இருமொழிக் கொள்கை அமுல்ப்படுத்தப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

Friday, January 11th, 2019

ஆரசியலமைப்பு வரைபிலே மொழி என்ற தலைப்பின் கீழான 52 (2) ஆம் சரத்திலே எந்தவொரு பிரதேச செயலகப் பிரிவிலும் வாழும் சிங்கள அல்லது தமிழ் மொழிச் சிறுபான்மையினர் மொத்த சனத் தொகையின் எட்டில் ஒன்றினை மிகைத்து ஜனாதிபதியினால் அவ்வாறாகப் பிரகடனப்பத்தப்படுகையில், அப் பிரதேச செயலகப் பிரிவின் அரச பதிவுகளினைப் பேண சிங்களமும், தமிழும் பயன்படுத்தப்படும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஏற்பாடு கொழும்பு போன்ற பகுதிகளுக்கு ஏற்புடையது எனினும், நாட்டின் நாடாளுமன்றம் உள்ளடங்கலாக அமைச்சுக்கள்,  தலைமை அரச திணைக்களங்கள் அமைந்துள்ள ஸ்ரீ ஜெயவர்தனபுரவுக்கு இது ஏற்புடையதாக அமையாது. எனவே, இரு மொழிக் கொள்கையானது அமுல்படுத்தப்படல் வேண்டும் என்ற விடயத்தினை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற அரசியலமைப்பு வரைபு தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

மத்திய நிறைவேற்றாளர் – குடியரசின் தலைவர் என்கின்ற தலைப்பின் கீழான 90 (1) என்ற சரத்தில் அமைச்சரவையின் செயலாளரை பிரதமர் நியமிக்கலாம் என்ற ரீதியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் நீக்கப்பட்டு, தற்போதைய நிலையில் இருப்பதைப் போன்று ஜனாதிபதியால் அமைச்சரவையின் செயலாளர் நியமிக்கப்படல் வேண்டும் எனக் குறிப்பிடப்படுவதையே நான் விரும்புகின்றேன்.

இரண்டாம் சபை என்கின்ற தலைப்பின் கீழ், இரண்டாம் சபைக்கு 55 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படல் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரண்டாம் சபையானது சிறுபான்மை இன மக்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகக் கொண்டுவரப் படுவதால் 50க்கு 50 என்ற விகிதாசாரத்தில் சிறுபான்மை, பெரும்பான்மை இன ரீதியில் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற விடயத்தையே நான் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றேன்.

ஏனெனில், மாகாண சபையின் அதிகாரங்கள் பறிபோகாமல் இருப்பதற்கும் இந்த 50க்கு 50 என்ற இன விகிதாசார உறுப்பினர்கள் தேர்வே சிறந்தது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தல் பற்றி இங்கே       குறிப்பிடப்பட்டுள்ளவாறு வடக்கு மாகாணத்திற்கு மேலதிகமாக 4 ஆசனங்கள் வழங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதேபோன்று கிழக்கு மாகாணத்திலிருந்தும் யுத்தச் சூழ்நிலை காரணமாக சுமார் 3 இலட்சம் பேர் வரையில் இடம்பெயர்ந்திருப்பதால், கிழக்கு மாகாணத்திற்கும் 3 மேலதிக ஆசனங்கள் தேவை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அதேநேரம், இந்த வரைபில் மாகாண சபைகள் குறித்ததான தலைப்பின் கீழான 241 (3) சரத்தில் ஜனாதிபதியினால் அதிகார பத்திரத்தின் ஊடாக ஆளுநரை தெரிவு செய்ய முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு ஆளுநர்கள் நியமனம் பெறுகின்ற நிலையில் அவர்கள் எதேச்சதிகாரங்களுடன் நடந்து கொள்ள வாய்ப்புகள் அதிகம் என்பதால், பிரதமருடன் கலந்தாலோசித்து, முதலமைச்சரின் ஒத்திசைவோடு, ஜனாதிபதியால் ஆளுநர் நியமிக்கப்படல் வேண்டும் என்ற விடயமே சிறந்ததாக அமையும் என்பதை நான் குறிப்பிட விரும்புகின்றேன்.

