடத்தியிருந்தது. அதில் ஒரு குறுந் திரைப்படம் ‘பேர்த் செர்ட்டிபிகட்’ (பிறப்பச் சான்றிதழ்) என்ற பெயரில் எடுக்கப்பட்டிருந்தது. உண்மையில், இந்த நாட்டில் தமிழ் மொழி மூலமான பரிச்சயம் மாத்திரமே கொண்டவர்கள் எமது நாட்டிலுள்ள அரச அலுவலங்களில் மொழி பிரச்சினையால் முகங்கொடுக்கின்ற சிரமங்களை – பாதிப்புகளை அந்த குறுந் திரைப்படம் மிக அழகாக எடுத்துக் காட்டியிருந்தது.

அதே நேரம் அமைச்சர் அவர்கள் அரச படிவங்களை தமிழில் மொழிபெயர்க்கின்ற பயனுள்ள செயலினை மேற்கொண்டு வருகின்றார். அத்துடன், அதனை வலுவுள்ள வகையில் செயற்படுத்துவதற்கு தமிழ் அலுவலர்களும் தேவை. அந்த வகையில் 1000 மொழி அலுவலர்களை எதிர்வரும் ஜனவரி மாதம் பணிகளில் இணைத்துக் கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்தப் பணிகளை அவர் சிறப்புற முன்னெடுப்பார் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

இந்த நாட்டில் தமிழ் மக்களுக்க என்ன பிரச்சினை இருக்கின்றது? எனக் கேட்போருக்கு இந்த குறுந் திரைப்படத்தைப் போட்டுக் காட்ட வேண்டும் என அமைச்சர் அவர்களிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றேன்.

2006ஆம் ஆண்டு நடந்த சர்வகட்சி மாநாட்டின் இறுதி அறிக்கையில் ஒரு முன்மொழிவு முன்வைக்கப்பட்டிருந்தது.

அதாவது – ‘அரசியல் யாப்பில் இலங்கை மக்கள், சிங்களவர், இலங்கைத் தமிழர், முஸ்லிம்கள், இந்தியத் தமிழர், மற்றும் பிற கூறுகள் அடங்கியுள்ளன. எந்தவொரு பிரிவினரும் தங்கள் மொழியைப் பேணவும், அவர்களது கலாசரத்தை பாதுகாத்து, முன்னெடுத்துச் செல்வதற்கும், அரச அதிகாரத்திலே தங்களது பங்கைப் பெறவும், சகல அரச நிறுவனங்களிலும் உரிய பிரதிநிதித்துவத்தைப் பெறவும் உரிமையுடையவர்கள் ஆவர். அதே சமயத்தில் இவர்கள் அனைவரும் இலங்கையர் என்ற அடையாளத்திற்குள் அடங்குவர்’ என்பதே அந்த முன்மொழிவாகும்.

இந்த முன்மொழிவு சட்டவாக்கமாக்கப்பட்டு, நடைமுறைக்கு வந்திருக்குமானால், தேசிய நல்லிணக்கம் என்பது இந்த நாட்டில் எப்போதோ ஏற்பட்டிருக்கும். அத்தகையதொரு நிலை உருவாக்கப்படாமல், பல்வேறு பிரச்சினைகள் – தேவைகளுக்கு மத்தியில் எமது மக்களைத் தள்ளிவிட்டு, அதிலிருந்து எமது மக்கள் மீள இயலாத நிலையில், தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது என்பது குதிரைக் கொம்பாகவே இருந்துவிடும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

தமிழ் மக்கள,; இலங்கையர்களாக வாழ வேண்டும் என்பதற்காக தமிழர்கள் என்ற அடையாளத்தை இழப்பதற்கோ, தமிர்களாக வாழ வேண்டும் என்பதற்காக இலங்கையர்கள் என்ற அடையாளத்தை இழப்பதற்கோ தயாராக இல்லை. தமிழ் மக்கள் இலங்கையர்களாகவும், தமிழர்காளகவுமே வாழ விரும்புகின்றார்கள் என்ற கருத்தினை நான் தொடர்ந்து முன்வைத்து வருகின்றேன். இதுதான் யதார்த்தம். இந்த யதார்த்தம் உணரப்பட வேண்டும் – என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள், மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு, சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு, தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சு, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு, உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவிததுள்ளார்.

Untitled-3 copy


மக்கள் நேசிப்போடு விதைத்தவை பயன்மிகுந்ததாக எமது மண்ணில் விளைவது கண்டு எமது மக்களைப்போல் நானும் பூரிப...
தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் காணிகள் விடுவிப்பு - ஜனாதிபதிக்கு டக்ளஸ் தேவானந்தா அவசர கடிதம்!
முல்லை மாவட்டத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!
யாழ்.மாவட்ட விவசாயிகளுக்கு நியாய விலையில் விதை வெங்காயம் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியு...
வறட்சி காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை...