இரணைதீவு மக்கள் விவகாரம்: ஜனாதிபதியிடம் டக்ளஸ் எம்.பி.கோரிக்கை – விரைகிறது விஷட குழு!
Thursday, May 10th, 2018ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விடுத்த வேண்டுகொளை அடுத்து இரணைதீவில் போராடும் மக்களின் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக கடற்படைத் தளபதி மற்றும் பாதுகாப்பு படை அதிகாரிகள் அரச அதிகாரிகள் உள்ளிட்ட விசேட குழுவொன்று எதிர்வரும் 15ஆம் திகதி அங்கு சென்று ஆராயவுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
1992ஆம் ஆண்டு இணைதீவிலிருந்து இடம்பெயர்ந்தவர்களுக்கு இரணைமாதா நகரில் மாற்றுக் காணிகள் வழங்கப்பட்டிருப்பதுடன் சொந்த இடத்துக்குச் சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கு எவ்வித தடையும் கிடையாது என்று அரசு முன்னர் அறிவித்திருந்தது.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இரணைதீவு மக்களின் போராட்டம் தொடர்பில் அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கேள்வி எழுப்பினார். பாதுகாப்பு அமைச்சின் சார்பில் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் கயந்த கருணாதிலக பதில் வழங்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இரணைதீவில் குடியிருந்த 190 குடும்பங்கள் 1992ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து பூநகரியின் முழங்காவில் இரணைமாதா நகர் உள்ளிட்ட கிராமங்களில் குடியமர்ந்தனர். இவ்வாறு குடியமர்ந்த குடும்பங்களின் எண்ணிக்கை தற்போது 392ஆக அதிகரித்துள்ளது இவர்களுக்கு மாற்றுக் காணிகள் வழங்கப்பட்டிருப்பதுடன் 297 வீடுகளும் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.
இவர்களின் பிரதான தொழிலாக கடற்றொழில் இருந்து வரும் நிலையில் அத்தொழிலை மேற்கொள்வதற்கு எவ்வித தடையும் இல்லை. அவர்கள் இரணைதீவுக்குச் சென்று தற்காலிகமாக தங்கியிருந்து கடற்றொழிலில் ஈடுபடுவதங்கு கடற்படையினர் அனுமதி வழங்கியுள்ளனர். தற்பொழுது தற்காலிகமாக அங்கு தங்கியிருந்து போராடி வருபவர்களின் நிலைமைகள் குறித்து ஆராய்வதற்கு கடற்படைத் தளபதி பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளடங்கிய குழவொன்று 15ஆம் திகதி இரணைதீவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. அது மாத்திரமன்றி இரணைதீவில் நிலைகொண்டுள்ள கடற்படையினர் எந்தவொரு தனியார் காணிகளையும் கையகப்படுத்தவில்லை. அவர்கள் அரசாங்க காணிகளிலேயே இருக்கின்றனர். ஆறு ஏக்கரும் 53 ஹெக்டெயருமான நிலப்பரப்பிலேயே கடற்படையினர் இருக்கின்றனர். அந்த வகையில் இரணைதீவில் உள்ள அரச காணிகள் மற்றும் தனியார் காணிகளை அளவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது, இந்தக் காணி அளவிடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு அதில் தனியார் காணிகள் இருந்தால் அவற்றை அனுமதியுடைவர்களுக்கு வழற்குவது பற்றி ஆராயப்படும் என்றும் அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
இரணைதீவிலிருந்து இடம்பெயர்ந்துள்ள குடும்பங்களையும் அப்பகுதியில் மீளக்குடியேற்றுவதற்கு சட்ட ரீதியிலான அனுமதி எப்போது வழங்கப்படும்? என்பதுடன் இப்பகுதியில்; தற்போது தங்கியுள்ள மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மருத்துவ மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுமா? என பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேற்றையதினம் கேள்வியெழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|