இறுதி யுத்தம் நடைபெற்ற இடத்தில் பொது நினைவுத்தூபி அமைய வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!
Wednesday, October 10th, 2018அங்கவீனமுற்ற ஆட்கள் என இங்கு குறிப்பிடப்பட்டிருக்கிறது. கடந்தகால யுத்தம் காரணமாக முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களாக பலநூறு பேர் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலே உரிய மருத்துவ வசதிகளைப் பெற முடியாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தொடர்பில் ஒரு விசேட மருத்துவ வசதிகள் கொண்ட ஓர் அமைப்பு முறை ஏற்பாடு அவசியமாகின்றது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நடைபெற்ற இழப்பீடுகளுக்கான எதிரீடுகள் வழங்குதல் தொடர்பிலான அலுவலகம் தொடர்பில் இடம்பெறுற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
அத்துடன் இங்கே, இன்னலுற்ற ஆட்களின் குழுக்களுக்கான அல்லது, அத்தகைய இன்னலுற்ற ஆட்களின் உறவினர்களுக்கான பயனுள்ளவொரு பரிகாரத்திற்கும், நலன்களுக்குமான உரிமையை ஏற்று அங்கீகரிக்க கருதப்படுகின்ற வழிமுறைகள் பற்றி கூறப்படுகின்றது.
இன்னலுற்ற ஆட்களின் உறவினர்கள் என்கின்றபோது, அந்த உறவினர்களும் இன்னலுறுகின்றவர்களே என்ற வகையில் கணிக்கப் பெற்றே அவர்களுக்கான இழப்பீடுகள் அளிக்கப்பட வேண்டும். இங்கு ஒருவரது இறப்பினால் – கொலையினால் அல்லது காணாமற்போகச் செய்யப்பட்டதனால் அல்லது அங்கவீனமானதால் அதற்குரிய இழப்பு என்கின்ற அடிப்படையில் ஒரு கணிப்பும், அந்த இறந்த – கொலையான அல்லது காணாமற்போகச் செய்யப்பட்ட அல்லது அங்கவீனமான நபரினால் அந்தக் குடும்பம் இழக்க நேரிட்டுள்ள வருமானம் என்ற அடிப்படையில் ஒரு கணிப்பும் கொண்டு மேற்படி இழப்பீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் இந்த இடத்தில் முன்வைக்க விரும்புகின்றேன்.
மேலும், இந்த அலுவலகம் காணப் போவதாகக் கூறப்படுகின்ற பரிகாரங்கள் – நலன்கள் தொடர்பான விடயங்களில் நினைவுச் சின்னங்கள் உட்பட இறந்த ஆட்களை நினைவூட்டிக் கொள்ளும் வழிவகைகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
யுத்தம் காரணமாக இறந்தவர்களை நினைவுக் கூறத்தக்க வகையிலும், மதக் கிரியைகளை மேற்கொள்வதற்கும் ஒரு பொதுவான நினைவுத்தூபி அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை நான் இந்தச் சபையிலே முன்வைத்திருந்தேன். அதற்கான அனுமதி கிடைத்திருந்தும் அது இன்னும் சாத்தியமாகாத நிலை காணப்படுகின்றது. எனவே, இறுதி யுத்தம் நடைபெற்று, அதிகளவிலான உயிர்கள் பலியான இடத்தில் அந்த நினைவுத்தூபியை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றேன்.
Related posts:
|
|