இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும்! –  டக்ளஸ் தேவானந்தா

Sunday, May 29th, 2016
அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களையும் இனங்கண்டு அவர்களது இழப்புகளுக்கு ஏற்ப இழப்பீடுகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், அண்மையில் நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பல வழிகளிலும் மிகுந்த பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். தொழில் ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள், வீடுகளை, சொத்துக்களை, உடமைகளை இழந்தவர்கள், உற்பத்திகளை இழந்தவர்கள் என அனைவரும் இனங்காணப்பட்டு, அவரவரது இழப்புக்கள் தொடர்பில் முறையான மதிப்பீடுகள் செய்யப்பட்டு, அதற்கேற்ப இழப்பீடுகளை வழங்க அரசு முன்வர வேண்டும்.
அதே நேரம், பாதிக்கப்பட்டுள்ள பாதைகள், பொது இடங்கள், பொது சொத்துக்கள் என்பனவும் இனங்காணப்பட்டு, அவை உரிய முறையில் மீளமைக்கப்பட வேண்டும். அத்துடன், மேலும் மண் சரிவு அபாயங்கள் காணப்படுகின்ற பகுதிகளில் அமைந்துள்ள குடியிருப்புக்களை தகுந்த மாற்று இடங்கள் இனங்கண்டு மாற்றுவதற்கும்,  முகாம்களில் தங்கியிருக்கின்ற மக்களை கூடிய விரைவில் அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அவசியமாகும்.
இயற்கை அனர்த்தங்களை ஏற்படுத்துகின்ற கால நிலை மாற்றங்கள் தொடர்பில் உரிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுக்கக்கூடிய திட்டங்கள் வகுக்கப்பட்டு, அவை உரிய முறையில் செயற்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும். அத்துடன் இவ்வாறான இயற்கை அனர்த்தங்களில் இருந்து மக்களைக் காப்பாற்றக்கூடிய முன்னேற்பாடுகள் அனைத்தையும் முன்னெடுக்க அரசும், ஏனைய துறைசார் தரப்புகளும், சமூக ஆர்வலர்களும் முன்வர வேண்டும் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts:


வடக்கில் மக்கள் உடற் காயத்திற்கும் உளக்காயத்திற்கும் உள்ளாகியிருக்கின்றார்கள் - நாடாளுமன்றத்தில் டக்...
இளைஞர் யுவதிகளின் தொழில்துறையை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்கு முழுமையான பங்களிப்பு வழங்கப்படும் - அ...
இந்து சமுத்திரத்தில் மீன்பிடி தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் - மாலைதீவு தூதுவர் கலந்துரையாடல்!