இரணைமடு சட்டவிரோத மண்ணகழ்வை கட்டுப்படுத்த அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை !

Thursday, December 24th, 2020

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அணைக்கட்டுப் பகுதிகளில் நடைபெற்றுவரும் சட்டவிரோத மண்ணகழ்வைக் கட்டுப்படுத்த கடற்றொழில் அமைச்சரும் குறித்த மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான டக்ளஸ் தேவானந்தா உரிய நடவடிக்கை எடுத்துள்ளார்.

கடந்த 17ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இதுதொடர்பாக கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் த.ராஜகோபு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்குக் கவனத்துக்குக் கொண்டுவந்திருந்தார்.

இரணைமடுக்குளப் பகுதியில் நடைபெறும் மண்ணகழ்வை தடுத்து நிறுத்தாவிட்டால் மாவட்டத்தின் நிலக்கீழ் தண்ணீருக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.

இதுவிடயத்தைக் உடனடியாக கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வீரசேகரவின் கவனத்துக்குக் கொண்டுவந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மண்ணகழ்வைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்திருந்தார்.

அத்துடன் தேவையேற்பட்டால் இராணும் மற்றும் அதிரடிப்படையினரின் ஒத்துழைப்பையும் இதற்குப் பெற்றுக்கொள்ளுமாறும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதன்போது தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து நடவடிக்கையில் இறங்கிய மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், இரணைமடுக்குளப் பகுதிக்கு நேரில் சென்று நிலைமையை ஆராய்ந்து பொலிஸ் பாதுகாப்பை பலப்படுத்தியதையடுத்து, கடந்த 20ஆம் திகதி நீர்ப்பாசனத் திணைக்கள் உத்தியோகத்தர்களுடன் இணைந்து சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டபோது, மண்ணகழ்வில் ஈடுபட்ட ஒரு குழுவினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மண்ணகழ்வில் ஈடுபட்டவர்கள், அவர்களுடைய உழவு இயந்திரத்துடன் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, அவர்களுக்கு எதிராக தற்போது வழங்குத் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உடனடி நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்த நீர்ப்பாசனத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் ராஜகோபு மற்றும் இரணைமடு குளத்துக்குப் பொறுப்பான கிளிநொச்சி கிழக்கு நீர்ப்பாசனப் பணிப்பாளர் செந்தில்குமரன் ஆகியோர், பிரதிப் பொலிஸ்மா அதிபரின் இந்த நடவடிக்கை தொடருமானால், இரணைமடுக்குளப் பகுதியில் நடைபெற்றுவரும் சட்டவிரோத மண்ணகழ்வை முற்றிலுமாகக் கட்டுப்படுத்திவிட முடியும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


பிரச்சினைகளை தீரா பிரச்சினைகளாக வைத்திருப்பது எமது பொறிமுறை அல்ல – டக்ளஸ் எம்.பி நாடாளுமன்றில் சுட்ட...
அனுராதபுரம் சிறைச்சாலையில் பதற்றம்: தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது – அமைச...
அப்பாவி மக்களை நினைவு கூருவதையோ அல்லது அவர்களுக்காக கஞ்சி பருகுவதை நான் ஒரு போதும் விமர்சிக்கப் போவத...