இரணைதீவு  மக்களை சொந்த இடத்தில் மீளக்குடியேற்ற வேண்டும் – ஜனாதிபதிக்கு டக்ளஸ் எம்.பி. கடிதம்!

Tuesday, December 26th, 2017

யுத்தகாலத்தில் பாதுகாப்புக்காரணங்களுக்காக இரணைதீவில் இருந்து 1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட மக்களை மீண்டும் அவர்களது சொந்த இடத்தில் மீளக்குடியேற்ற அனுமதியளிக்க ஆவன செய்யவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இரணைதீவு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு எழுதிய கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலின்போது சொந்த இடத்திலிருந்து இடம்பெயர்க்கப்பட்ட மக்களுக்கு அவர்களது சொந்த வாழ்விடங்களை மீண்டும் வழங்கி அவர்களை மீள்குடியேற்றம் செய்வதாக வாக்குறுதி வழங்கியிருந்தீர்கள்.

அதற்கமைவாக யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் சில ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்டிகொள்ளப்பட்டு வருவதை நாம் அறிவோம் அந்தப்பணிகள் தொடராக முன்னெடுக்கப்பட்டு வலி வடக்கில் வாழ்ந்த மக்கள் தமது சொந்த நிலத்தில் குடியேறுவதற்கு தேவையான மீள்குடியேற்ற வசதிகளை அந்த மக்களுக்கு வழங்கி ஊக்குவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

அதுபோல் 27 வருடங்களுக்கு மேலாக சொந்த இடத்திலிருந்து இடம் பெயர்க்கப்பட்டு கடலின் மறுகரையான இரணைமாதா நகரில் குடியேற்றம் செய்யப்பட்ட மக்களாக வாழ்ந்து கொண்டிருக்கு இரணைதீவு மக்களின் மீள்குடியேற்ற கோரிக்கைக்கும் உரிய நியாயம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும்.

அவர்கள் குடும்பங்களாக இரணைமாதா நகரில் தற்போது வாழ்ந்து வந்தாலும்,அவர்களது பூர்வீக நிலமான இரணைதீவிலேயே தொழில் செய்வதற்கான வசதிகளை கொண்டிருந்தவர்கள். அங்கே அட்டை வளர்ப்பு, கால் நடைகள் வளர்ப்பு, மீன்பிடியில் ஈடுபடுவது என்பனவற்றில் ஈடுபட்டு வாழ்ந்தவர்கள்.

எனவே உடனடியாக இரணைதீவில் மீள்குடியேற்றம் செய்வதற்கு தடைகள் ஏதும் இருந்தால், அங்கு தங்கியிருந்து மேற்கூறிய தொழில்களில் ஈடுபடுவதற்கு முதல்கட்டமாக அனுமதியை வழங்க வேண்டும் என அந்த மக்கள் கோரிக்கை விடுக்கின்றார்கள் இந்த மக்களின் கோரிக்கைக்கு உரிய தீர்வை பெற்றுத்தருவீர்கள் என்று நம்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.

Related posts:

முழுமையான அரசியல் பலம் எம்மிடம் இருந்திருந்தால் மக்களின் தலை விதியை குறுகிய காலத்தில் மாற்றி எழுதியி...
கொக்குவில் கிழக்கு மகமாஜி சனசமூக நிலைய நிர்வாகத்தினர் டக்ளஸ் எம்.பி.யிடம் விடுத்துள்ள கோரிக்கை!
கடல்சார் பொருளாதார அபிவிருத்திக்கு கைகோர்க்க வேண்டும் - இந்தியாவிடம் அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை!

உரிய தீர்வை பெற்றுத்தாருங்கள்: டக்ளஸ் தேவானந்தாவிடம் கல்லுடைக்கும் ஆலை உரிமையாளர் சங்க பிரதிநிதிகள் ...
நஷ்ட ஈடுகள் தொடர்பிலாக சுற்றறிக்கையில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் – நாடாளுமன்றில் செயலாளர் ந...
காட்டாறுகளை கடந்து வந்தவர்களை கால் தடங்கல்களினால் தடுக்க முடியாது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்...