இதே தலைப்பின் கீழ் 243 (1) எனும் சரத்தில் மாகாண சபைக்கு முதலமைச்சருடன் சேர்த்து 6 அமைச்சர்கள் எனக் குறிப்படப்பட்டுள்ளது. மாகாண சபையொன்றில் அங்கம் வகிக்கின்ற மொத்த உறுப்பினர்களில் 5ல் 1 பகுதியினரை அமைச்சர்களாக்கலாம் என்ற யோசனையை நான் முன்வைக்க விரும்புகின்றேன்.

அத்துடன், 244 (5) சரத்தில் நியதிச் சட்டங்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ள வகையில் நியதிச் சட்டங்களை ஆளுநரிடம் சமர்ப்பித்த பின்னர் அங்கீகாரத்திற்காக மாகாண சபையில் சமர்ப்பிக்கப்படுவதற்கு 7 நாட்களுக்கு முன்னர் அதனை வர்;த்தமானியில் பிரசுரிக்கப்படல் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயத்தின்போது, மாகாண சபைக்கென ஒழுங்கு பத்திர முறைமையொன்றைக் கொண்டு வந்து, ஒழுங்கு பத்திரத்தில் அதனை மாகாண சபைக்கு சமர்ப்பித்து, மாகாண சபையின் ஒப்புதல் பெறப்பட்டதன் பின்னர் அதனை வர்த்தமானியில் பிரசுரிக்கலாம் என்ற யோசனை சிறப்பானதாக இருக்கும் என நான் எண்ணுகின்றேன்.

மாகாண பொலிஸ் என்ற விடயம் தொடர்பிலான 277 சரத்தில் மாகாண பொலிஸ் தொடர்பில் குறிப்பிடப்படுகின்றபோது சிரேஸ்ட உதவிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் மாகாணத்திற்கு பொலிஸ் ஆணையாளராக நியமிக்கப்படல் வேண்டும் என இருக்கின்றது. இது ஏற்புடையதாக இருக்காது என்றே நான் நினைக்கின்றேன். எனவே இந்த ஆணையாளர் என்ற சொற் பதத்திற்குப் பதிலாக மாகாண உதவிப் பொலிஸ் மா அதிபர் என மாற்றப்படுதல் ஏற்புடையதாக அமையும் என நான் எண்ணுகின்றேன்.

அதே நேரம், பொது மக்கள் பாதுகாப்பு என்ற விடயத்தின் கீழான இதன்  291 (ஆ) எனும் சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அதிலே கூறப்பட்டுள்ள காரணங்களுக்காக மாகாண சபையினை கலைத்துவிட முடியும் என்கின்ற விடயத்தின்போது, ஒரு மாகாண சபை கலைக்கப்பட்டால், மீண்டும் ஒரு தேர்தலுக்குச் செல்ல வேண்டும். அதுவரையில் மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி நிர்வாகம் அங்கு இருக்காது. இத்தகைய பிரச்சினைகள் ஏற்படாமல் இருப்பதற்காக, உரிய காரணங்களுக்காக மாகாண சபையினை கலைத்துவிடலாம் என்பதற்கு பதிலாக குறித்த மாகாண சபையினை இடைநிறுத்தி வைப்பதற்கான ஏற்பாடொன்றினை அதில் குறிப்பிடலாம் என்ற யோசனையை இங்கு நான் முன்வைக்க விரும்புகின்றேன்.

Untitled-4-copy0-1

Related posts:

மக்களின் தேவைகளை நிறைவேற்று வதற்காகவே நாம் மத்திய அரசுகளுடன் இணக்க அரசியலில் ஈடுபட்டோம்: சுய நலத்து...
மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் புகழுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!
புரெவிப் புயலினால் பாதிப்படைந்த பலநாள் மீன்பிக் கலனுக்கான நஸ்டஈட்டை வழங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ...

தென்மராட்சி பிரதேச பொது அமைப்புகளுக்கான உதவித்திட்டங்களை  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கையளிப்பு...
கிளிநொச்சி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உணவுப்பொதிகள் வழங்க ஏற்பாடு – கிளிந...
பெரும்போக செய்கைக்கு முன்னதாக வயற் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வல...